Published:Updated:

சைதை சாதிக் பேச்சும், எழுந்த கண்டனங்களும்... திமுக நடவடிக்கை என்ன?

சைதை சாதிக் திமுக ( ட்விட்டர் )

தி.மு.க பேச்சாளர் சைதை சாதிக் பா.ஜ.க-வில் இருக்கும் பெண் நிர்வாகிகளைத் தரக்குறைவாகப் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு தி.மு.க தரப்பு என்ன சொல்கிறது?

சைதை சாதிக் பேச்சும், எழுந்த கண்டனங்களும்... திமுக நடவடிக்கை என்ன?

தி.மு.க பேச்சாளர் சைதை சாதிக் பா.ஜ.க-வில் இருக்கும் பெண் நிர்வாகிகளைத் தரக்குறைவாகப் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு தி.மு.க தரப்பு என்ன சொல்கிறது?

Published:Updated:
சைதை சாதிக் திமுக ( ட்விட்டர் )

சென்னையில் அமைச்சர் மனோ தங்கராஜ், மாவட்டச் செயலாளர் இளைய அருணா உள்ளிட்டோர் பங்கேற்ற தி.மு.க விழாவில் பேசிய அந்தக் கட்சியின் நிர்வாகி சைதை சாதிக், “ `தி.மு.க-வை அழித்துக் காட்டுவேன். 2026-ல் பாஜக ஆட்சிக்கு வருவது உறுதி’ என வாய்ச்சவடால் விட்டுக்கொண்டிருக்கும் அண்ணாமலைக்கு ஒன்று சொல்கிறேன்... அத்தைக்கு மீசை முளைத்தால்தான் சித்தப்பா... அத்தைக்கு மீசை முளைக்கபோறதும் இல்லை... பா.ஜ.க ஆட்சிக்கு வரப்போவதும் இல்லை. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலஜியின் முகத்தை நன்றாக உற்றுப் பாருங்கள்... அப்படியே ஹட்ச் டாக்போலவே இருக்கும். அமித் ஷாவைப் பார்த்திருக்கிறீர்களா... `அம்மன்’ படத்தில் நடிகை சௌந்தர்யாவைக் கொலைசெய்ய வரும் ஜண்டாவைப்போலவே இருப்பார். படத்தில் வரும் கறுப்பு ஜண்டாவும் நல்லது செய்யவில்லை, வெள்ளை ஜண்டாவான அமித் ஷாவும் மக்களுக்கு நல்லது செய்யவில்லை” என்றவர், பா.ஜ.க-விலுள்ள குஷ்பு, நமீதா, காயத்ரி ரகுராமன், கௌதமி ஆகிய நால்வர் குறித்து தகாத வார்த்தையில் பேசி விமர்சனம் செய்தார். மேலும், தொடர்ந்து நடிகை குஷ்பு குறித்து அவதூறாகப் பேசியவர், “நீங்க என்னப்பா... வம்புல மாட்டிவிட்டுருவீங்கபோல...” என கைதட்டியவர்களைப் பார்த்து நமட்டுச் சிரிப்பு சிரித்துக்கொண்டே விமர்சனம் செய்தார்.

முதல்வர் ஸ்டாலின் | திமுக
முதல்வர் ஸ்டாலின் | திமுக

`மேடையில் பேசும்போது யோசித்துப் பேசுங்கள். நம் வாயைப்பிடுங்கி வம்பில் மாட்டி விடுவதற்கு ஒரு கூட்டமே இருக்கிறது’ எனவும், `விடிந்தால் தி.மு.க நிர்வாகிகளால் என்ன பிர்சனை வந்திருக்குமோ என்ற அச்சத்தில் உறக்கமே வருவதில்லை’ எனவும் முதல்வர் ஸ்டாலின் கட்சி பொதுக்குழுவில் பேசியிருந்தார். `இனி அப்படிப் பேசினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றும் எச்சரித்திருந்தார். ஆனாலும் தி.மு.க நிர்வாகியின் இந்தப் பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்குப் பலரும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.

பா.ஜ.க சார்பில் நடிகை காயத்ரி ரகுராம் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும், பல தலைவர்களும் இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்கள். நடிகை கஸ்தூரியும் தன் பங்குக்குக் கடும் விமர்சனங்களை வைத்திருந்தார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள நடிகை குஷ்பு, “பெண்களை ஆண்கள் இழிவுபடுத்தும்போது, அவர்கள் எந்த மாதிரியான மோசமான சூழலில் வளர்ந்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. இந்த ஆண்கள்தான் தங்களைக் கலைஞரின் சீடர்கள் என்று அழைத்துக்கொள்கிறார்கள். இதுதான் முதலமைச்சர் ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியா?" எனக் கேள்வி எழுப்பியதோடு தி.மு.க-வின் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழியையும் டேக் செய்திருந்தார்.

இதற்கு ட்விட்டரிலேயே பதிலளித்த கனிமொழி, “ஒரு சக பெண்ணாகவும் மனிதராகவும் இந்தப் பேச்சுக்கு நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். இது பேசப்பட்ட இடம், பேசியவர் அங்கம் வகிக்கும் கட்சி என எதுவாக இருந்தாலும் இப்படிப் பேசியதை ஏற்றுக்கொள்ள முடியாது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், தி.மு.க-வும் இப்படியான பேச்சுகளை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” எனக் குறிப்பிட்டிருந்தார். “நீங்கள் எப்போதும் பெண்களின் மதிப்பு மற்றும் சுயமரியாதைக்காகக் குரல் கொடுத்தவர். உங்களுடைய நிலைப்பாட்டுக்கும் ஆதரவுக்கும் நன்றி” எனக் கனிமொழியின் இந்தப் பதிவுக்கு நடிகை குஷ்பு நன்றி தெரிவித்திருக்கிறார்.

கனிமொழி - குஷ்பு
கனிமொழி - குஷ்பு

இந்த நிலையில் தவறாகப் பேசிய தி.மு.க நிர்வாகி சைதை சாதிக் வெளியிட்டிருக்கும் ட்விட்டர் பதிவில், “நான் மேடையில் பேசிய பேச்சு தவறாகச் சித்திரிக்கப்பட்டு, ஜோடிக்கப்பட்டு வெளிவந்திருக்கிறது. இருப்பினும் மரியாதைக்குரிய நடிகை குஷ்பு அவர்கள் மனம் புண்பட்டிருந்தால் நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்திருக்கிறார். ஆனாலும் குஷ்பு இதற்கு முதல்வர் பேச வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருக்கிறார்.

தவறாகப் பேசியது குறித்தும், அவர்மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள் என்பது குறித்தும் தி.மு.க செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் இராஜீவ் காந்தியிடம் பேசினோம். “சைதை சாதிக் உள்நோக்கத்தோடு பேசியிருக்கிறார் என்ற செய்தி வந்ததும், தி.மு.க-வின் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி உடனடியாக மன்னிப்புக் கேட்டார். பெண்களை இழிவாகவோ, கொச்சைப்படுத்தும்விதமாகவோ பேசுவதை ஒருபோதும் தி.மு.க அனுமதிக்காது. முழுக்க முழுக்கப் பெண்களின் மேலாண்மையை மையமிட்டு தி.மு.க செயல்பட்டுவருகிறது. எனவே, பெண்களை இழிவுபடுத்தும்விதமாக யார் செயல்பட்டாலும் அதை அனுமதிக்க முடியாது. ஒரு சமூகத்தையோ, மதத்தையோ, சாதியையோ, தனிப்பட்ட நபரையோ களங்கப்படுத்தும்விதமாக உள்நோக்கத்தோடு பேசக் கூடாது என்பதுதான் எங்களுக்குத் தலைவர் சொல்லிக்கொடுத்த பாடம். அதை அனைவரும் கடைப்பிடித்துவருகிறோம். சைதை சாதிக் திட்டமிட்டுப் பேசியதில்லை. அவரிடம் உரிய விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இப்படியான பேச்சுகள் எங்கும் எழக் கூடாது என்பதுதான் எங்களின் நோக்கமும்கூட.

இராஜீவ் காந்தி - தி.மு.க செய்தித் தொடர்பு இணைச் செயலாளர்
இராஜீவ் காந்தி - தி.மு.க செய்தித் தொடர்பு இணைச் செயலாளர்

பா.ஜ.க துணைத் தலைவர் துரைசாமி குறிப்பிட்ட நடிகையை இழிவாகப் பேசியதைக் கேட்டேன். அதற்கும் அந்தக் கட்சி பொறுப்பேற்க வேண்டும். தி.மு.க-விடமிருந்து இப்படியான பேச்சுகள் வரும்போதுதான் இந்தக் கேள்வி எழுகிறது என்பது புரிகிறது. இனிமேல் கூடாது, இப்படி நடக்கக் கூடாது என்ற நடவடிக்கை உறுதியாக எடுக்கப்படும். வருங்காலங்களில் இந்தத் தவறு தடுக்கப்படும்” என்றார்.