Published:Updated:

வாரிசு அரசியல் என்ற குற்றச்சாட்டே முட்டாள்தனமானது! - வாதாடுகிறார் ஆர்.எஸ்.பாரதி

ஆர்.எஸ்.பாரதி
பிரீமியம் ஸ்டோரி
ஆர்.எஸ்.பாரதி

அமைச்சர் சேகர் பாபு பேசியதில் எந்தத் தவறும் இல்லை. ‘தி.மு.க ஒன்றும் சங்கரமடம் அல்ல’ என்று கருணாநிதியே பலமுறை சொல்லிவிட்டார். க

வாரிசு அரசியல் என்ற குற்றச்சாட்டே முட்டாள்தனமானது! - வாதாடுகிறார் ஆர்.எஸ்.பாரதி

அமைச்சர் சேகர் பாபு பேசியதில் எந்தத் தவறும் இல்லை. ‘தி.மு.க ஒன்றும் சங்கரமடம் அல்ல’ என்று கருணாநிதியே பலமுறை சொல்லிவிட்டார். க

Published:Updated:
ஆர்.எஸ்.பாரதி
பிரீமியம் ஸ்டோரி
ஆர்.எஸ்.பாரதி

தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, ‘தி.மு.க-வின் சுமைதாங்கி’ என்று தி.மு.க அமைச்சர்கள் வாழ்த்து பாடினார்கள். தி.மு.க எம்.பி-யோ நாடாளுமன்றத்திலேயே ‘வெல்க அண்ணன் உதயநிதி’ என்று உறுதிமொழி எடுத்து, விசுவாசம் காட்டியிருக்கிறார். ‘நாடாளுமன்றத் துதி’ பெரும் விமர்சனத்துக்குள்ளாகியிருக்கும் நிலையில், தி.மு.க அமைப்புச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதியிடம் பேசினோம்...

“நாடாளுமன்றத்திலேயே, ‘வெல்க தளபதி; வெல்க அண்ணன் உதயநிதி’ என்று தி.மு.க எம்.பி ராஜேஸ்குமார் உறுதிமொழி எடுத்துக்கொண்டிருப்பது அதிகப்படியாக இல்லையா?’’

“ராஜேஸ்குமார், புதிதாக நியமன எம்.பி பதவியேற்றிருக்கிறார். அவருடைய ஆர்வக்கோளாறால் அப்படிச் சொல்லிவிட்டார். அதேசமயம் கடந்தகாலங்களில், நாடாளுமன்றத்திலேயே ‘புரட்சித்தலைவி அம்மா’ என்றெல்லாம் அ.தி.மு.க-வினர் பதவியேற்றுக்கொண்ட சம்பவங்களும் இருக்கின்றன.’’

“ஆனால், சட்டமன்றத்திலேயே ‘என்னைப் புகழாதீர்கள்’ என்று மு.க.ஸ்டாலின் தி.மு.க-வினரைக் கேட்டுக்கொண்டார்தானே?’’

“ஆமாம்... அதனால்தான், ராஜேஸ்குமாரிடமே ‘இதில் எங்களுக்கு உடன்பாடில்லை’ என்பதைத் தெரிவித்துவிட்டதோடு, சபை மரபுகளையும் அவருக்கு எடுத்துச்சொல்லி, ‘இப்படியெல்லாம் செய்யக் கூடாது’ என அறிவுறுத்தியிருக்கிறோம். அவரும்கூட, தெரியாமல் சொல்லிவிட்டதாகச் சொல்லிவிட்டார்.’’

“ ‘ஒரு குடும்பத்தை வாழவைப்பதற்காகவே தி.மு.க என்ற கட்சி, தொடர்ந்து ஊழல் செய்துவருகிறது’ என்று தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை சொல்கிறாரே?’’

“என்னைப் பொறுத்தவரையில், ‘வாரிசு அரசியல்’ என்பதைக் குற்றச்சாட்டாக முன்வைப்பதே முட்டாள்தனமானது. ராஜாவின் மகன் என்ற தகுதியில், நேரடியாக இங்கே யாரும் ஆட்சிப் பொறுப்புக்கு வந்துவிடுவதில்லை. ஜனநாயக நாட்டில், மக்களின் வாக்குகளைப் பெற்றுத்தான் ஆட்சிப் பொறுப்புக்கு வருகிறார்கள். ஆக, மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. எனவே, வாரிசு அரசியல் என்றக் குற்றச்சாட்டே, ஜனநாயக நாட்டில் பொருந்தாத வாதம். எடியூரப்பாவில் ஆரம்பித்து பா.ஜ.க-வின் பல்வேறு தலைவர்களின் வாரிசுகள் அரசியல் களத்தில் இருக்கின்றார்கள்தானே? பொத்தாம் பொதுவாகத் தமிழக பா.ஜ.க இப்படியொரு குற்றச்சாட்டை சொல்லக் கூடாது.

மேலும், தி.மு.க-வில் வாரிசு அரசியல் இருந்த காரணத்தினால்தான், 1957-லிருந்து இப்போதுவரை கட்சியில் எந்தவொரு விபத்தும் நடக்காமல், ஒரே சின்னமாக உதயசூரியன் சின்னத்திலேயே நாங்கள் தொடர்ந்து போட்டியிட்டுவருகிறோம் என்பது என் தனிப்பட்ட கருத்து. இப்படியான வாரிசு அரசியல் என்பது அ.தி.மு.க-வில் இல்லாத காரணத்தினால்தான் எம்.ஜி.ஆர் இறந்தபோதும், ஜெயலலிதா இறந்துபோன பிறகும் அவர்களது கட்சியின் சின்னமே பறிபோனது.’’

வாரிசு அரசியல் என்ற குற்றச்சாட்டே முட்டாள்தனமானது! - வாதாடுகிறார் ஆர்.எஸ்.பாரதி

“அதனால்தான், ‘அடுத்த 50 வருடங்களுக்குத் தி.மு.க-வைத் தூக்கிச் சுமக்கவிருக்கும் சுமைதாங்கி உதயநிதி ஸ்டாலின்’ என்று அமைச்சர் சேகர் பாபு பேசியிருக்கிறாரா?’’

“அமைச்சர் சேகர் பாபு பேசியதில் எந்தத் தவறும் இல்லை. ‘தி.மு.க ஒன்றும் சங்கரமடம் அல்ல’ என்று கருணாநிதியே பலமுறை சொல்லிவிட்டார். கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு மு.க.ஸ்டாலின், தி.மு.க தலைவர் பதவிக்குத் தானாக வந்துவிடவில்லை. பொதுக்குழுவில் முன்வைக்கப்பட்டு, தீர்மானம் இயற்றி, முன்மொழிந்துதான் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதேபோல், உதயநிதியை தி.மு.க-வினர் தேர்ந்தெடுத்துவிட்டால், அவர்தான் நாளை தலைவராக வரப்போகிறார். அந்தவகையில்தான் சேகர் பாபுவும் தன்னுடைய விருப்பத்தைச் சொல்லியிருக்கிறார்.’’

“ `மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன், நிழல் முதல்வராகவே செயல்பட்டுவருகிறார்’ என்று அ.தி.மு.க கல்யாண சுந்தரம் சொல்கிறாரே?’’

“இது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்!’’

“நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், மு.க.ஸ்டாலினின் வீட்டிலிருந்தே சென்னை மேயர் வேட்பாளர் வரவிருக்கிறார் என்கின்றனவே செய்திகள்?’’

“இது போன்ற யூகங்களுக்கு பதில் சொல்லத் தயாராக இல்லை!’’

“பெட்ரோல் விலையைக் குறைப்போம் என்று தேர்தல் வாக்குறுதி அளித்த தி.மு.க அரசு, இப்போது மத்திய அரசுதான் வரிவிதிப்பைக் குறைக்க வேண்டும் என்று சொல்லிச் சமாளிப்பது எந்தவகையில் நியாயம்?’’

“தமிழ்நாட்டில், ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடனேயே பெட்ரோல் விலையைக் குறைத்துவிட்டது தமிழக அரசு. இதைப் பார்த்துத்தான் மத்திய அரசே இப்போது வரிக் குறைப்பு செய்திருக்கிறது. நிதி நிலைமை பற்றாக்குறையாக உள்ள இந்த நேரத்தில், மேலும் பெட்ரோல் விலையைக் குறைக்க வேண்டும் என்றால், நிதியமைச்சர் மற்றும் முதல்வர் ஆலோசித்துத்தான் உரிய முடிவை எடுக்க முடியும்.’’

“தமிழக நிதி நிலைமை மோசமாக இருக்கிறது என்பது தெரியாமலேதான், ‘பெட்ரோல் விலையைக் குறைப்போம்’ என்று தி.மு.க தேர்தல் வாக்குறுதி கொடுத்திருந்ததா?’’

“இதேபோலத்தான், 1967-ல் ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததும், ‘கஜானா காலியாக இருந்தாலும், என் மண்டை காலியாக இல்லை’ என்று சொன்னார் அண்ணா. அதுபோல, இன்றைக்குத் தமிழக அரசின் கஜானா காலியாக இருந்தாலும், நம் முதல்வரது தலை காலியாக இல்லை. திறன்வாய்ந்த மூளை அவரிடம் இருக்கிறது. ரோம் நகரம் ஒரே நாளில் கட்டப்பட்டது அல்ல. எனவே, தமிழக மக்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் படிப்படியாகச் செய்துதருவார் முதல்வர்.’’

“எதிர்க்கட்சியாக இருந்தபோது, எழுவர் விடுதலைக்காகக் குரல் கொடுத்த தி.மு.க., ஆளுங்கட்சியான பிறகு ‘நளினியின் விடுதலை கோரும் மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும்’ எனச் சொல்லியிருப்பது எந்தவகையில் நியாயம்?’’

“ராஜீவ் காந்தி கொலை வழக்கில், 28 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறைத் தண்டனை அனுபவித்துவரும் ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் நிலைப்பாடு. இது தொடர்பான அமைச்சரவையின் தீர்மானமும் ஜனாதிபதியின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது. நீதிமன்றத்திலும் இது தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்துவரும் சூழலில், தனிப்பட்ட ஒருவரை மட்டும் விடுவிக்கக் கோரி மனு செய்வது, எழுவர் விடுதலைக்கான வழக்கை பாதிக்கும். எனவேதான் நளினியின் இந்த மனுவைத் தள்ளுபடி செய்யக் கோரியுள்ளது தமிழக அரசு.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism