சமூகம்
Published:Updated:

“தமிழக அரசுக்கு நிர்வாகத்திறன் இல்லை!”

மா.சுப்பிரமணியன்
பிரீமியம் ஸ்டோரி
News
மா.சுப்பிரமணியன்

முன்னாள் சென்னை மேயர் மா.சு அதிரடி

கொரோனா யுத்தத்தில் சென்னையை மீட்பது தமிழக அரசுக்கு பெரும்சவாலாக மாறியிருக்கிறது.

சென்னை மாநகர முன்னாள் மேயரும் சைதாப்பேட்டை தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ-வுமான மா.சுப்பிரமணியன், ‘ஏன் இவற்றையெல்லாம் செய்ய வில்லை?’ என சென்னை மாநகர ஆணையருக்கு 11 கேள்விகளை முன்வைத்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அவரிடம் சில கேள்விகளைக் கேட்டோம்.

‘‘சென்னையில் பாதிப்பு அதிகரித்துவருவதற்கான காரணம் என்ன?’’

‘‘கடந்த மார்ச் 17-ம் தேதி திரையரங்குகள், வணிக வளாகங்கள், பூங்காக்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களை மூட உத்தரவிட்டது சென்னை மாநகராட்சி. ஆனால், லட்சக்கணக்கானோர் கூடும் கோயம்பேடு சந்தையை கணக்கில் எடுத்துக்கொள்ளவேயில்லை. இதுதான் பாதிப்பு அதிகரிக்கக் காரணம்.’’

‘‘நீங்கள் சொல்லும் அதே மார்ச் 17-ம் தேதியில் தி.மு.க தலைவர் ஸ்டாலின், தமிழக அரசின் செயல்பாடுகளை வரவேற்பதாக சட்டமன்றத்தில் பேசினார். தி.மு.க சார்பில் அப்போதை இதைச் சுட்டிக்காட்டி எச்சரித்திருக்கலாமே?”

மா.சுப்பிரமணியன்
மா.சுப்பிரமணியன்

‘‘வரவேற்கவெல்லாம் இல்லை. ‘சட்டமன்றம் நடத்த வேண்டாம். மக்கள் பிரதிநிதிகள் தொகுதிக்குச் சென்று வேலை செய்யட்டும்’ என்ற கோரிக்கையை தொடர்ந்து முன்வைத்துவந்தார் எங்கள் தலைவர். அப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘தமிழகத்தில் கொரோனாவே இல்லை’ என்றார். அமைச்சர் விஜயபாஸ்கர், ‘எல்லோரும் மாஸ்க் போடவேண்டியதில்லை’ என்றார். கோயம்பேடு விவகாரத்தையும் அவர்கள் சாதாரணமாக எடுத்துக்கொண்டார்கள். நாங்கள் சொல்வது இருக்கட்டும், சில நாள்களுக்கு முன்பாக அதிகாரிகளுடன் நடந்த கூட்டத்தில், ‘பத்து நாள்கள் கடைகளை அடைத்துப் போடுகிறோம். மருந்து தெளியுங்கள்’ என வியாபாரிகளே கோரிக்கை வைத்திருக்கிறார்கள். ஆனால், ‘நாங்கள் சொல்வதை மட்டும் செய்யுங்கள்’ என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். நிர்வாகரீதியாக மாநகராட்சியில் குளறுபடிகள் இருப்பதே இதற்கெல்லாம் காரணம்.’’

‘‘என்ன மாதிரியான குளறுபடிகள்?’’

‘‘மாநகராட்சிகளில் மாவட்ட ஆட்சியரைவிட மாநகராட்சி ஆணையாளருக்குத்தான் அதிகாரம் அதிகம். ஆனால், சென்னை மாநகராட்சி ஆணையாளரின் கட்டுப்பாட்டில் அதிகாரிகள் இல்லை. உதாரணமாக, சென்னை மாநகர காவல்துறை ஆணையாளர், டி.ஜி.பி அந்தஸ்தில் இருப்பவர். அவர் எப்படி மாநகராட்சி ஆணையாளரின் பேச்சுக்குக் கட்டுப்படுவார்? பிரின்ஸிபல் செகரெட்டரி அந்தஸ்தில் இருக்கும் ஒருவர் மாநகராட்சி ஆணையாளராக இருந்தால்தான், அனைவரும் அவரது ஆணைக்குக் கட்டுப்படுவார்கள். இப்படி அமையாமல்போனது சென்னையின் துரதிர்ஷ்டம். ராதாகிருஷ்ணன் போன்ற அதிகாரிகளை இப்போது நியமிக்கிறார்கள். கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வதைப் போல.’’

‘‘சென்னையில் மக்கள்தொகை அதிகமாக இருப்பதே, நோய்த்தொற்று அதிகரித்திருப்பதற்குக் காரணம் என முதல்வர் சொல்கிறாரே?’’

மா.சுப்பிரமணியன்
மா.சுப்பிரமணியன்

‘‘புனேவில் ஒருவர்தான் மரணமடைந்திருக்கிறார். இரண்டு இலக்கத்தில்தான் பாதிப்பு. திருவனந்த புரத்தில், கொச்சினில், புவனேஷ்வரில் எல்லாம் மக்கள்தொகை அதிகமாக இல்லையா? எவ்வளவு பேர் என்பதைவிட எப்படிக் கட்டுப்படுத்துகிறோம் என்பதில்தான் நிர்வாகத்திறன் இருக்கிறது. இந்த அரசுக்கு நிர்வாகத்திறன் இல்லை. அதில், தமிழக சுகாதாரத் துறை கோட்டைவிட்டுவிட்டது என்பதே உண்மை.’’

‘‘சென்னையை மீட்க உடனடியாக செய்ய வேண்டியது என்ன?’’

‘‘எழும்பூர், திரு.வி.க நகர், ராயபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் உள்ள வார்டுகளில்தான் பாதிப்புகள் மிக அதிகம். இந்தத் தொகுதிகளில், 30 டிவிஷன்கள் வருகின்றன. இதில் ஒவ்வொரு டிவிஷனுக்கும் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியை நியமிக்க வேண்டும். தண்ணீர், உணவு உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக் காகவே மக்கள் பொது இடங்களில் கூடுகிறார்கள். ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் களத்தில் இருந்தால், அவர்களின் அதிகாரத்தால் இதுபோன்ற விஷயங்களுக்கு எளிதில் தீர்வு காண இயலும்.’’

“98 சதவிகிதம் பேருக்கு கொரோனா அறிகுறிகள் இல்லாமல் தொற்று ஏற்பட்டுள்ளதாகக் கூறும் சென்னை மாநகராட்சி கமிஷனர், அவர்களை வீடுகளிலேயே தனிமைப்படுத்தியிருப்பதாகக் கூறியிருக்கிறாரே?”

“வீட்டில் அவர்களுக்கு மருத்துவ உதவிகள் செய்வது யார்? அவர்களை தனிமைப்படுத்திப் பாதுகாக்க வேண்டியதும் அரசின் கடமைதான்.”

“அனைத்து பள்ளிகள், திருமண மண்டபங்களை அரசு கேட்டிருக்கிறது. அதேசமயம் கட்சிகள் உட்பட சில தரப்புகளும் அரசுக்கு இடம் தருவதாகச் சொல்லியிருக்கின்றனவே?”

“தன்னார்வலர்கள் பலரும் தங்களின் இடங்களைப் பயன்படுத்திக்கொள்ளும்படி கடிதம் கொடுத்துள்ளார்கள். ஆனால், இந்த அரசு கண்டுகொள்ளவில்லை. இந்த நெருக்கடியான நேரத்திலும் அரசியல் செய்யாமல், ஆட்சியாளர்கள் தங்களின் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும். அதேசமயம், மாநகராட்சி மட்டுமே அனைத்தையும் செய்துவிடலாம் என நினைக்கக் கூடாது. ரோட்டரி போன்ற தன்னார்வல அமைப்புகளுடன் கூட்டங்கள் நடத்தி, அனைவரும் பகிர்ந்து செயல்பட வேண்டும். இப்போதாவது அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட முதல்வர் முன்வர வேண்டும்.’’