தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.

அந்தத் தீர்மானத்தில், `` தமிழ் நிலத்தில், சமூகநீதியும் மதநல்லிணக்கமும் செழித்துச் சிறந்திருப்பதைப் பார்த்துப் பொறுத்துக்கொள்ள இயலாமல், மதவாத நச்சு விதைகளைத் தூவிட எத்தனிக்கும், தேச விரோத சக்திகளிடமிருந்து தமிழகத்தைக் காப்போம். தாய்த் தமிழ்நாட்டை எந்தவித சேதாரமும் இன்றி, பாதுகாத்திடும் புதிய பட்டாளத்து சிப்பாய்களின் அணிவகுப்பை உருவாக்கிடும் வகையில், ‘திராவிட மாடல் பயிற்சிப் பாசறை’க் கூட்டங்களை வெற்றிகரமாகவும் தொடர்ச்சியாகவும் நடத்த வேண்டும்.
தேச விரோதிகளுக்குத் துணைபோகும் அடிமைகள், விலைபோகும் வீணர்களை அடையாளம் காட்ட வேண்டும். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாட வேண்டும் '' என இந்தக் கூட்டத்தில் ஒருமனதாகத் தீர்மானம் செய்து ஏற்கப்பட்டது.
