Published:Updated:

`தம்பியின் ஆணைக்குக் கட்டுப்பட்டு நடக்கிறேன்!' - வேட்புமனுவைத் தயார் செய்த துரைமுருகன்

துரைமுருகன்
துரைமுருகன்

துரைமுருகன் ஏலகிரி மலையிலுள்ள தன் இல்லதில் ஓய்வில் இருந்தார். பொதுச்செயலாளர் பதவி வழங்கப்படாத வருத்தம் அவரிடம் இருந்ததாலேயே சென்னை பக்கம் வரவில்லை என்று கூறப்பட்டது.

``தி.மு.க-வின் மூன்றாவது பொதுச்செயலாளர் என்கிற பதவிக்கு நாளை வேட்புமனு தாக்கல் செய்யவிருக்கிறார் துரைமுருகன். அதேபோல் பொருளாளர் பதவிக்கு முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவும் வேட்புமனு தாக்கல் செய்யவிருக்கிறார்.

துரைமுருகன், ஸ்டாலின்
துரைமுருகன், ஸ்டாலின்

தி.மு.க-வின் பொதுக்குழுக் கூட்டம் வரும் 9-ம் தேதி நடக்கிறது. அதற்கு முன்பாக நாளை (3-9-20) காலை தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் காணொலி வாயிலாக நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் காலியாக உள்ள பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிக்கான வேட்பாளர்கள் ஒப்புதல் பெற இருக்கிறார்கள்.

பொதுச்செயலாளர் பதவிக்கு ஏற்கெனவே துரைமுருகன் பெயர் பரிசீலனை செய்யப்பட்டது. அதேபோல பொருளாளர் பதவிக்கு ஒன்றுபட்ட சென்னை மாவட்டத்தின் மாவட்டச் செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பாலுவின் பெயர் முடிவு செய்யப்பட்டது. பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகனைத் தவிர யாரும் போட்டியிட வாய்ப்பில்லை. ஆனால், பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலுவுக்கு வழங்கலாம் எனக் கட்சித் தலைமை முடிவு செய்திருந்தாலும், கடைசி நேரத்தில் ஏ.வ.வேலு, ஆ.ராசா உள்ளிட்டவர்கள் அந்தப் பதவிக்குக் குறிவைத்தனர். இது ஸ்டாலின் காதுக்கு ஏற்கெனவே எட்டியிருந்தது. இதைச் சரிகட்ட ஸ்டாலின் வீட்டில் நீண்ட ஆலோசனையும் நடந்துள்ளது. துரைமுருகன் மூலம் ஏ.வ.வேலு மற்றும் ஆ.ராசா ஆகியோரை சமாதானம் செய்திருக்கிறார் ஸ்டாலின். இந்தச் சமாதானப்படலம் முடிந்த பிறகு நேற்று காலை அண்ணா அறிவாலயத்தில் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனையும் நடந்தது. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசப்பட வேண்டிய விஷயங்கள், மினிட் எப்படித் தயார் செய்வது உள்ளிட்டவை விவாதிக்கப்பட்டன. இதன் பிறகு அங்கிருந்தே அனைத்து மாவட்டச் செயலாளர்களுக்கும் சில உத்தரவுகள் சென்றுள்ளன.

ஸ்டாலின் -துரைமுருகன் - டி.ஆர்.பாலு
ஸ்டாலின் -துரைமுருகன் - டி.ஆர்.பாலு

பொதுக்குழுவில் கலந்துகொள்ளும் நபர்களில் யார் யாரைப் பேச அனுமதிக்கலாம் என்கிற பட்டியலும் தயார் செய்யப்பட்டுவருகிறது. இந்தநிலையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் வியாழன் அன்று காலை பொதுச்செயலாளர் பதவிக்குப் போட்டியிடவிருக்கும் துரைமுருகனும், பொருளாளர் பதவிக்குப் போட்டியிடவிருக்கும் டி.ஆர்.பாலுவும் வேட்புமனுவைத் தாக்கல் செய்ய உள்ளனர். இவர்கள் இருவர் மட்டுமே இந்தப் பதவிகளுக்கு போட்டியிட வாய்ப்பு இருப்பதால் இவர்கள் இருவருமே ஒருமனதாக வரும் 9-ம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழுவில் முறைப்படி தேர்வு செய்யப்படவிருக்கிறார்கள் என்கிறார்கள்.

`அசராத' ஸ்டாலின், அசரடிக்கும் எடப்பாடி, 'கிட்னாப்' முருகன்... - தலைவர்கள் ரெடி!

கடந்த நான்கு மாதங்களாக துரைமுருகன் ஏலகிரி மலையிலுள்ள தனது இல்லதில் ஓய்வில் இருந்தார். பொதுச்செயலாளர் பதவி வழங்கப்படாத வருத்தம் அவரிடம் இருந்ததாலேயே சென்னைப் பக்கம் வரவில்லை என்று கூறப்பட்டது. இந்தநிலையில் இரண்டு நாள்களுக்கு முன்பாக ஸ்டாலினே நேரடியாக துரைமுருகனைத் தொடர்புகொண்டு ``பொதுக்குழுவைக் கூட்ட வேண்டியிருப்பதால் சென்னை வந்துவிடுங்கள்’’ என்று அழைப்பு கொடுத்தார்.

துரைமுருகன்
துரைமுருகன்

அதன் தொடர்ச்சியாக, கடந்த திங்கள் அன்றே சென்னை வந்து சேர்ந்தார் துரைமுருகன். பொதுச்செயலாளர் தேர்வு பொதுக்குழுவில் நடைபெறும் என்கிற அறிவிப்பு வந்த பிறகு பலரும் துரைமுருகனைத் தொடர்புகொண்டு வாழ்த்துகளைச் சொல்லியிருக்கிறார்கள். அப்போது அவர்களிடம் தனக்கே உரிய பாணியில் ``நான் ஸ்டாலின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போதே 'தம்பி வா... தலைமையேற்க வா... உன் ஆணைக்குக் கட்டுப்பட்டு நடக்கிறேன்' என்று சொன்னதை இனியும் தொடர்ந்து செய்ய வேண்டியதுதான்” என்று பஞ்ச் வைத்து சொல்லியிருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு