
பா.ஜ.க-வுக்குத் தாவிய திருச்சி சிவா மகன் சூர்யா பரபர!
தி.மு.க அரசு ஓராண்டை நிறைவு செய்து அதன் சாதனைகளை விளக்கிப் பேசிக்கொண்டிருக்கும் வேளையில் தி.மு.க-வின் கொள்கைப் பரப்புச் செயலாளர் திருச்சி சிவாவின் மகன் சூர்யா பா.ஜ.க-வில் இணைந்த செய்தி பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது. இந்தச் சூழலில் அவருடன் ஒரு பேட்டி...
“பாரம்பர்ய தி.மு.க குடும்பத்தைச் சேர்ந்த நீங்கள், அதற்கு நேரெதிராக இருக்கும் பா.ஜ.க-வில் சேர்ந்ததற்கான காரணம் என்ன?”
“15 ஆண்டுகளாக தி.மு.க-வில் இருந்திருக்கிறேன். கடினமாக உழைத்திருக்கிறேன். ஆனால், அதற்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை. ஆனால், மாற்றுக் கட்சியிலிருந்து வந்தவர்களுக்கெல்லாம் உடனடியாக அங்கீகாரம் தரப்படுகிறது. வாரிசு அரசியலாகப் பார்க்கப்படும் என்பதாலும், கனிமொழியின் ஆதரவாளர் என்பதாலும் எனக்குப் பதவி கொடுப்பதில் சிக்கல் இருப்பதாகச் சொல்வார்கள். இதையெல்லாம் கேட்டுக் கேட்டு வெறுத்துப் போய்த்தான் பா.ஜ.க-வில் இணைந்திருக்கிறேன்.”
“இதைப் புரிந்துகொள்ள உங்களுக்கு 15 ஆண்டுகள் ஆகிவிட்டனவா?”
“தி.மு.க-வின் அதிகார மையம் உதயநிதி, சபரீசன், கனிமொழி என்ற முக்கோணத்துக்குள் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கிறது. இதனால் கட்சிக்காரர்கள் மட்டுமல்ல, அதிகாரிகளும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். கனிமொழி ஓரணி, சபரீசன் ஓரணி, இவர்களை எதிர்த்து அன்பில் மகேஸ் போன்றவர்களை வைத்துக்கொண்டு உதயநிதி ஓரணியை உருவாக்கி அரசியல் செய்துகொண்டிருக்கிறார். இப்படிக் கட்சி முழுவதும் குடும்ப அரசியலுக்குள் மாட்டிக்கொண்டு திக்குமுக்காடுகிறது.
இவற்றையெல்லாம் ஸ்டாலினால் சமாளிக்க முடியவில்லை. கட்சியில் இருப்பவர்களெல்லாம் கடுமையான அதிருப்தியில் இருக்கிறார்கள். ஒரு கட்சியின் தோல்வி பொதுமக்களால் அல்ல... கட்சிக்காரர்களிடம் எழும் அதிருப்தியாலும் தீர்மானிக்கப்படும். தே.மு.தி.க அழிவுக்கும், அ.தி.மு.க தோல்விக்கும் கட்சிக்காரர்களின் அதிருப்தி ஒரு முக்கியக் காரணம். விரைவில் தி.மு.க-வும் மிகப்பெரிய தோல்வியைச் சந்திக்கும்.
தி.மு.க-வினர் சொல்வது ஒன்றாகவும், செய்வது ஒன்றாகவும் இருக்கிறது. பொள்ளாச்சி பாலியல் சம்பவத்துக்கு எவ்வளவு குதித்தார்கள்... ஆனால், தங்கள் கட்சியினர் மீதான பாலியல் புகார்களுக்கு இதுவரை என்ன நடவடிக்கை எடுத்தார்கள்... திருச்சி சிவா, பெரிய கருப்பன் உள்ளிட்டவர்கள்மீதே பாலியல் புகார்கள் ஆதாரத்தோடு வெளியானதே... அதன் பிறகும் பதவி கொடுத்து அழகு பார்க்கிறார்கள்.’’

“பா.ஜ.க-விலும் கோஷ்டிப்பூசல்கள் இருக்கின்றன... பலர்மீது பாலியல் புகார்களும் இருக்கின்றனவே?”
“இல்லையென்று சொல்லவில்லை. ஆனால், பா.ஜ.க-வில் பாலியல் புகாருக்கு உள்ளானவரைக் கட்சியின் முக்கியப் பொறுப்புகளிலிருந்து நீக்கியிருக்கிறார்கள். எந்த அதிகாரமும் இல்லாமல் டம்மியாக்கிவைத்திருக்கிறார்கள். கட்சியில் செயல்படாதவர்களை நீக்கி, உழைப்பவர்களுக்குப் பொறுப்பு கொடுக்கிறார்கள். அரசியல்வாதிகள் கொஞ்சம் பொறுமையாகச் செயல்படுவார்கள். ஆனால், அண்ணாமலை அதிகாரியாக இருந்தவர் என்பதால் அதிரடியாக நடவடிக்கை எடுக்கிறார். அதற்குப் பலனும் கிடைத்திருக்கிறது.”
“தி.மு.க-வுக்காக உழைத்தும் உரிய அங்கீகாரம் கிடைக்காததற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?”
“உண்மையில் அமைச்சர் கே.என்.நேருவுக்கும், என் அப்பாவுக்கும் இருந்த சண்டையால் கட்சியில் எந்தப் பொறுப்பையும் என்னால் வாங்க முடியவில்லை. நான் கிறித்தவ மதத்தில் திருமணம் செய்ததால் என்னுடன் பேசுவதையே என் அப்பா நிறுத்திவிட்டார். திராவிடமும் மதச்சார்பின்மையும் பேசும் என் அப்பாவால், நான் மதம் மாறித் திருமணம் செய்துகொண்டதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இப்படி இரட்டை வேடம் போடுபவர்கள் இருக்கும் இடத்தில் என்னால் தொடர முடியாது.”
“யார் மூலமாக பா.ஜ.க-வில் இணைந்தீர்கள்?”
“கடந்த சில நாள்களாக சமூக வலைதளங்களில் நான் பா.ஜ.க-வில் இணையப்போவதாக செய்திகள் வெளியாகின. இதை கவனித்து பா.ஜ.க தரப்பிலிருந்து என்னை அழைத்துப் பேசினார்கள். அதை ஏற்று மே 8-ம் தேதி மாநிலத் தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பா.ஜ.க-வில் இணைந்தேன். மிகவும் மரியாதையாக நடத்தினார்கள். இந்த மரியாதை கடைசி வரை நிலைக்கும் என்று உத்தரவாதமும் கொடுத்தனர்.”
“பொறுப்பு ஏதாவது கேட்டீர்களா, தருவதாகச் சொல்லியிருக்கிறார்களா?”
“நான் எந்தப் பொறுப்பையும் எதிர்பார்த்து பா.ஜ.க-வில் இணையவில்லை. ஆனால், நிச்சயம் எனக்கான அங்கீகாரம் கிடைக்கும் என நம்புகிறேன். அப்படி அங்கீகாரம் கிடைக்கும்போது நிச்சயம் அழைத்துச் சொல்கிறேன்.”
“உங்கள்மீது அனைவரின் கவனமும் திரும்ப வேண்டும் என்பதற்காக, வம்படியாக பா.ஜ.க-வில் சேர்ந்திருப்பதாகச் சொல்கிறார்களே?”
“இப்போது நான் கவனம் பெற வேண்டும் என ஏன் நினைக்க வேண்டும்... திருச்சி சிவாவின் மகன் என்ற அடையாளத்தையே அழித்து விட்டேன். நான் பா.ஜ.க-வுக்குச் செல்கிறேன் என்றதும், தி.மு.க முன்னாள் வனத்துறை அமைச்சர் திருச்சி செல்வராஜின் பையன் கருணைராஜா, `என்னையும் அழைத்துச் செல்லுங்கள்’ என்றார். `முதலில் நான் செல்கிறேன். பிறகு உன்னை அழைத்துச் செல்கிறேன்’ என்று சொன்னேன். தி.மு.க-விலிருந்து பா.ஜ.க-வில் இணைபவர்களின் எண்ணிக்கை இனி அதிகரிக்கும்.”
“முக்கியப் பொறுப்புகள் கிடைக்காததால், சிலர்் மீண்டும் தி.மு.க-வுக்கே திரும்பியதை கவனித்தீர்களா?”
“வி.பி.துரைசாமி, கு.க.செல்வம் போன்றவர்கள் பா.ஜ.க-வில் தங்களை இணைத்துக்கொண்டதும் அவர்களுக்கு மாநிலத் துணைத் தலைவர் என்ற முக்கியப் பொறுப்பு கொடுத்து அங்கீகரித்தார்கள். அதை வைத்துக்கொண்டு, உழைத்து அடுத்தடுத்த இடத்துக்குச் சென்றிருக்க வேண்டும். அப்படி உழைக்காதவர்களைத்தான் பா.ஜ.க விரட்டியது. தி.மு.க மாதிரி வீட்டு வேலைகளைப் பார்த்துக்கொண்டு, பணம் வசூல் செய்து கொடுத்துக்கொண்டிருப்பவர்களெல்லாம் பா.ஜ.க-வில் நீடிக்க முடியாது.’’
“தமிழ்நாட்டின் அரசியல் அடுத்து எப்படி இருக்கும்?”
“தமிழ்நாட்டில் இனிமேல் பா.ஜ.க-தான் நிற்கும். தி.மு.க-வின் அரசியல் வரலாறு கூடிய விரைவில் அஸ்தமனமாகும்!”