
கலைஞரின் மறுவடிவம்தான் உதயநிதி. அவர் எதிர்காலத்தில் தி.மு.க-வின் தலைவராகவும், முதலமைச்சராகவும் வருவார்
உதயநிதி எம்.எம்.ஏ-வாகும் முன்பே அவர் புகழ் பாடிய தி.மு.க நிர்வாகிகளின் வாய், அவர் அமைச்சரானால் சும்மா இருக்குமா... யார் அவரை அதிகமாகப் புகழ்ந்து, ‘கூவல் திலகம் டைட்டிலை வெல்வது?’ என்பதில் மூத்த தலைவர்கள், அமைச்சர்களுக்கு இடையே கடும் போட்டியே நிலவிவருகிறது. அந்தக் கூவல்களின் தொகுப்பு இங்கே...

``உதயநிதி மட்டுமல்ல... அவருடைய மகன் வந்தாலும் வாழ்க என்று கோஷம் போடுவோம். பேரரசர் தளபதி (ஸ்டாலின்)... சிற்றரசர் உதயநிதி!’’ - கே.என்.நேரு, நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர்
``இன்பன் ஐயாவையும் முதலமைச்சராக்கிட்டு சாகணும்னு எனக்கொரு ஆசை. உதயநிதியோட மகன்... எங்க தளபதி மு.க.ஸ்டாலினோட பேரன்... இன்பநிதியும் முதலமைச்சர் ஆவார்!’’ - வி.பி.ராஜன், முன்னாள் எம்.எல்.ஏ
``உதயநிதிக்கு ஒன்றரை வருடங்களுக்கு முன்பே அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருக்க வேண்டும். அவர் துணை முதலமைச்சராவதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்!’’ - பொன்முடி, உயர்கல்வித்துறை அமைச்சர்

``உதயா அமர்ந்தால் பொதுக்கூட்டம்... நடந்தால் ஊர்வலம்... அண்ணா, கலைஞர், பேராசிரியருக்கு அடுத்ததாக அதிக கூட்டம் கூடக்கூடிய ஒரு நபர் இளைய தளபதி உதயநிதி ஸ்டாலின்!’’ - நாசர், பால்வளத்துறை அமைச்சர்
``கலைஞரின் மறுவடிவம்தான் உதயநிதி. அவர் எதிர்காலத்தில் தி.மு.க-வின் தலைவராகவும், முதலமைச்சராகவும் வருவார்!’’ - மெய்யநாதன், சுற்றுச்சூழல்துறை அமைச்சர்
``சிறப்புத் திட்ட அமலாக்கத்துறை அமைச்சராகவும் இருப்பதால் துணை முதலமைச்சருக்கு நிகரான பொறுப்பைக் கையாண்டுகொண்டிருக்கிறார் உதயநிதி!’’ - அன்பில் மகேஸ், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
``அமைச்சராக உதயநிதி 100 சதவிகிதம் தேர்ச்சியடைந்துவிட்டார்!’’ - சேகர் பாபு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்
``எம்.ஜி.ஆருக்கும், கலைஞருக்கும் கூடிய கூட்டத்தைப்போல... தளபதிக்குக் கூடிய கூட்டத்தைப்போல... உதயநிதிக்குக் கூட்டம் கூடுவதைப் பார்த்தேன்!’’ - ஆர்.எஸ்.பாரதி, தி.மு.க அமைப்புச் செயலாளர்