Published:Updated:

நூறு நாள்களில் நாங்கள் பெரிதாக எந்தச் சாதனையும் செய்யவில்லை!

துரைமுருகன்
பிரீமியம் ஸ்டோரி
துரைமுருகன்

பொன்விழா தலைவர் துரைமுருகன் தன்னடக்கம்...

நூறு நாள்களில் நாங்கள் பெரிதாக எந்தச் சாதனையும் செய்யவில்லை!

பொன்விழா தலைவர் துரைமுருகன் தன்னடக்கம்...

Published:Updated:
துரைமுருகன்
பிரீமியம் ஸ்டோரி
துரைமுருகன்

“நீர்வளங்கள்கூட வற்றலாம். ஆனால், ஐம்பதாண்டுகளாக வற்றாத ஆளுமை துரைமுருகன்”, “மனிதனுக்கு சுவாசம் நின்று போகலாம். விசுவாசம் நின்று போகக் கூடாது. அந்த விசுவாசத்துக்கு எடுத்துக்காட்டாக இருப்பவர் துரைமுருகன்.” - சமீபத்தில் சட்டப் பேரவையில் பொன்விழா கண்ட துரைமுருகனுக்கு சர்வ கட்சியினரும் இப்படிப் பாராட்டு பத்திரம் வாசித்தனர். இப்படிப் பொன்விழா கண்ட துரைமுருகனை ஒரு மாலை நேரத்தில் அவரது அரசு இல்லத்தில்வைத்து சந்தித்தோம். ஐம்பதாண்டுகளை அசைபோட்டது அவரது உரையாடல்...

நூறு நாள்களில் நாங்கள் பெரிதாக எந்தச் சாதனையும் செய்யவில்லை!

“ஐம்பது ஆண்டுக்கால சட்டமன்றப் பயணத்தை நிறைவு செய்திருக்கிறீர்கள்... எப்படி இருக்கிறது இந்த நெடும் பயணம்?”

“நிறைவாக உணர்கிறேன்... ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்த சட்டமன்றச் சூழ்நிலை வேறு... இப்போதுள்ள சூழ்நிலை வேறு. தலைவர்களிடம் இருந்த இணக்கம் இப்போது குறைந்துவிட்டது. 1971-ம் ஆண்டு, நான் சட்டமன்ற உறுப்பினராகும் முன்பே சட்டமன்றத்தின் நிகழ்வுகளை நேரடியாகப் பலமுறை பார்த்துள்ளேன். கொள்கையில் மாறுபட்டிருந்தாலும், ஒருவரை ஒருவர் நேசத்தோடு அப்போது நடத்துவார்கள். ஒருமுறை கலைஞர், அவரது சொந்த ஊரான திருக்குவளையில் தனது கைக்காசைப் போட்டு தாய்சேய் நல விடுதி ஒன்றைக் கட்டியிருந்்தார். அதை அன்றைய முதல்வர் பக்தவத்சலம் திறந்துவைக்க வேண்டும் என்று கலைஞர் கேட்டதும், அவரும் வருகிறேன் என்று சொல்லிட்டார். ஆனால், காங்கிரஸ் கட்சிக்குள் பெரும் சர்ச்சையே வெடித்தது. ‘என்னை மதித்து அழைத்தவருக்கு நான் மரியாதை செய்ய வேண்டும்’ என்று தனது சகாக்களிடம் பதிலளித்தார் பக்தவத்சலம். எம்.ஜி.ஆர் ஆட்சியில்கூட இந்தப் பண்பாடுகள் தொடர்ந்தன. ஆனால், ஜெயலலிதாவின் வருகைக்குப் பிறகுதான் இந்தப் பண்பாடுகள் தலைகீழாக மாறின. காலில் விழுவது, கையில் விழுவதெல்லாம் சட்டமன்றத்தில் நடக்க ஆரம்பித்தது. ஆனால், இப்போது பரவாயில்லை. மெல்ல மெல்ல நிலைமை மாறியிருக்கிறது... அ.தி.மு.க உறுப்பினர்கள் எங்களுடன் சகஜமாகப் பேச ஆரம்பித்துள்ளார்கள்.”

நூறு நாள்களில் நாங்கள் பெரிதாக எந்தச் சாதனையும் செய்யவில்லை!

“சில நாள்களுக்கு முன்பு முதல்வர் ஸ்டாலின் தன்னைப் புகழக் கூடாது என்று சட்டமன்றத்தில் கண்டிப்புடன் கூறினார். பொதுவாக, சட்டமன்றத்தில் தலைவர்களுக்குப் புகழுரை வாசிப்பதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“உண்மையில் எம்.ஜி.ஆர் பெரியவர். எல்லாப் புகழுக்கும் உரியவர். ஆனால், அவருக்குக்கூட பெரிய புகழாரங்கள் கிடைத்ததில்லை. அந்த அம்மா வந்த பிறகுதான் ‘மாரியாத்தா, காளியாத்தா’ என்று ஆரம்பித்து விதவிதமாகப் புகழாரம் சூட்டினார்கள். அதனால்தான், எங்கள் தலைவர் ஸ்டாலின், ‘சட்டமன்றத்தில் யாரும் என்னைப் புகழ வேண்டாம்’ என்று கண்டிப்புடன் கூறியுள்ளார். முதல்வர் காபி குடிக்கும் கேப்பில்கூட அவரைப் புகழ ஆரம்பித்துவிடுகிறார்கள். இதெல்லாம் அ.தி.மு.க-விலிருந்து தொற்றிக் கொண்ட பழக்கம். இது போன்ற புகழுரைகளைக் குறைத்துக்கொள்வது அனைவருக்குமே நல்லது. புகழ்கின்ற நேரத்தில் ஏதாவது ஆக்கபூர்வமாகப் பேசியிருக்கலாம். அதனால்தான் தலைவர் கலைஞர், புகழுரை வாசிப்பவர்களைப் பார்த்து, ‘இதெல்லாம் காக்கா பிடிக்குற விஷயம்யா’ என்று சொல்வார். ஒருபோதும் புகழுரையை அவர் விரும்ப மாட்டார்; சொல்லப்போனால் அதைக் கண்டிப்பார்!”

நூறு நாள்களில் நாங்கள் பெரிதாக எந்தச் சாதனையும் செய்யவில்லை!

“சட்டமன்றத்துக்குப் புதிதாக வரும் உறுப்பினர்கள், எதைக் கற்றுக்கொள்ள வேண்டும்?”

“முதலில் சட்டமன்றத்துக்கான விதிமுறைகளை அவர்கள் படிக்க வேண்டும். தீர்மானம், வெட்டுத் தீர்மானம், மசோதா என்றால் என்ன, எதிர்க்கட்சியினரிடமிருந்து மசோதாவுக்கு எப்படியெல்லாம் கேள்விகள் வரும் என்பதையெல்லாம் தெரிந்துவைத்துக்கொள்ள வேண்டும். சட்டமன்றத்துக்கு வரும் முன்பே மசோதாவை வாங்கிப் படித்து, அது குறித்த தகவல்களைச் சட்டமன்ற நூலகத்தில் தேடிப் படிக்க வேண்டும். இப்போதுள்ள உறுப்பினர்கள் யாரும் படிப்பதே இல்லை. உறுப்பினர்கள் சட்டமன்ற நூலகத்துக்குச் செல்வதே அரிதாக உள்ளது. சப்ஜெக்ட் தெரிந்தால் மட்டுமே, கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியும்; நாம் எதிர்க்கேள்வியை எழுப்ப முடியும்.

முதலில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு, சபையில் எப்படி உட்காருவது என்பதையே சொல்லிக் கொடுக்கவேண்டியிருக்கிறது. ஒரு விஷயம் சொல்கிறேன்... சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் கையில் பேப்பரை வைத்துக்கொண்டு படிப்பது இப்போது வாடிக்கையாகிவிட்டது. ஆனால், சட்டமன்ற விதிகளின்படி உறுப்பினர்கள் படிக்கக் கூடாது; பேச மட்டுமே செய்ய வேண்டும். சபாநாயகர் கண்டிப்பான பேர்வழியாக இருந்தால், பேப்பரைப் பார்த்து உறுப்பினர்கள் வாசிப்பதை ஏற்றுக்கொள்ள மாட்டார். அப்படி ஒரு காலத்தில் சட்டமன்றமும் நடந்தது!”

நூறு நாள்களில் நாங்கள் பெரிதாக எந்தச் சாதனையும் செய்யவில்லை!

“பேப்பர் இல்லா பட்ஜெட் என்று சட்டமன்றமே கணினி மையமாக மாற்றப்பட்டுள்ளதே?”

“எனக்கு செல்போனிலேயே வாட்ஸ்அப் பார்க்கத் தெரியாது. நான் முதல் நாளில் சட்டமன்றத்தில் அதைப் பார்த்தபோது நிதியமைச்சர் பேசிக்கொண்டிருந்தது திரையில் ஓடியது. நானும் அமுக்கி அமுக்கிப் பார்த்தேன்... ஒன்றும் புரியவில்லை. உதவியாளர்கள் சில விஷயங்களைச் சொல்லிக்கொடுத்தார்கள். அதில் கேம்ஸ்கூட விளையாட முடியாதாம் (சிரிக்கிறார்). ஆனால், போக போகப் பழகிவிடும்.”

“சட்டமன்றத்தில் முதல்வராக கருணாநிதியையும் பார்த்திருக்கிறீர்கள், இப்போது ஸ்டாலினையும் பார்க்கிறீர்கள்... உங்கள் பார்வையில் இருவருக்குமான ஒப்பீடு என்ன?”

“தலைவர் கருணாநிதி சபைக்கு வரும் முன்பே பரபரப்பாக அதற்கான தயாரிப்புகளைச் செய்துவிடுவார். அதே போன்றதொரு பரபரப்பை இப்போது ஸ்டாலினிடமும் பார்க்க முடிகிறது. சரியான நேரத்துக்கு சபைக்குச் செல்ல வேண்டும் என்கிற கட்டுப்பாடு அவரிடம் உள்ளது. சட்டமன்றத்தில் கலைஞர்கூட இடையில் எழுந்து சென்றுவிடுவார். ஆனால், ஸ்டாலின் முழுமையாக அமர்ந்து சபை நடவடிக்கைகளில் பங்கேற்கிறார். இது எனக்கே ஆச்சர்யமாக இருக்கிறது. எனக்குத் தெரிந்த ஒப்பீடு இதுதான்!”

நூறு நாள்களில் நாங்கள் பெரிதாக எந்தச் சாதனையும் செய்யவில்லை!

“சட்டமன்றத்தில் உங்களுக்கு பொன்விழா தீர்மானத்தை சஸ்பென்ஸாக ஸ்டாலின் கொண்டுவந்தாரே... அந்தத் தருணத்தை எப்படி உணர்ந்தீர்கள்?”

“எதற்கு என்னைப் பற்றிப் பேசுகிறார் என்றே தெரியாமல் இருந்தேன். பொன்விழா பாராட்டு பத்திரம் வாசித்துக்கொண்டிருந்தபோது நான் ஒரு நிலையில் இல்லை. திடீரென்று அதையே தீர்மானமாக மாற்றி அனைவரும் பேசியபோது எனக்கு நடுக்கமே ஏற்பட்டுவிட்டது. குறிப்பாக, இவ்வளவு பெரிய சபையில் யாருக்கும் இந்த அளவு பாராட்டு கிடைத்ததில்லை. எனக்கு இப்படியொரு நிகழ்வு நடக்கும்; என்மீது இவ்வளவு அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்துவார் என்று நினைத்துக்கூடப் பார்த்ததில்லை. அதனால்தான் நான் பேசும்போதும், ‘என் தலைவர் கலைஞருக்குப் பிறகு என் அரசியல் வாழ்க்கையில் ஒரு வெற்றிடம் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால், ஸ்டாலின் அதை நிரப்பிவிட்டார்’ என்று குறிப்பிட்டேன். அதற்கு மேல் என்னாலும் பேச முடியவில்லை.”

“எதிர்க்கட்சி உறுப்பினர்கள்கூட ஆளுங்கட்சிமீது பாசிட்டிவ்வான விமர்சனங்களை வைக்கிறார்களே?”

“ஆமாம். சிறு குறையைக்கூடச் சொல்ல முடியாத அளவுக்கு ஆட்சி நடக்கிறது என்றே நினைக்கிறேன். அ.தி.மு.க உறுப்பினர் செங்கோட்டையன்கூட ‘மாற்றார் உள்ளத்திலும் நன்மதிப்பை ஏற்படுத்தியுள்ளது’ என்று சொல்லும் அளவுக்கு ஸ்டாலின் ஆட்சி செய்கிறார்.”

நூறு நாள்களில் நாங்கள் பெரிதாக எந்தச் சாதனையும் செய்யவில்லை!

“சில நாள்களுக்கு முன்பு எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பன்னீர்செல்வம், ‘நதியினில் வெள்ளம்... கரையினில் நெருப்பு... இரண்டுக்கும் நடுவே இறைவனின் சிரிப்பு... இதுதான் என் தற்போதைய நிலைமை. அது அவை முன்னவர் துரைமுருகனுக்குத் தெரியும்’ என்று சொன்னாரே. என்னதான் ரகசியம் அது?”

(சிரிக்கிறார்... ) “அதுதான் எனக்கும் தெரியவில்லை. இருதலைக் கொள்ளியாக அவர் இருப்பதையே அப்படிச் சொல்லியிருக்கிறார்போல. அவர் உள்ளத்தில் என்ன இருக்கிறதோ, அதைக் கொட்டியிருக்கிறார். பொதுவாகவே பன்னீர்செல்வம் நல்ல மனிதர். ஏன்... அவரே தி.மு.க பாரம்பர்யத்திலிருந்து வந்தவர்தானே!”

“கருணாநிதி, ஜெயலலிதா என்கிற இரண்டு ஆளுமைகளும் இல்லாத இந்தச் சட்டப்பேரவை எப்படி இருக்கிறது?”

“முன்பிருந்த வெப்பம் இப்போது இல்லை. முன்பு அ.தி.மு.க உறுப்பினர்கள் தலைவரைத் தாக்கிப் பேசுவதை அந்த அம்மா ரசிப்பார். ஆனால், அந்த நிலை இப்போது இல்லை. ஆளுங்கட்சியினரும் எதிர்க்கட்சியினரும் சகஜமாகப் பேசிக்கொள்கிறார்கள். ஸ்டாலினும் பெருந்தன்மையுடன் அவையைக் கொண்டு செல்கிறார்.”

“நூறு நாள்கள் தி.மு.க ஆட்சி எப்படி இருக்கிறது?”

“90 நாள்களை கொரோனாவை ஒழிக்கவே போராடவேண்டியிருந்தது. உண்மையில், நூறு நாள்களில் நாங்கள் பெரிதாக எந்தச் சாதனையும் செய்யவில்லை. அதேபோல் யாரும் குற்றம் சொல்லும் அளவுக்கும் எங்கள் ஆட்சி இல்லை. இனிமேல்தான் எங்களுக்கான பரீட்சையே இருக்கிறது.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism