Published:Updated:

“மோடி, அண்ணாமலையை பாராட்டுகிறேன்!” - “தி.மு.க-விடம் பழைய வேகம் இப்போது இல்லை!”

துரைமுருகன்
பிரீமியம் ஸ்டோரி
துரைமுருகன்

- மனம் திறக்கும் துரைமுருகன்!

“மோடி, அண்ணாமலையை பாராட்டுகிறேன்!” - “தி.மு.க-விடம் பழைய வேகம் இப்போது இல்லை!”

- மனம் திறக்கும் துரைமுருகன்!

Published:Updated:
துரைமுருகன்
பிரீமியம் ஸ்டோரி
துரைமுருகன்

அறுபது ஆண்டு அரசியல் அனுபவத்துடன், 10-வது முறையாக எம்.எல்.ஏ ஆகியிருக்கிறார் தி.மு.க பொதுச்செயலாளரும், மூத்த அமைச்சருமான துரைமுருகன். நாம் அவரைச் சந்திக்கச் சென்றபோது நா.பார்த்தசாரதி எழுதிய ‘குறிஞ்சி மலர்’ புத்தகத்தைப் புரட்டிக்கொண்டிருந்தார். “எனக்கு ரொம்பப் பிடிச்ச புத்தகம்” என்றபடி அதை வைத்துவிட்டு, சரி பேட்டிக்குள் போகலாம்” என்றவரிடம், இன்றைய அரசியல் நிலவரங்கள் குறித்தும், தி.மு.க-வின் உட்கட்சி விவகாரங்கள் குறித்தும் பேசினோம்.

“ஒரு மூத்த அரசியல்வாதியாக, இன்றைய அரசியல் சூழலை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

(அவருக்கே உரித்தான சிரிப்புடன்...) “1962-ல் பச்சையப்பன் கல்லூரியில் படிக்கும்போது மேடை ஏறிப் பேச ஆரம்பித்த நான், இன்றுவரை அந்தப் பணியைத் தொடர்கிறேன். 1971-லிருந்து ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறேன். இந்த இடைப்பட்ட காலத்தில் அரசியலில் அநேக மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. கலைஞருடைய தாயார் இறந்தபோது, அவர் வீட்டுக்கு வருவதற்கு முன்பே, அப்போதைய முதல்வர் காமராஜர் சென்றுவிட்டார். அதுதான் அரசியல் பண்பாடு. தேர்தலில் காமராஜர் தோல்வியடைந்தபோது, ‘நான் ஒரு தப்பு பண்ணிட்டேன். காமராஜருக்கு எதிராக வேட்பாளரை நிறுத்தியிருக்கக் கூடாது’ என்று தனியாக உட்கார்ந்து அழுதார் அண்ணா. தலைவர்கள், இப்படி கண்ணியமாகவும் மனிதாபிமானத்தோடும் இருந்த காலம் அது. ஆனால், இப்போது கீழ்த்தரமாகப் பேசுவதும், வீண் புகார்களை தொடுப்பதுமாகப் போய்க்கொண்டிருக்கிறது. எம்.ஜி.ஆர் இருக்கும்வரை தி.மு.க-வுக்கும், அ.தி.மு.க-வுக்கும் இடையே ஓர் அந்நியோன்யம், பரஸ்பர மரியாதை இருந்தது. எல்லோரும் இங்கிருந்து போனவர்கள்தானே... ஆனால், ஜெயலலிதா வந்த பின்பு எல்லாமே மாறின. இப்போது எடப்பாடி வந்ததும் அது இன்னும் தளர்வாகிக் கொண்டிருக்கிறது. அந்தக் காலத்தில் இருந்த நாகரிக அரசியல் மீண்டும் வர வேண்டும்.”

“மோடி, அண்ணாமலையை பாராட்டுகிறேன்!” - “தி.மு.க-விடம் பழைய வேகம் இப்போது இல்லை!”

“தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிக்கு அதிக போட்டி இருக்கிறது. நீங்கள் யாரை எதிர்க்கட்சியாக நினைக்கிறீர்கள்?”

“அ.தி.மு.க-வைத்தான். அதில் மாற்றுக் கருத்தே இல்லை. ஆனால் பா.ஜ.க-வோ, ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில், ‘ஏன்... நாங்க ஆடுனா பத்துப் பேர் பார்க்க மாட்டாங்களா’னு மனோரமா சொல்வதுபோல ‘நாங்கதான் எதிர்க்கட்சி... நாங்கதான் எதிர்க்கட்சி’ என்று ஆடுகிறது. ஆனால் அந்த ஆட்டத்தை மக்கள் ரசிக்கவில்லை.”

“ஆனால், ஒற்றைத் தலைமை விவகாரத்தால் அ.தி.மு.க பிளவுபட்டிருக்கிறதே?”

“அ.தி.மு.க இப்படித்தான் போகுமென்று தெரியும். அந்தக் கட்சிக்கு ஆளுமையுள்ள தலைவர்கள் இப்போது இல்லை. எல்லோரும் ஒரே ரேங்க்கில் இருப்பவர்கள் என்பதால் பிரச்னை வெடித்துக்கொண்டேயிருக்கிறது!”

“ ‘ஓ.பி.எஸ்-ஐ தி.மு.க-வின் ‘பி’ டீம்’ என்கிறார்கள். உண்மையா?”

“ஓ.பி.எஸ்-ஸை வைத்து இ.பி.எஸ்-ஸை அழிக்கும் அளவுக்கு, அ.தி.மு.க ஒன்றும் அவ்வளவு பலமான கட்சி இல்லை. இ.பி.எஸ் அவ்வளவு பெரிய தலைவரும் இல்லை.”

“அண்ணா, கருணாநிதியுடன் பணியாற்றிய நீங்கள், ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க-வை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“கட்டுக்கோப்பு சிதையாமல் தி.மு.க எனும் இயக்கத்தைக் கட்டிக்காத்த தலைவர்கள் அறிஞர் அண்ணா மற்றும் தலைவர் கலைஞர். அவர்களிடம் முறையான பயிற்சி பெற்றிருக்கிற காரணத்தால்தான் கலைஞருக்குப் பிறகு கொஞ்சம்கூட சிதையாமல், இன்னும் சொல்லப் போனால் முன்பைவிட வலிமையோடு கட்சியை வழிநடத்திக்கொண்டிருக்கிறார் தளபதி ஸ்டாலின். அவருக்குப் பின்னாலும் தி.மு.க., தன் வலிமையான கொள்கையோடு பயணத்தைத் தொடரும்.”

“மோடி, அண்ணாமலையை பாராட்டுகிறேன்!” - “தி.மு.க-விடம் பழைய வேகம் இப்போது இல்லை!”

“ ‘அடுத்த 40 ஆண்டுகள் பா.ஜ.க காலம்தான். தெற்கு நோக்கிய எங்கள் செயல்திட்டம் தொடங்கிவிட்டது’ என்று அமித் ஷா கூறியிருக்கிறாரே?”

“தமிழ்நாட்டில் எல்லா அரசியல் கட்சிகளும் வளர வழி இருக்கிறது. ஆனால், மதவாதக் கட்சியான பா.ஜ.க-வால் இங்கு வளர முடியாது. இந்த மண் பெரியாரால் பக்குவப்படுத்தப்பட்ட மண். சுயமரியாதை மண். இந்த மண்ணில் அவர்கள் கால் பதித்தால், கால்கள்தான் வேகுமே தவிர, மண்ணுக்கு எந்த பாதிப்பும் இருக்காது. எனவே, அமித் ஷா சொல்வதைப் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.”

“தி.மு.க கூட்டணி பலமானது என்று எல்லோரும் மேடையில் முழங்கினாலும், கூட்டணிக்குள் நிறைய முரண் இருப்பதாகத் தெரிகிறதே?”

“கூட்டணியில் சேரும் யாரும் தன்னுடைய அடிப்படைக் கொள்கையை ஒதுக்கி வைத்துவிட்டு வர மாட்டார்கள். அங்கும் அவர்கள் கொள்கையைத்தான் பேசிக்கொண்டிருப்பார்கள். கூட்டணி என்பது தேர்தலில் ஓட்டுகளைச் சிந்தாமல் சிதறாமல் வாங்குவதற்குத்தான். அதையும் மீறி, சில கொள்கைகளில் நாங்கள் அந்நியோன்யமாகவே இருக்கிறோம்.”

“கல்வி நிறுவனங்களைக் குறிவைத்து வேலை பார்க்கிறது பா.ஜ.க. ஆனால், மாணவர் எழுச்சியால் வளர்ந்த தி.மு.க-விடம் அந்த ஆர்வத்தைப் பார்க்க முடியவில்லையே?”

“தமிழ்நாட்டில் பா.ஜ.க-வினர் இப்போதுதான் புதுக்கடை விரித்திருக்கிறார்கள். அவர்கள்தான் வீடு வீடாகப் போய் நோட்டீஸ் கொடுக்க வேண்டும். நாங்கள் பழைய கடைக்காரர்கள். இருந்தாலும், அதைச் சாதாரணமாகக் கருதக் கூடாது என்பது உண்மைதான். ஒருகாலத்தில் தி.மு.க-வில் இருந்த வேகம் இப்போது இல்லை. அந்த வேகத்தைக் கூட்ட வேண்டும்.”

“தனிநபராக மோடி... பிரதமர் மோடி... உங்கள் பார்வையில்?”

“மோடி குஜராத் முதலமைச்சராக இருந்த போதிருந்தே எனக்கு நன்கு அறிமுகம். அவருடைய வளர்ச்சி மிகப்பெரிய ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது. குஜராத்தில் எங்கேயோ ஒரு ரயில் நிலையத்தில் டீ விற்றுக்கொண்டிருந்தவர், மன உறுதி, கொள்கைப் பிடிப்பு, சளைக்காத ஆர்வம் இருந்ததால், இன்று நாட்டிலேயே மிகப்பெரிய பதவிக்கு வந்திருக்கிறார். பாராட்டுகிறேன். ஆனால்... நாட்டின் பிரதமராக அவரின் செயல்பாடு எனக்குச் சுத்தமாக பிடிக்கவில்லை. குறைந்தபட்சம் நாடாளுமன்றத்துக்குக்கூட அவர் வருவதில்லை. நேரு உள்ளிட்ட பிரதமர்கள் நாடாளுமன்றத்துக்குக் காலையில் வந்தால், இரவு பத்து மணி வரை இருப்பார்கள். ஆனால், இவர் வருவதுமில்லை. வந்தாலும் ஒரு கேள்விக்குக்கூட பதில் சொல்வதுமில்லை.”

“அண்ணாமலையின் செயல்பாடுகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“நான் பாராட்டுகிறேன்... தனிமனிதனாக இருந்து சளைக்காமல் பேசுகிறார், போகிறார், வருகிறார். அவர் பேசும் கருத்தில், கொள்கையில் மாறுபாடு இருக்கலாம். ஆனால், அவரின் ஆர்வத்தை, வேகத்தை மெச்சுகிறேன்.”

“தி.மு.க-மீது வாரிசு அரசியல் குற்றச்சாட்டை பா.ஜ.க தொடர்ந்து முன்வைத்துக்கொண்டே இருக்கிறதே..?”

“தளபதி ஸ்டாலின், அர்ப்பணிப்பு, ஈடுபாடு இருந்ததால்தான் இன்று தலைவராகியிருக்கிறார். கலைஞரின் மகன் என்ற காரணத்தால் மட்டும் அவரது தியாகங்களைப் புறந்தள்ளிவிட முடியாது. கலைஞர், ஸ்டாலினை எப்படி உருவாக்கி, பக்குவப்படுத்திப் பார்த்தாரோ, அப்படித்தான் உதயநிதி பக்குவமடைந்து வருகிறார். அரசியல், போட்டி நிறைந்த ஒன்று. ஆசையில் வேண்டுமானால் வாரிசுக்குப் பதவி கொடுக்கலாம். இங்கு திறமையில்லாமல் ஒன்றும் செய்ய முடியாது. அது எல்லாருக்கும் பொருந்தும்.”

“மோடி, அண்ணாமலையை பாராட்டுகிறேன்!” - “தி.மு.க-விடம் பழைய வேகம் இப்போது இல்லை!”

“ ‘துரைமுருகன் பெயருக்குத்தான் பொதுச்செயலாளர், அவருக்கு தி.மு.க-வில் எந்த அதிகாரமும் இல்லை’ என வேல்முருகன் விமர்சித்திருக்கிறாரே”

“அரசியலில் எப்போதுமே சிவப்புக் கம்பள வரவேற்பு இருக்காது. முள்ளும் கல்லும் கிடக்கும். அதைச் சகித்துக்கொள்ள வேண்டும். அவமானம் வரும்போது புன்னகைத்து, பாராட்டப்படும்போது அடக்கமாக இருக்க வேண்டும். அதெல்லாம் இருந்தால்தான் தாக்குப்பிடிக்க முடியும். அது அந்தத் தம்பிக்கு புரியவே இல்லை.”

“தி.மு.க உட்கட்சித் தேர்தல் குளறுபடிகள் தொடர்கின்றனவே?”

“தி.மு.க பெரிய கட்சி. ஏகப்பட்ட பதவிகள் இருக்கின்றன. இப்போது ஆளுங்கட்சி வேறு. அதனால் போட்டிக்குக் குறைவே இருக்காது. போட்டி இருந்தால்தான் அது ஆரோக்கியமான கட்சி. பதவிகள் எல்லாருக்கும் எளிதாகக் கிடைத்துவிட்டால், சிக்கல் இருப்பதாகவே பொருள். அதனால், இந்தக் குளறுபடிகள் கட்சியின் வளர்ச்சியையே காட்டுகின்றன.”