Published:Updated:

கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, ரெளடியிசம்... சட்ட ஒழுங்கை கையாள்வதில் சறுக்கியதா திமுக அரசு?!

முதல்வர் ஸ்டாலின்

திமுக ஆட்சிக்கு வந்தால் சட்ட ஒழுங்கு சீர்கெடும், கட்டப்பஞ்சாயத்துகள் அதிகரிக்கும், மக்கள் அமைதியாக வாழமுடியாது' என ஒரு எச்சரிக்கை வாசகம் போல, கடந்த 2021 சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்துக்குச் செல்லும் இடங்களிலெல்லாம் தவறாமல் சொல்லிவந்தார் எடப்பாடி பழனிசாமி.

கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, ரெளடியிசம்... சட்ட ஒழுங்கை கையாள்வதில் சறுக்கியதா திமுக அரசு?!

திமுக ஆட்சிக்கு வந்தால் சட்ட ஒழுங்கு சீர்கெடும், கட்டப்பஞ்சாயத்துகள் அதிகரிக்கும், மக்கள் அமைதியாக வாழமுடியாது' என ஒரு எச்சரிக்கை வாசகம் போல, கடந்த 2021 சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்துக்குச் செல்லும் இடங்களிலெல்லாம் தவறாமல் சொல்லிவந்தார் எடப்பாடி பழனிசாமி.

Published:Updated:
முதல்வர் ஸ்டாலின்

`தி.மு.க ஆட்சிக்கு வந்தால், சட்ட ஒழுங்கு சீர்கெடும், கட்டப்பஞ்சாயத்துகள் அதிகரிக்கும், மக்கள் அமைதியாக வாழமுடியாது' என ஒரு எச்சரிக்கை வாசகம் போல, கடந்த 2021 சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்துக்குச் செல்லும் இடங்களிலெல்லாம் தவறாமல் சொல்லிவந்தார் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. பின்னர், தேர்தல் முடிவில் தி.மு.க வெற்றிபெற்று, மு.க.ஸ்டாலின் முதல்வராக ஆட்சியில் அமர்ந்ததும், பொதுமக்களிடம் வரவேற்பைப்பெற்ற பல திட்டங்களைக் கொண்டுவந்தார். ஆனால், சட்ட ஒழுங்கு பிரச்னையை கட்டுப்படுத்துவதில் மொத்தமாக தி.மு.க அரசு கோட்டை விட்டுவிட்டதாகவே அ.தி.மு.க., பா.ஜ.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. இந்த நிலையில், ஸ்டாலினின் 10 மாத ஆட்சிகாலத்தில், சட்ட ஒழுங்கில் தி.மு.க சறுக்கிய தருணங்களை சற்றுகாண்போம்...

ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி
ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி

முதல் ஐந்து மாதங்கள்:

அம்மா உணவகம் சூறை, ஏ.டி.எம் கொள்ளை, குட்கா விற்பனை, மணல் கடத்தல், ரெளடிகள் மோதல்:

2021 சட்ட மன்றத்தேர்தலில் தி.மு.க வெற்றி அறிவிப்பு வெளியான மே 2-ம் தேதி மறுநாளே, சென்னை ஜே.ஜே நகரில் உள்ள அம்மா உணவகத்தின் பெயர்ப்பலகை, ஜெயலலிதா புகைப்படம் அடங்கிய பேனர்கள் தி.மு.க தொண்டர்கள் சிலரால் கிழித்து அகற்றப்பட்டது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தி.மு.க தொண்டர்கள் சிலரால் அடித்து நொறுக்கப்பட்ட அம்மா உணவகம்
தி.மு.க தொண்டர்கள் சிலரால் அடித்து நொறுக்கப்பட்ட அம்மா உணவகம்

இந்த சம்பவம், அ.தி.மு.க-வினர், பொதுமக்கள் உட்பட சொந்தக்கட்சி திமுகவினருக்கே பெரும் சங்கடத்தை உண்டாக்கியது. இதையடுத்து, ஸ்டாலின் சம்மந்தப்பட இரு தி.மு.க-வினரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கியதோடு, கைது செய்யவும் உத்தரவிட்டார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அடுத்து, ஜூன் மாதத்தில் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள எஸ்.பி.ஐ வங்கி ஏ.டி.எம் மையங்களை குறிவைத்து சுமார் ரூ. 1 கோடிக்கும் மேல் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. தமிழகத்தையே பரபரப்புக்குள்ளாகிய இந்தச் சம்பவத்தில் அரியானாவைச் சேர்ந்த 10 வடமாநிலக் கொள்ளையர்கள் பிடிபட்டனர்.

சென்னை ஏடிஎம் கொள்ளை
சென்னை ஏடிஎம் கொள்ளை

ஜூலை மாதத்தில், தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் தடைசெய்யப்பட்ட குட்கா, பான் மசாலாப் பொருட்கள் தங்குதடையின்றி சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படும் விவகாரம் புயலைக் கிளப்பியது. ஜூனியர் விகடன் இதழும் 'குட்கா இன்னும் ஜோராக விற்கிறது முதல்வரே!' என அட்டைப்படக் கட்டுரையும் வெளியிட்டு சுட்டிக்காட்டியது. தமிழக அரசும் அதிரடி சோதனை, பறிமுதல், கடைக்கு சீல் என தீவிர நடவடிக்கை மேற்கொண்டாலும், அவற்றை முழுமையாக கட்டுப்படுத்த முடியாமல் திணறியது.

குட்கா
குட்கா

அடுத்ததாக, திருச்சி, மணப்பாறை கிழக்கு ஒன்றிய தி.மு.க செயலாளரான ஆரோக்கியசாமி, மணல் திருட்டில் ஈடுபட்டதோடு, அதை பறிமுதல் செய்த காவல்துறை அதிகாரிகளை மிரட்டிய சம்பவம், டி.ஜி.பி வரைக்கும் சென்றது. தி.மு.க-வுக்கு பெரும் அவப்பெயரை ஏற்படுத்திய இந்த சம்பவத்தையடுத்து, ஆரோக்கியசாமி கட்சியை விட்டே நீக்கப்பட்டார்.

தமிழக டிஜிபி  சைலேந்திர பாபு
தமிழக டிஜிபி சைலேந்திர பாபு

அதனைத்தொடர்ந்து, சென்னை, சேலம், கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் ரெளடி கும்பல்கள் தங்களுக்குள் மோதிக்கொள்ளும் கலாசாரம் தலைதூக்கியது. இதையடுத்து, டி.ஜி.பி சைலேந்திர பாபு உத்தரவின் பேரில், மூன்றே நாள்களில் தமிழகம் முழுவதும் 3,325 ரெளடிகள் அதிரடியாகக் கைதுசெய்யப்பட்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சென்னை விமான நிலையத்தில், கோடிக்கணக்கில் மதிப்புடைய ஹெராயின் கடத்தல் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் தொடர் சம்பவங்கள் அடுத்தடுத்து அரங்கேறியது. இதுதவிர, இணையதளக் குற்றங்கள், ஆன்லைன் ரம்மி தற்கொலைகள், சிவசங்கர் பாபா, பள்ளி ஆசிரியர்கள் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி போக்சோ வழக்கில் கைதாவது என மேலும் சர்ச்சைகள் தொடர்ந்துகொண்டிருந்தது

ஆன்லைன் ரம்மி
ஆன்லைன் ரம்மி

ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே, தொடர்ச்சியாக நிகழ்ந்துகொண்டிருக்கும் இந்த சம்பவங்கள் திமுகவுக்கு கடும் சவாலாக அமைந்தது. இவை எல்லாவற்றுக்கும் ஸ்டாலின் கடுமையான நடவடிக்கை எடுத்தாலும்கூட, அடுத்துவரும் காலங்களில் அவற்றை தொடரவிடாமல் தடுக்கும் முயற்சிகள் பெரும்பாலும் பலனளிக்கவில்லை.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான் எடப்பாடி பழனிசாமி, ``கடந்த 5 மாதங்களாக நடந்துவரும் தி.மு.க ஆட்சியில் குற்றச்செயல்கள் அதிகரித்துவிட்டன; வடமாநிலக் கொள்ளையர்கள் சர்வ சாதாரணமாக விமானத்தில் வந்திறங்கி, தமிழகத்தில் வங்கி ஏ.டி.எம் கொள்ளை, செயின் பறிப்பு, ஆள் கடத்தல் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். தி.மு.க-வினர் காவல்துறையினர், அரசு ஊழியா்களை மிரட்டுவதும், மணல் கடத்தலில் ஈடுபடுவதும் நடக்கின்றன. கஞ்சா, ஹெராயின், குட்கா போன்ற போதைப்பொருள்கள் விற்பனையும் கொடிகட்டிப் பறக்கிறது. தி.மு.க ஆட்சியில் சமூக விரோத சக்திகளின் அட்டகாசம் தலைவிரித்தாடுகிறது. அன்னிய நாடுகளில் இருந்து, போதைப் பொருள்கள் இந்தியா முழுவதும் கடத்தி விற்பதற்கு வழித்தடமாக சென்னை மாறிவிட்டது" என அடுக்கடுக்காக குற்றம்சாட்டினார்.

அடுத்த ஐந்து மாதங்கள்:

நகைக் கொள்ளை, காவலர் படுகொலை, மிரட்டல், தற்கொலை:

கடந்த நவம்பர் மாதம், திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல்நிலைய எஸ்.ஐ பூமிநாதன், ஆடு திருடிய நபர்களைப் பிடிக்கச் சென்றபோது, கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தவழக்கில், 10, 17 வயதே நிரம்பிய இருசிறுவர்கள் உட்பட நான்குபேர் கைது செய்யப்பட்டது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தி.மு.க ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பில்லை என எதிர்க்கட்சிகள் சரமாரியாக விமர்சித்தன.

எஸ்.ஐ பூமிநாதன் கொலை
எஸ்.ஐ பூமிநாதன் கொலை

அடுத்ததாக, பள்ளி ஆசிரியரின் பாலியல் தொல்லையால் கோவை மற்றும் கரூரைச் சேர்ந்த +2 மாணவிகள் இருவர் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவங்கள் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கிப் போட்டது. டிசம்பர் மாதத்தில், கோவையில் காணாமல்போன 10-ம் வகுப்பு மாணவி, 5 நாட்கள் கழித்து சாக்கு மூட்டையில் கை, கால், வாய் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் கூடுதல் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

கோவை மாணவி தற்கொலை
கோவை மாணவி தற்கொலை

இதுதவிர, வேலூர் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை சுவரில் துளைபோட்டு 16 கிலோ தங்கம், வைர நகைகள் கொள்ளை, புதுக்கோட்டையில் பூட்டிய வீட்டை உடைத்து 850 பவுன் நகை கொள்ளை, சீர்காழியில் வீட்டில் இருந்த 2 பேரை கொலைசெய்து 16 கிலோ தங்க நகைகள் கொள்ளை என தொடர்ந்த நடந்த நகைக்கொள்ளை சம்பவங்கள், மக்களிடையே பீதியை ஏற்படுத்தியது.

இதற்கிடையில், வேலூர் வேப்பங்குப்பம் காவல்நிலைய எஸ்.ஐ. சீனிவாசன், `ஏலச் சீட்டு மோசடி, மணல் கடத்தல் புகார்களில் வழக்குப்பதிவு செய்யக்கூடாது என தி.மு.க பிரமுகர்கள் என்னை மிரட்டுகிறார்கள். எனக்கு மன உலைச்சலாக இருக்கிறது. நான் தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன்' என்று பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

 ஓ. பன்னீர்செல்வம்
ஓ. பன்னீர்செல்வம்

அதைத்தொடர்ந்து, அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில், ``எங்கு பார்த்தாலும் பாலியல் கொடுமைகள் நிகழ்ந்து வருகிறது, பட்டப் பகலில் கொலைகள், கொள்ளைகள் அன்றாடம் நடக்கிறது. அரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள், காவல் துறையினரும் தி.மு.க.வினரால் தினந்தோறும் மிரட்டப்படுகிறார்கள். அரசின் ஒவ்வொரு அங்கத்திலும் தி.மு.க.வினரின் தலையீடு தலைவிரித்து ஆடுகிறது. இவற்றைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு பலமுறை வேண்டுகோள் விடுத்தும், ஒருவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை; கடந்த 8 மாத கால தி.மு.க. ஆட்சியில் ஒட்டுமொத்த தமிழர்களின் உயிருக்கும், உடைமைக்கும் ஆபத்து ஏற்படக்கூடிய சூழல்உருவாகியுள்ளது. காவல் துறையினருக்கே பாதுகாப்பு இல்லை" என கடுமையாக குற்றம்சாட்டினார்.

அண்ணாமலை!
அண்ணாமலை!

பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, ``தமிழகத்தில் மிகக்குறுகிய காலத்தில், நிறைய குற்றச்செயல்கள் அதிகரித்திருக்கின்றன. தமிழகத்தில் தி.மு.க மாவட்டச் செயலாளர்களின் இடையூறு காரணமாக சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஆரம்பித்துள்ளது. இதனால் கம்பீரமான காவல்துறை தனது நிலையை இழந்து வருகிறது. இந்த நிலைமையை கட்டுப்படுத்தவில்லையெனில் இதன் விபரீதத்தை அடுத்த வருடத்திலிருந்து நாம் பார்க்க ஆரம்பிப்போம். மீண்டும் தமிழக காவல்துறை தனது கம்பீரத்தை திரும்பப் பெற வேண்டுமென்றால் ஆளுங்கட்சியான தி.மு.க அரசு தமிழகக் காவல்துறையை சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும்" என கோரிக்கை வைத்தார்.

அந்த நிலையில், கடந்த ஜனவரி 19-ம் தேதி முதல்வர் ஸ்டாலின், `காவலர் - பொதுமக்களுக்கிடையேயான உறவை மேம்படுத்தவும், காவல்துறை பணியாளர்களுக்கு நலத்திட்டங்களை செயல்படுத்திடவும் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சி.டி.செல்வம் தலைமையில், புதிய காவல் ஆணையம் அமைத்து' உத்தரவிட்டார். ஆனால், அதன்பின்னரும் அதேநிலைதான் நீடித்தது.

கே.பி. சங்கர் - ஸ்டாலின்
கே.பி. சங்கர் - ஸ்டாலின்

எம்.எல்.ஏ. அடாவடி, அரசியல் படுகொலைகள், நகர்ப்புற தேர்தல் ரகளை, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள்:

கடந்த ஜனவரி இறுதி வாரத்தில், சென்னை திருவொற்றியூரில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மாநகராட்சி பொறியாளரை தி.மு.க எம்.எல்.ஏ. கே.பி. சங்கர் தாக்கியதாக, சென்னை மாநகராட்சி சார்பில் புகாரளிக்கப்பட்டது. இதையடுத்து, கட்சித் தலைமை உடனடியாக கே.பி.சங்கரை, அவர் வகித்துவந்த பகுதிச் செயலாளர் பதவியிலிருந்து அதிரடியாக நீக்கியது.

கே.பி.சங்கர்
கே.பி.சங்கர்

அதன்பின்னரும் கூட, கடந்த ஏப்ரல் 2-ம் தேதி திருவொற்றியூரைச் சேர்ந்த பார் உரிமையாளர் ஜோஷ்வா, `கே.பி. சங்கர் அடியாட்களுடன் வந்து மாதம் 1 லட்சம் ரூபாய் மாமூல் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் பார் உரிமத்தையும், இடத்தைம், எழுதி கொடுக்கும்படி கொலை மிரட்டல் விடுக்கிறார்' என சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

கடந்த பிப்ரவரி 12-ம் தேதி அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில், தமிழர் நீதிக் கட்சித் தலைவர் சுப. இளவரசன் சென்ற கார்மீது மர்மநபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தி, வெடிகுண்டு வீசி கொலை முயற்சி சம்பவத்தில் ஈடுபட்டதும் நடந்தேறியிருக்கிறது.

கொலை
கொலை

இதுமட்டுமல்லாமல், கன்னியாகுமரி செம்பன்விளை தி.மு.க பிரமுகர் குமாரசங்கர், திருநெல்வேலி பாளையங்கோட்டை தி.மு.க வட்டச்செயலாளர் பொன்னுதாஸைத் தொடர்ந்து, கடந்த பிப்ரவரியில் மட்டும் சென்னை மடிப்பாக்கம் தி.மு.க வட்டச் செயலாளர் செல்வம், சென்னை பல்லவன் இல்லம் மதன், தூத்துக்குடி தாளமுத்து நகர் திமுக வட்டச் செயலாளர் கண்ணன், காஞ்சிபுரம் கோனேரிக்குப்பம் தி.மு.க மாவட்ட பிரதிநிதி சேகர் என ஒரே மாதத்தில் தொடர்ந்து 4 ஆளும்கட்சி பிரமுகர்கள் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர்.

மேலும், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின், வேட்பாளர்கள் கடத்தல், ஓட்டுக்குப் பணம் பரிசுப்பொருள் வழங்கல், வாக்குப்பதிவு மற்றும் ஓட்டு எண்ணிக்கையின்போது தமிழகத்தின் பல்வேறு வாக்குச்சாவடிகளில் கள்ள ஓட்டு பதிந்தது, குழப்பம் விளைவித்தது என அடுக்கடுக்காக தி.மு.க நிர்வாகிகள்மீது பல்வேறு புகார்களை எதிர்க்கட்சியினர் முன்வைத்தனர். குறிப்பாக, எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் சொந்தத் தொகுதியான சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் ஒரு தி.மு.க பிரமுகர், காவல்துறை அதிகாரியை மிரட்டியதோடு, `ஆட்களை இறக்கி, சட்ட ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்துவேன்' என சர்ச்சைக்குரிய வகையில் பேசியது, பெண் காவலரின் மொபைலைப் பறித்தது போன்ற வீடியோக்கள் வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 உள்ளாட்சித் தேர்தல்
உள்ளாட்சித் தேர்தல்

கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் அடுத்தடுத்து மூன்று கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்குகள் அதிர்ச்சியை ஏற்படுதியது, விருதுநகரில் 22 வயதான இளம்பெண்ணை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தென் தமிழகத்தையே உலுக்கிப்போட்டது. இந்த விவகாரத்தில் தி.மு.க பிரமுகர்கள், பள்ளி மாணவர்கள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேபோல, வேலூரில் தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் இளம்பெண் ஒருவர் நள்ளிரவில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். மேலும், கடலூரில் தனது ஆண் நண்பருடன் சென்ற இளம் பெண் ஒருவரை 3 பேர் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அடுத்தடுத்து அதிர்ச்சி அதிர்வலைகளை தமிழகமெங்கும் ஏற்படுத்தியது.

நாகை கூட்டுப்பாலியல் கொடூரம்
நாகை கூட்டுப்பாலியல் கொடூரம்

இந்த சம்பவங்கள் குறித்து எடப்பாடி பழனிசாமி, ``இந்த அரசின் கீழ் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் பன்மடங்கு அதிகரித்திருக்கின்றன. இதுதான் தாங்கள் பெண்களுக்கு அளிக்கும் பாதுகாப்பா?'' என காட்டமாக விமர்சித்தார். தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ``பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடும் குற்றவாளிகளைக் கைதுசெய்து, அவர்களுக்கு அதிகபட்ச தண்டனைகள் வழங்க வேண்டும்" என காவல்துறை அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

இதுதவிர, பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களை தாக்குவது, பேருந்தில் நடத்துநர் ஓட்டுநர்களை தாக்குவது, பைக் சாகசங்களில் ஈடுபடுவது, வகுப்பறை, பேருந்துகளில் மது அருந்துவது என இளம் சிறார்களும் குற்றச்செயல்களில் ஈடுபடும்போக்குகள் அனைத்து மாவட்டங்களிலும் கடுமையாக அதிகரித்திருக்கின்றன.

பாதை மாறுகிறார்களா பள்ளி மாணவர்கள்?
பாதை மாறுகிறார்களா பள்ளி மாணவர்கள்?

இந்த சம்பவங்கள் குறித்து, முன்னாள் அ.தி.மு.க எம்.எல்.ஏ-வும், முன்னாள் அரசு வழக்கறிஞருமான ஐ.எஸ்.இன்பதுரையிடம் பேசினோம்.

``திமுக ஆட்சிப்பொறுப்பேற்றதிலிருந்து, விடிந்தால் வழிப்பறி, பாலியல் வன்கொடுமை, இருட்டினால் கொலை, கொள்ளை என ஒவ்வொருநாளும் தமிழகத்தின் சட்ட ஒழுங்கு சீர்கேடு சந்திசிரிக்கிறது. ஒரு காவல்துறை ஆய்வாளரை சிறுவர்களே படுகொலை செய்யும் அளவுக்கு முன்னேறிவிட்டது. இன்றைக்கு தி.மு.க அமைச்சர்களாக இருக்கும் 23 பேர் மீது ஊழல், குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. அவர்களே நீதிமன்றப் படிக்கட்டுகளில்தான் தினசரி ஏறிஇறங்கிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி இருக்க, தமிழகத்தின் நிலைமை வேறுஎப்படி இருக்கும்?" என கேள்வி எழுப்பினார்.

இன்பதுரை
இன்பதுரை

மேலும்,``இங்கு தலைமைச் செயலாளர், டி.ஜி.பி என நல்ல அதிகாரிகள்தான் இருக்கிறார்கள், ஆனால் அவர்களை முழுமையாக செயல்படவிடாமல் ஒரு மர்ம கரம் கட்டிப்போட்டிருக்கிறது. நாங்கள் ஏற்கெனவே, கடந்த டிசம்பர் மாதம் 27-ம் தேதி அ.தி.மு.க சட்ட ஆலோசனை குழுவினர் சார்பில், ஆளுநர் ரவியை நேரில் சந்தித்து, `தி.மு.க-வின் 200 நாள்கள் ஆட்சியில் 557 கொலைகள்' நடந்திருப்பதை ஆதாரங்களுடன் விளக்கி புகார் மனுவைக் கொடுத்திருந்தோம். இப்போது அந்தக் கொலைகளின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியிருக்கும்" என்றார். மேலும், குற்றவாளிகளையெல்லாம் தட்டிக்கேட்கவேண்டிய முதலமைச்சரோ, முதுகில் தட்டிக்கொடுத்துக்கொண்டிருக்கிறார்!" என சரமாரியாக விமர்ச்சன மழைப்பொழிந்தார்.''

அதேபோல பா.ஜ.க செய்தித்தொடர்பாளரான நாராயணன் திருப்பதி, ``தமிழகத்தில் எப்போதெல்லாம் தி.மு.க ஆட்சி வருகிறதோ, அப்போதெல்லாம் சட்ட ஒழுங்கு சீர்கேடு தலைவிரித்தாடுவது வழக்கம். அதேபோல, இப்போதும் சமூக விரோதிகளின் ஆதிக்கம், ரெளடிகளின் அட்டகாசம் தலைதூக்கியிருக்கிறது. தி.மு.க அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்களின் அறிவுறுத்தலின்பேரில் தொடர்ந்து தி.மு.க சமூக விரோதிகள் பா.ஜ.க உள்ளிட்ட மாற்றுக்கட்சி நிர்வாகிகளையும், தொழிலதிபர்களையும் மிரட்டி வருகின்றனர். இதனால், இங்கு வர்த்தகம் செய்யும் தொழிலதிபர்கள் மிகுந்த அச்சத்திற்குள்ளாகி, தமிழகத்தை விட்டே வெளியேறும் நிலைமை உருவாகியிருக்கிறது.

நாராயணன் - பா.ஜ.க செய்தி தொடர்பாளர்
நாராயணன் - பா.ஜ.க செய்தி தொடர்பாளர்

இவற்றையெல்லாம், கண்டுகொள்ளாது அரசும், காவல்துறையும் கைக்கட்டி வேடிக்கைப் பார்க்கிறது! ஆனால் அதற்குமாறாக, அரசாங்கத்தை விமர்சிப்பவர்களை சமூக விரோதிகளாக சித்தரித்தும், கைதுசெய்தும் சிறையிலடைக்கிறது. எனவே, தமிழக முதலமைச்சர் உடனடியாகத் தலையிட்டு, இனியும் இவற்றை தடுக்காவிட்டால், அமைதிப்பூங்காவாக இருந்த தமிழகம், வன்முறைக் காடாகிவிடும்" என குற்றச்சாட்டுடன் கோரிக்கை வைத்தார்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

அடுக்கடுக்கான இந்த குற்றச்சாட்டுகள் குறித்து, தி.மு.க அமைப்புச் செயலாளரும், மாநிலங்களவை எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதியிடம் விளக்கம் கேட்டோம்.

``அ.தி.மு.க-வினர் தான் வேண்டுமென்றே, தி.மு.க ஆட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும்வகையில் சட்ட ஒழுங்கை சீர்குலைத்து வருகின்றனர். பா.ஜ.க-வில் புதிய உறுப்பினர்களாக சேர்ந்துகொண்டிருப்பவர்கள் முழுக்க ரெளடிப் பட்டியலில் இருப்பவர்கள் என்பது ஊரறிந்த விஷயம். முதலமைச்சர் ஸ்டாலினே கடந்த ஆண்டு அந்தப் பட்டியலை வெளியிட்டார். சென்னை வண்டலூரில் பா.ஜ.க-வில் இணையவந்த ஒரு ரெளடி கூட்டத்தினர், காவல்துறையைக் கண்டதும் தலைதெறிக்க தப்பியோடிய சம்பவத்தை யாரும் மறக்கவில்லை; கட்சி முழுக்க ரெளடிகளை வைத்திருக்கும் பா.ஜ.க-வுக்கு எங்களைப் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது? இப்படி சமூக விரோதிகளின் கூடாரமாக அ.தி.மு.க, பா.ஜ.க-தான் இருக்கிறது.

ஆர்.எஸ் பாரதி
ஆர்.எஸ் பாரதி

தி.மு.க ஆட்சியில் இத்தனைக் கொலைகள் நடந்திருக்கிறது என ஆளுநரிடம் அறிக்கை கொடுத்தவர்களை, அவர்களின் கடந்த ஆட்சியில் நடந்த கொலைகளியும், ஒட்டுமொத்த இந்திய மாநிலங்களிலும் நடந்த கொலை சம்பவங்களையும் பட்டியலிட்டு `கம்பேரட்டிவ் ஸ்டடி'(Comparative Study) செய்து காட்டச்சொல்லுங்கள்! அப்போது உண்மை வெளிவரும். தவறை சுட்டிக்காட்டினால், எதுவாக இருந்தாலும், யாராக இருந்தாலும் முதலமைச்சர் ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுப்பார். விருகம்பாக்கம் ஹோட்டல், அம்மா உணவகம், கே.பி. சங்கர் விவகாரத்தில் கூட அதிரடியாக நடவடிக்கை எடுத்தார். சொந்தக் கட்சியைச் சேர்ந்தவர் என்றெல்லாம் பாரபட்சம் பார்க்கமாட்டார்" என விளக்கமளித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism