Published:Updated:

சென்னை - சேலம் எட்டுவழிச் சாலை: திமுக அன்றும்... இன்றும்..!

எட்டுவழிச் சாலை: திமுக அன்றும்... இன்றும்..!

``திமுக அரசு முதலில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த மாட்டோம் என்று உறுதிமொழி கொடுத்தது. ஆனால், அமைச்சர் எ.வ.வேலு, `மாற்றுவழிப்பாதையில் இந்தத் திட்டம் கொண்டுவரப்படும்’ என்கிறார்.”

சென்னை - சேலம் எட்டுவழிச் சாலை: திமுக அன்றும்... இன்றும்..!

``திமுக அரசு முதலில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த மாட்டோம் என்று உறுதிமொழி கொடுத்தது. ஆனால், அமைச்சர் எ.வ.வேலு, `மாற்றுவழிப்பாதையில் இந்தத் திட்டம் கொண்டுவரப்படும்’ என்கிறார்.”

Published:Updated:
எட்டுவழிச் சாலை: திமுக அன்றும்... இன்றும்..!

கடந்த அதிமுக ஆட்சியின்போது, 2018-ம் ஆண்டு மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட எட்டுவழிச் சாலை திட்டத்துக்கு 10,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது. அந்தத் திட்டத்தின்கீழ், சுமார் 7,000 ஏக்கர் நிலங்கள் விவசாயிகளிடமிருந்து பெறப்படும் என்றும், 277 கி.மீ சாலை அமைக்கப்படும் என்றும் சொல்லப்பட்டது. பல இடங்களில் நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கப்பட்டபோது, விவசாயிகள் தன்னெழுச்சியாக நிலம் கையகப்படுத்தும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

எட்டுவழிச் சாலை
எட்டுவழிச் சாலை

மேலும், இந்தத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று அப்போதைய அ.தி.மு.க அரசுக்குக் கோரிக்கை விடுத்தனர். விவசாயிகள் போராட்டம் நடத்தியபோது சில சமூகநல அமைப்புகள், விவசாய அமைப்புகள், அரசியல் கட்சிகள் இணைந்து இந்தத் திட்டத்தை எதிர்த்தன. தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட பலரும் கைதாகினர். தமிழ்நாடு முழுவதும் அந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு கிளம்பியது. அப்போது, அ.தி.மு.க அரசு கொண்டுவர முயன்ற இந்தத் திட்டத்தை தி.மு.க கடுமையாக விமர்சனம் செய்து கண்டித்தது.

தி.மு.க எம்.பி டி.ஆர்.பாலுவோ, "மக்களின் கருத்துகளுக்கு எதிராக, தலைவர் கலைஞர் ஆட்சியில் ஒரு துரும்புகூட எடுத்துப்போட்டதாக வரலாறு இல்லை. சென்னை - சேலம் எட்டுவழிச் சாலைத் திட்டம் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படாத திட்டம். தாய்மார்கள், குடும்பம் குடும்பமாகவும், விவசாயிகள் தங்கள் குடும்பத்தினரோடும் போராட்டம் நடத்தி எதிர்ப்பு தெரிவித்துக்கொண்டிருக்கும் திட்டம்" என்று விமர்சனம் செய்தார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், இப்போதைய முதல்வருமான ஸ்டாலின், "எல்லா வகையிலும் விவசாயிகளுக்கு எதிரிகளாக பா.ஜ.க - அ.தி.மு.க அரசுகள் கூட்டணிவைத்துச் செயல்படுகின்றன. மக்கள் மன்றம் உரிய பாடத்தை வாக்குச்சீட்டு மூலம் கற்பிக்கும். கமிஷன் என்ற நோக்கத்தில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த காவல்துறையைப் பயன்படுத்தி, விவசாயிகளின் மீது தடியடி நடத்தினார் முதலமைச்சர்.

சென்னை - சேலம் எட்டுவழிச் சாலை: திமுக அன்றும்... இன்றும்..!

மீண்டும் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற எந்தவித முயற்சியும் செய்யக் கூடாது. மத்திய அரசின் திட்டம் என்று சொல்லித் தப்பித்துக்கொள்ள நினைக்காமல், கைவிட்டுவிட்டதாக வெளிப்படையாக அறிவிக்க முன்வர வேண்டும்" என்றார். மேலும், தி.மு.க-வின் 2021 தேர்தல் அறிக்கையில், `சென்னை - சேலம் எட்டுவழிச் சாலைத் திட்டம் நிறைவேற்றப்படாது" என வாக்குறுதி அளிக்கப்பட்டது.

அமைச்சர் எ.வ.வேலு
அமைச்சர் எ.வ.வேலு

இந்தச் சூழலில், தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்த பிறகு கடந்த வருடம் பத்திரிகையாளர்களைச் சந்தித்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, "இது முழுக்க முழுக்க மத்திய அரசின் திட்டம். இந்தத் திட்டத்தைத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம்தான் செயல்படுத்தும். `எட்டுவழிச் சாலைப் பணிகளைத் தொடங்கலாம்’ என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. அதன் அடிப்படையில் மத்திய அரசுதான் பணிகள் தொடங்குவது குறித்து முடிவுசெய்ய வேண்டும்.

இதில், கொள்கை முடிவை எடுக்கவேண்டிய நிலையில் தமிழக அரசு இருக்கிறது. எட்டுவழிச் சாலை என்பது சாதாரண சாலை அமைப்பது போன்ற பணி கிடையாது. ஆகவே, இதில் தமிழக முதல்வர் கொள்கை முடிவை எடுப்பார். ஆனாலும், இதில் தமிழக அரசின் ஒப்புதலும் தேவை என்பதால், இந்தத் திட்டம் குறித்து கொள்கை முடிவெடுக்கவேண்டிய தேவை இருக்கிறது" என பதிலளித்தார்.

எ.வ.வேலு-நிதின் கட்கரி
எ.வ.வேலு-நிதின் கட்கரி

அமைச்சரின் இத்தகைய பேச்சால் தமிழக அரசு மீண்டும் எட்டுவழிச் சாலை திட்டத்தைச் செயல்படுத்த முயற்சி மேற்கொள்வதாக எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில், சமீபத்தில், டெல்லியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை எ.வ.வேலு சந்தித்தார். பின்னர், அவர் நிருபர்களிடம் பேசுகையில், "மத்திய அரசு சாலை போட வேண்டும் என்று சொல்கிறபோது ஒரு கொள்கை முடிவு எடுத்துத்தான் பதில் சொல்ல முடியுமே தவிர நானாக இதைச் சொல்ல முடியாது என ஏற்கெனவே நான் சொல்லியிருக்கிறேன்.

இப்போதும் அதையே சொல்கிறேன். இதுவொரு கொள்கை முடிவு, கலந்து பேசித்தான் முடிவெடுக்க முடியும். சாலை போடுவதற்கு எப்போதும் தி.மு.க எதிர்ப்பாக இருந்தது என்பதெல்லாம் தவறான செய்தி. அப்படி நாங்கள் எப்போதும் எதிர்ப்பாக இருந்தது கிடையாது. ஆனாலும்கூட இது கொள்கை முடிவுதான். முதலமைச்சர்தான் இதில் முடிவெடுக்க முடியுமே தவிர நாங்கள் நேரடியாக முடிவெடுக்க முடியாது" என்று கூறினார்.

ஓ.பி.எஸ் - ஸ்டாலின்
ஓ.பி.எஸ் - ஸ்டாலின்

சேலம் - சென்னை எட்டுவழிச் சாலை தொடர்பான கேள்விக்கு, "சாலைத் திட்டங்களைச் செயல்படுத்தக் கூடாது என திமுக அந்தத் திட்டத்தை எதிர்க்கவில்லை. திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோதுகூட சம்பந்தப்பட்ட நிலத்தின் உரிமையாளர்களான விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றுதான் வலியுறுத்தினோம்" என்றார். எனினும், எதிர்க்கட்சியாக திமுக சென்னை சேலம் எட்டுவழிச் சாலை திட்டத்தைக் கடுமையாக எதிர்த்தது என்பதே உண்மை.

சேலம்-சென்னை எட்டுவழிச் சாலைத் திட்டத்தில் தி.மு.க இரட்டை நிலைப்பாட்டை கடைப்பிடிப்பதாகப் பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்திருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை-சேலம் எட்டுவழிச் சாலை திட்டத்திலும் இரட்டை நிலைப்பாட்டை தி.மு.க அரசு எடுத்திருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது பேட்டி அளித்த ஸ்டாலின், `கமிஷன் வாங்குவதற்காக மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் விவசாயத்தைப் பற்றிக் கவலைப்படாமல் 10 ஆயிரம் கோடி ரூபாய் திட்டத்தைக் கொண்டுவர அரசு முனைப்பாக இருக்கிறது' என்று குற்றம்சாட்டினார். தேர்தல் பிரசாரத்தின்போது, 'திமுக-வுக்கு வாக்களித்தால் சென்னை-சேலம் எட்டுவழிச் சாலைத் திட்டம் நிறுத்தப்படும்' என்று கூறினார். பொதுப்பணித்துறை அமைச்சரின் தற்போதைய பேட்டியின் மூலம் தி.மு.க-வுக்கு வரவேண்டியது வந்துவிட்டதோ என்ற சந்தேகம் மக்கள் மனதில் எழுந்திருக்கிறது" என்று கூறியிருக்கிறார்.

பழனியப்பன்
பழனியப்பன்

எட்டுவழிச் சாலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழனியப்பன், "எட்டுவழிச் சாலையால் எங்கள் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகின்றன என்று தொடர்ந்து குரல் எழுப்பிவருகிறோம். இப்போது மட்டுமல்ல, எப்போது இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டாலும் அதை எதிர்க்கத் தயாராக இருக்கிறோம். திமுக அரசு முதலில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த மாட்டோம் என்று உறுதிமொழி கொடுத்தது. ஆனால், அமைச்சர் எ.வ.வேலு மாற்றுவழிப்பாதையில் இந்தத் திட்டம் கொண்டுவரப்படும் என்கிறார். மாற்றுவழிப்பாதையில் கொண்டுவந்தாலும் விவசாயிகளும், விவசாய நிலங்களும்தானே பாதிக்கப்படுவார்கள்?" என்கிறார்.