Published:Updated:

தி.மு.க ‘தெறி’ திட்டம்! - பத்து அமைச்சர்களுக்குக் குறி!

ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டாலின்

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தேர்தலுக்கு முன்பாகவே தனது விராலிமலை தொகுதி மக்களுக்குப் பொங்கல் பரிசு கொடுத்து பரபரக்கவைத்தார்.

தி.மு.க ‘தெறி’ திட்டம்! - பத்து அமைச்சர்களுக்குக் குறி!

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தேர்தலுக்கு முன்பாகவே தனது விராலிமலை தொகுதி மக்களுக்குப் பொங்கல் பரிசு கொடுத்து பரபரக்கவைத்தார்.

Published:Updated:
ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டாலின்

மீண்டும் ஆட்சிக்கு அ.தி.மு.க வந்துவிடக் கூடாது என்று தீவிரம் காட்டும் அதேநேரத்தில், அந்தக் கட்சியில் எடப்பாடி, பன்னீர் உட்பட அமைச்சர்கள் பத்துப் பேர் மீண்டும் எம்.எல்.ஏ-வாகக்கூட சட்டசபைக்குள் வந்துவிடக் கூடாது என்று வேகம் காட்டுகிறது அறிவாலயம். தி.மு.க தலைமையின் அக்னி வளையத்துக்குள் சிக்கியிருக்கும் அந்தப் பத்துப் பேருக்கு எதிராக ஸ்பெஷல் வியூகம் வகுக்கப்படும் என்கிறார்கள் கட்சியின் மூத்த நிர்வாகிகள்.

‘அ.தி.மு.க-வுக்கு அமைப்புரீதியாகவும் நிதிரீதியாகவும் தூணாக இருக்கும் நபர்களுக்கு எதிராக இந்தத் தேர்தலில் வலுவான வேட்பாளர்களை நிறுத்த வேண்டும். இப்படிச் செய்து, அவர்கள் வேறு எங்கும் கவனம் செலுத்த முடியாதபடி தொகுதிக்குள்ளேயே முடக்க வேண்டும். அவர்களைத் தோற்கடித்துவிட்டால், ஏற்கெனவே பிளவுபட்டிருக்கும் அ.தி.மு.க-வை எதிர்காலத்தில் எழ முடியாமல் செய்துவிடலாம்’ என்பது தி.மு.க-வின் திட்டம். இது குறித்து தி.மு.க சீனியர் நிர்வாகி ஒருவர் நம்மிடம் பேசினார்.

“தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர், ராஜேந்திர பாலாஜி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார் ஆகியோர்தான் ஸ்டாலின் குறிவைத்திருக்கும் அதிகாரம்மிக்க நபர்கள். இந்த ஹிட் லிஸ்ட்டில் முதல் நபரே வேலுமணிதான். தொண்டாமுத்தூர் தொகுதியில் வேலுமணியுடன் மோதுவதற்குச் சரியான நபர் கார்த்திகேய சிவசேனாபதிதான் என்பது கட்சியின் கணிப்பு. கொங்கு மண்டலத்தில் குறிப்பிட்ட சமூகத்தின் மிக முக்கியமான பிரதிநிதியான அவரைக் களமிறக்கி, கூடவே கரன்சியையும் தாராளமாகச் செலவுசெய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கேற்ப தயாநிதி மாறன் இந்தத் தொகுதிக்குப் பொறுப்பாளராக நியமிக்கப்படுவாராம்.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தேர்தலுக்கு முன்பாகவே தனது விராலிமலை தொகுதி மக்களுக்குப் பொங்கல் பரிசு கொடுத்து பரபரக்கவைத்தார். அவருக்கு நிகராக செலவுசெய்ய விராலிமலையைச் சேர்ந்த பழனியப்பன் என்கிற தொழிலதிபரை பரிசீலித்துவருகிறது.

தி.மு.க ‘தெறி’ திட்டம்! - பத்து அமைச்சர்களுக்குக் குறி!

ஸ்டாலினை, தொடர்ந்து கடுமையாக விமர்சித்துவருபவர் ராஜேந்திர பாலாஜி. அ.தி.மு.க-வுக்குள்ளேயே ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான ஆட்களை வளைத்துப்போட்டு உள்ளடி வேலையைச் செய்யும் பொறுப்பு கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆரிடம் கொடுக்கப் பட்டிருக்கிறது. கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆரும் சிவகாசி தொகுதிக்கு வனராஜன் என்பவரைத் தனது சாய்ஸாகச் சொல்லியிருக்கிறார். அதேசமயம், காங்கிரஸ் கட்சியும் சிவகாசியை எதிர்பார்ப்பதால் இன்னும் முடிவாகவில்லை.

மதுரை மாவட்டம், திருமங்கலம் தொகுதியில் செல்வாக்காக வலம்வரும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், இப்போதே அம்மா சாரிடபிள் டிரஸ்ட் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிவருகிறார். அவரைச் சமாளிக்க, திருப்பரங்குன்றம் தி.மு.க எம்.எல்.ஏ-வான டாக்டர் சரவணனை நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சரவணனின் பூர்வீகம் திருமங்கலம் என்பதுடன், அவர் அங்கு சமூகரீதியாகவும் பலமாக இருக்கிறார்; கரன்சியையும் தாராளமாக இறைப்பார் என்பதால் இந்தத் திட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது.

கட்சியிலும் சமுதாயரீதியாகவும் செல்வாக்காக இருக்கும் சி.வி.சண்முகத்தை, விழுப்புரத்தில் வீழ்த்த சரியான நபர் பொன்முடிதான் என்பது கட்சித் தலைமையின் கணிப்பு. பொன்முடி மூன்று முறை அமைச்சராக இருந்து விழுப்புரத்துக்குக் கொண்டுவந்த திட்டங்களைப் பிரசாரம் செய்யத் திட்டமிட்டிருக்கிறது தி.மு.க. பொன்முடி திருக்கோவிலூர் தொகுதியைக் கேட்டாலும், கட்சித் தலைமை அவரை விழுப்புரத்தில் களமிறக்க வாய்ப்பு அதிகம்.

அரவக்குறிச்சி தொகுதியில் ஆர்வம்காட்டுகிறார் செந்தில் பாலாஜி. ஆனால், அவரை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு எதிராக கரூரில் நிறுத்த ஐபேக் ஆலோசனை கொடுத்திருக்கிறது. அமைச்சருக்கு எதிராகச் செலவு செய்யும் வல்லமை செந்தில் பாலாஜிக்கு மட்டுமே இருக்கிறது என்பது கட்சியின் கணிப்பு.

ஸ்டாலின், உதயநிதி இருவரையும் கடுமையாக வறுத்தெடுத்துவருகிறார் அமைச்சர் ஜெயக்குமார். ஐந்து முறை ராயபுரம் தொகுதியில் வெற்றிபெற்ற அவரை, இந்தமுறை தோற்கடித்தே தீர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் ஸ்டாலின். அதனால், வடசென்னையில் தனிச்செல்வாக்குடன் வலம்வரும் சேகர்பாபுவை ஜெயக்குமாருக்கு எதிராகக் களமிறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தி.மு.க ‘தெறி’ திட்டம்! - பத்து அமைச்சர்களுக்குக் குறி!

டெல்லி வியூகங்களை வகுத்து, எடப்பாடிக்கு எல்லா வகையிலும் துணையாக இருப்பவர் அமைச்சர் தங்கமணி. குமாரபாளையத்தில் அவருக்கு எதிராக நிறுத்துவதற்கு பள்ளிப்பாளையத்தைச் சேர்ந்த பெரும் தொழிலதிபர் ஒருவரிடம் தி.மு.க பேசிவருகிறது. விரைவில் முடிவு தெரிந்துவிடும்.

அ.தி.மு.க-வில் இருந்தபோதே பன்னீருக்கு எதிராக அரசியல் செய்தவர் தங்க தமிழ்ச்செல்வன். தற்போது தேனி மாவட்ட தி.மு.க-வில் முக்கிய நபராக வலம்வரும் அவரை போடி தொகுதியில் பன்னீருக்கு எதிராக நிற்கவைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. பன்னீரைத் தோற்கடித்தால் அமைச்சர் பதவி வழங்குவதாகவும் அவருக்கு உத்தரவாதம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், தமிழ்ச்செல்வன் தனது ஆண்டிபட்டி தொகுதியிலேயே கண்வைத்திருக்கிறார்.

தி.மு.க ‘தெறி’ திட்டம்! - பத்து அமைச்சர்களுக்குக் குறி!

இவர்களுக்கெல்லாம் உச்சமாக பர்கூரில் ஜெயலலிதாவைத் தோற்கடித்ததுபோல, எடப்பாடி பழனிசாமியை அவரது சொந்தத் தொகுதியான எடப்பாடியில் தோற்கடிக்க வேண்டும் என்பது ஸ்டாலினின் கனவு. அதற்காக பல்முனை யோசனையில் இருக்கிறது கட்சித் தலைமை. முதலில் எடப்பாடிக்கு எதிராக கனிமொழியை நிறுத்த திட்டமிட்டனர். ஆனால், கனிமொழி தயங்கியதால், மறைந்த வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன்கள் ராஜா அல்லது பிரபுவை நிறுத்த கட்சி பரிசீலித்துவருகிறது. அவர்கள் இருவருமே தயக்கம் காட்டினாலும், ‘முதல்வரையே ஜெயித்து வந்தால் நிச்சயம் அமைச்சர் பதவி தருவோம்’ என்று வலைவீசப்பட்டுள்ளது. மேலும், தொகுதியில் கணிசமாக இருக்கும் வன்னியர்களின் ஓட்டு கைகொடுக்கும் என்பதும் கட்சித் தலைமையின் நம்பிக்கை.

அ.தி.மு.க தலைகளை எதிர்த்து நிற்கும் இவர்கள் யாரும் இதனால் மனம் சோர்ந்துவிடக் கூடாது என்பதால், ‘ஜெயித்தாலும் தோற்றாலும் தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் பதவி நிச்சயம்’ என உறுதிமொழி கொடுக்கப்படுமாம். பார்க்கத்தானே போகிறோம், இந்த அரசியல் ஆட்டத்தை!