அரசியல்
Published:Updated:

ஆளுநர் ஒரு சமூக விரோதி, ராஜ் பவன் கழிவுகள் ஒதுங்கும் பகுதி! - தடதடக்கும் இராஜீவ் காந்தி

இராஜீவ் காந்தி
பிரீமியம் ஸ்டோரி
News
இராஜீவ் காந்தி

மத்திய அரசுதான் அதிகாரம் மிக்கது என்று மோடியின் கூட்டம் சொல்கிறது. ஆனால்,...

ஆளுநருடன் மோதல் போக்கு, அ.தி.மு.க-வின் நாற்காலிப் பிரச்னை, புதுக்கோட்டை விவகாரத்தில் தி.மு.க- மீது வைக்கப்படும் விமர்சனம், அண்ணாமலைக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் இஸட் ப்ளஸ் பாதுகாப்பு என தி.மு.க-வினரிடம் கேட்பதற்கு நிறைய கேள்விகள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் தி.மு.க மாணவரணி மாநிலத் தலைவர் இரா.ராஜீவ் காந்தியிடம் கேட்டேன்...

“ஆளுநருடன் தொடர்ந்து மோதல் போக்கைக் கடைப்பிடிப்பது தேவையில்லாத அரசியல் பதற்றத்தை ஏற்படுத்தாதா?”

“தனிப்பட்ட ரவியுடன் எங்களுக்கு எப்போதும் எந்த மோதலும் இல்லை. எங்களோடு மோதும் அளவுக்கு அவருக்குச் சித்தாந்தத் தெளிவோ அரசியல் முக்கியத்துவமோ இல்லை. ஆனால், ஆளுநராக அவர் அரசியலமைப்பின்படி செயல்படாமல் தொடர்ந்து சட்ட விரோதமாக, சமூக விரோதிபோலச் செயல்படுகிறார். தமிழ்நாட்டின் சமத்துவத்துக்கு எதிராக, சமூகநீதிக்கு எதிராகப் பேசிவருகிறார். சட்ட மன்றத்தின் மரபுகளையும், அரசியலமைப்பின் மாண்பையும் மீறுகிறார். பெரியார், அம்பேத்கர், அண்ணா, காமராஜர், கலைஞர் ஆகியோரின் பெயர்களைத் தவிர்க்கிறார். அதை சபா நாயகரின் அனுமதியுடன், முதலமைச்சர் தட்டிக்கேட்டார். ஆளுநராக அவரது வேலையை முறையாகச் செய்தால் நாங்கள் ஏன் முரண்படப் போகிறோம்?”

“தி.மு.க-வினர் ‘தமிழ்நாடு, தமிழகம்’ எனப் பயன்படுத்தலாம். ஆனால், ஆளுநர் பயன்படுத்தக் கூடாதா?”

“ ‘தமிழ்நாடு, தமிழகம், தமிழ் பேசும் பகுதி...’ என எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம். ஆனால், கொச்சைப்படுத்தும்விதமாக, ‘இந்த மாநிலத்தின் பெயர் `தமிழ்நாடு’ என்பதற்கு பதிலாக, `தமிழகம்’ என்றிருந்திருக்கலாம்’ என்று சொல்வதைத்தான் நாங்கள் கேள்வி கேட்கிறோம். ‘தமிழ்நாடு’ எனப் பெயர்வைக்க வேண்டும் எனச் சங்கரலிங்கனார் போராட்டத்தைத் தொடங்கினார். அதன் பிறகு பேரறிஞர் அண்ணாவால் நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டு, சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டு ‘தமிழ்நாடு’ எனப் பெயர் வைக்கப்பட்டது. இப்படிச் சித்தாந்தரீதியில் கொண்டுவந்த பெயரைக் களங்கப்படுத்தும் நோக்கோடு மிஸ்டர் ரவி பேசுவதைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம்.”

“தி.மு.க-வும்கூட ‘ஒன்றிய அரசு’ என்ற வார்த்தையை உள்நோக்கத்தோடுதானே பயன்படுத்துகிறது?”

“மத்திய அரசுதான் அதிகாரம் மிக்கது என்று மோடியின் கூட்டம் சொல்கிறது. ஆனால், ‘இந்தியா என்பதே ஒரு கூட்டாட்சிதான்; பல மாநிலங்களின் ஒன்றிணைப்புதான்’ என்பதை உணர்த்தத்தான் நாங்கள் ‘ஒன்றிய அரசு’ எனப் பயன்படுத்துகிறோம். ‘யூனியன் கவர்ன்மென்ட்’ என்பதும், ‘தமிழ்நாடு’ என்பதும் அரசியலமைப்பு எங்களுக்குக் கொடுத்த உரிமை. அதை நாங்கள் எப்படி விட்டுக்கொடுப்போம்?”

ஆளுநர் ஒரு சமூக விரோதி, ராஜ் பவன் கழிவுகள் ஒதுங்கும் பகுதி! - தடதடக்கும் இராஜீவ் காந்தி

“சமீபத்தில் நடந்த தேநீர் விருந்தில், ‘ராஜ் பவன் குட்டித் தமிழகமாக இருக்கிறது’ என்றிருக்கிறாரே ஆளுநர்?”

“அறிவிலிகள் எப்படி ஐ.பி.எஸ் தேர்வானார்கள் என்பது எனக்கு வியப்பை அளிக்கிறது. தமிழ்நாட்டு மக்களால் வெறுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட ஒத்த ஓட்டு அண்ணாமலை, சுயநலவாதி எடப்பாடி போன்றவர்கள் அந்தத் தேநீர் விருந்தில் கலந்து கொண்டிருக்கிறார்கள். ‘தமிழ்நாட்டு மக்களால் வெறுக்கப்படும் பகுதியில், தமிழ்நாட்டிலிருந்து கழித்துக்கட்டப்பட்டவர்கள் பங்கெடுத்துக் கொண்ட விருந்து’ என்று வேண்டுமானால் அந்த நிகழ்வைச் சொல்லலாம். ஆக, ராஜ் பவன் குட்டித் தமிழகமாக அல்ல... கழிவுகள் ஒதுங்கும் பகுதியாகத்தான் மாறியிருக்கிறது.”

“மத்திய அரசின் கடிதங்களில், ‘இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி’ எனக் குறிப்பிடப்படுகிறது. ஆனாலும் தி.மு.க அரசு, சட்டமன்றத்தில் அ.தி.மு.க-விடம் அரசியல் செய்கிறதே?”

“எங்களைப் பொறுத்தவரை அ.தி.மு.க விவகாரத்தில் தேர்தல் ஆணையம்தான் முடிவெடுக்க வேண்டும். ஓர் எஜமான் தன் அடிமைகளை எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம். அதையெல்லாம் நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமா என்ன... அது மட்டுமல்ல, இவர்கள் கேட்கும் நாற்காலி விவகாரம் உயிர்போகும் பிரச்னை ஒன்றுமல்ல. சண்டையை முடித்துவிட்டு வரட்டும் என்றுதான் சொல்கிறோம்.”

“புதுக்கோட்டை விவகாரத்தை வாக்குவங்கி அரசியலாக்கப் பார்க்கிறதா தி.மு.க அரசு?”

“நிச்சயம் இல்லை. சாதி இரண்டாயிரம் ஆண்டுக்கால அழுக்கு. 50 ஆண்டுக்கால திராவிட ஆட்சியில் அதைக் கொஞ்சம் மட்டுமே அகற்ற முடிந்திருக்கிறது. மேலும், அதைச் சரியாக, முழுவதுமாக அகற்ற வேண்டும் என தி.மு.க நினைக்கிறது. அதே புதுக்கோட்டையில் இரண்டு பெண் அதிகாரிகள், தலித் மக்களை அழைத்துக்கொண்டு கோயிலுக்குள் சென்றதும் இதே தி.மு.க ஆட்சியில்தான் நடந்திருக்கிறது. புதுக்கோட்டை விவகாரத்தில் சமூகப் பதற்றம் வந்துவிடக் கூடாது என்பதற்காகப் பொறுமையாகக் கையாண்டுவருகிறோம்.”

“இது குறித்து சமூக நலத்துறை அமைச்சர் வாயே திறக்காதபோது, நீங்கள் சொல்லும் இந்த பதில்களையெல்லாம் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?”

“ ‘அமைச்சர் புதுக்கோட்டை விவகாரம் குறித்துப் பேச வேண்டும், அங்கே போக வேண்டும்’ என்ற கோரிக்கையில் நியாயம் இருப்பதாகத் தெரியலாம். ஆனால், அரசு அந்த விவகாரத்தைப் புறந்தள்ளவில்லை. குழு அமைத்து, விசாரணை அதிகாரிகளை நியமித்திருக்கும் அரசின் நடவடிக்கையே அதற்குச் சாட்சி.”

“தமிழ்நாட்டில், ‘அண்ணாமலைக்குப் பாதுகாப்பு இல்லை’ என்பதற்காகத்தானே அவருக்கு இஸட் பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது?”

“பலரின் வீடியோ, ஆடியோவை அண்ணாமலை வெளியிட்டிருக்கிறார்... இன்னும் வைத்திருக்கிறார். இந்த நிலையில், தன்னுடைய வீடியோவை யாரும் எடுத்துவிடுவார்களோ என்ற அச்சத்தில், ஒன்றிய அரசிடம் பேசி அந்தப் பாதுகாப்பைக் கேட்டு வாங்கியிருக்கிறார். நடிகை காயத்ரியின் மிரட்டலுக்காகக் கொடுக்கப்பட்ட பாதுகாப்பையெல்லாம் பெரிதாக்கத் தேவையில்லை.”