Published:Updated:

எச்சரித்த எடப்பாடி; கடுப்பைக் காட்டிய பொன்முடி! - இடைத்தேர்தல் முடிவுகளால் கலங்கும் தி.மு.க.

பிரசாரத்தில் ஸ்டாலின்

விக்கிரவாண்டி தொகுதியில் பொன்முடியின் கோரிக்கையை நிராகரித்துவிட்டு, வேறு யாரை நிறுத்தியிருந்தாலும் கட்சிக்கு உறுதியான வெற்றி கிடைத்திருக்கும்.

எச்சரித்த எடப்பாடி; கடுப்பைக் காட்டிய பொன்முடி! - இடைத்தேர்தல் முடிவுகளால் கலங்கும் தி.மு.க.

விக்கிரவாண்டி தொகுதியில் பொன்முடியின் கோரிக்கையை நிராகரித்துவிட்டு, வேறு யாரை நிறுத்தியிருந்தாலும் கட்சிக்கு உறுதியான வெற்றி கிடைத்திருக்கும்.

Published:Updated:
பிரசாரத்தில் ஸ்டாலின்

`அதர்மத்தைத் தோற்கடித்து தர்மம் வென்றுள்ளது' என பூரிப்பை வெளிப்படுத்துகிறார் அமைச்சர் ஜெயக்குமார். `எங்கள் வெற்றி உறுதியாகிவிட்டது' என உற்சாகப்படுகிறார் ஓ.பி.எஸ். `உள்ளாட்சித் தேர்தலுக்கான முன்னோட்டம் மட்டுமல்ல, அடுத்து வரக் கூடிய ஆட்சியும் எங்களுடையதுதான்' என மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்கின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள். ஒற்றைக் காரணம், நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அண்ணா தி.மு.க-வுக்குக் கிடைத்திருக்கும் வெற்றிகள்தான்.

பிரசாரத்தில் அ.தி.மு.க அமைச்சர்கள்
பிரசாரத்தில் அ.தி.மு.க அமைச்சர்கள்

ஒவ்வொரு தேர்தலிலும் வெற்றி தோல்வி குறித்து ஆராயும் தி.மு.க, இந்தமுறை மவுனத்தையே பதிலாகத் தரப் போகிறது என்கின்றனர் உடன்பிறப்புகள். ` காரணம், ஸ்டாலின், உதயநிதி ஆகிய இருவர் மட்டுமே மேற்கொண்ட பிரசார யுக்திகள்தான். நாடாளுமன்றத் தேர்தலில் கிடைத்த வெற்றியை அப்படியே தக்கவைக்க முடியாமல் போனதற்குக் காரணம், நமக்கு எதிரியே இல்லை என தி.மு.க தலைமை உறுதியாக நம்பியதுதான்' எனவும் கோடிட்டுக் காட்டுகின்றனர் அறிவாலய நிர்வாகிகள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

`` இரண்டு தொகுதிகளையும் சவாலாகக் கருதி வேலை பார்த்தாலும், தி.மு.க கொடுத்தத்தைவிட இரண்டு மடங்குப் பணத்தை வாரியிறைத்தது அ.தி.மு.க. ஆட்சியில் இருப்பவர்கள் இந்தத் தேர்தலை கௌரவப் பிரச்னையாகப் பார்த்தார்கள். நாங்குநேரியில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் வேட்பாளரான ரூபி மனோகரனுக்குப் போதிய ஒத்துழைப்பைக் கொடுத்தோம். வெற்றி என்பது தட்டிப் பறிக்கக் கூடிய தூரத்தில்தான் இருந்தது. ஆனால், வசந்தகுமாரோ, கே.எஸ்.அழகிரியோ போதிய ஆர்வத்தைக் காட்டவில்லை. பணமும் பெரிதாக செலவழிக்கப்படவில்லை. `எம்.பி தேர்தலில் நிறைய செலவழித்துவிட்டோம்' என காங்கிரஸ் தரப்பில் ஒதுங்கிக்கொண்டனர். இவை எல்லாம் அ.தி.மு.க-வுக்குச் சாதகமான அம்சங்களாக மாறிவிட்டன" என விவரித்த தி.மு.க நிர்வாகிகளிடம்,

பிரசாரத்தில் ஸ்டாலின்
பிரசாரத்தில் ஸ்டாலின்

`` விக்கிரவாண்டி தோல்விக்கு என்னதான் காரணம்?'' என்றோம்.

`` அங்கு பிரச்னையே பொன்முடிதான். அங்கு எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்தான் மூத்த மாவட்டச் செயலாளராக இருக்கிறார். இந்தக் கட்சியில் ஐ.பெரியசாமிக்கு அடுத்ததாக எம்.ஆர்.கே இருக்கிறார். அவருக்கு அடுத்ததாகத்தான் நேரு உள்ளிட்டவர்கள் வருகிறார்கள். அப்படிப்பட்ட எம்.ஆர்.கே-வுக்குக் கூட அந்த மாவட்டத்தில் மரியாதை கிடையாது. கட்சியில் புதிதாக சேரவந்த வன்னிய சமூகத்தின் முக்கிய நிர்வாகிகளை கட்சியில் சேரவிடாமல் தடுத்தவர் பொன்முடி. மாவட்டத்தில் உள்ள முக்கிய சமூகங்களின் விரோதியாகப் பார்க்கப்படுகிறார் பொன்முடி. விக்கிரவாண்டி தொகுதியில் பொன்முடியின் கோரிக்கையை நிராகரித்துவிட்டு, வேறு யாரை நிறுத்தியிருந்தாலும் கட்சிக்கு உறுதியான வெற்றி கிடைத்திருக்கும். தேர்தல் வேலை பார்க்க வந்தவர்களிடம்கூட அவர் கடுமையைக் காட்டிய சம்பவங்களும் நடந்தன" என விவரித்தவர்கள்,

`` விக்கிரவாண்டி தேர்தலில் `ஆன்டி பொன்முடி' நன்றாக வேலை செய்துவிட்டது. ராமதாஸும் அன்புமணியும் நேரடியாகக் களமிறங்கியதும் அ.தி.மு.க-வின் வெற்றிக்குச் சாதகமாகிவிட்டது. தொகுதியில் பெருகியிருக்கும் வன்னியர்களின் வாக்குகளைப் பெறுவதற்கு தி.மு.க நிர்வாகிகள் போதிய அக்கறையைக் காட்டவில்லை. இன்று காலை முதலே வாக்கு எண்ணிக்கை நிலவரங்களை அதிர்ச்சியோடு கவனித்துக்கொண்டிருந்தார் ஸ்டாலின். தேர்தல் பணிகளுக்காக களத்துக்கு வந்த பல மாவட்ட செயலாளர்களிடம், ` நீங்கள் வரவே வேண்டாம், பணம் மட்டும் கொடுத்தால் போதும்' எனத் தலைமை கூறிவிட்டது.

அவர்களும், தங்களால் முடிந்த அளவு 10 லட்சம், 15 லட்சம் எனப் பணத்தைக் கொடுத்துவிட்டு ஒதுங்கிவிட்டனர். ஸ்டாலினும் உதயநிதியும் மட்டுமே பிரசாரம் செய்தார்கள். `நாம் நிச்சயம் வெற்றி பெற்றுவிடுவோம்' என நம்பிக்கையோடு இருந்தனர். அந்த நம்பிக்கை பொய்த்துப் போய்விட்டது. ராமதாஸின் கருத்துகளுக்கு எதிராகப் பிரசாரம் செய்வதற்குப் போதுமான நிர்வாகிகள், விக்கிரவாண்டியில் இல்லை என்பதுதான் உண்மை. வரக் கூடிய 2021 சட்டமன்றத் தேர்தலை வலுவாக எதிர்கொள்ள முடியாத அளவுக்கு, இடைத் தேர்தல் தோல்வி பலவீனப்படுத்திவிட்டது" என்கின்றனர் ஆதங்கத்துடன்.

பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி
பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றி தொடர்பாக நம்மிடம் பேசிய அ.தி.மு.க நிர்வாகிகள், `` விக்கிரவாண்டி வேட்பாளராக முத்தமிழ்ச் செல்வன் அறிவிக்கப்பட்ட தேதியில் இருந்தே, அமைச்சர்கள் பம்பரமாகச் சுழன்று வேலை பார்த்தனர். தொகுதியில் உள்ள வன்னிய சமூக வாக்குகள், பட்டியலின மக்களின் வாக்குகள் ஆகியவற்றைக் கழகத்துக்கு அப்படியே கொண்டு வந்து சேர்க்கும் வகையில் திட்டங்கள் வகுக்கப்பட்டன. தினம்தோறும் களநிலவரம் தொடர்பான அறிக்கைகளைக் கேட்டுப் பெற்றுவந்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இதுகுறித்து மாவட்ட அமைச்சர்களிடம் பேசும்போது, ``இரண்டு தொகுதிகளிலும் நாம் உறுதியாக வெற்றி பெற்றாக வேண்டும். அப்படி, வெற்றி பெறாவிட்டால் அம்மா என்ன மாதிரியான நடவடிக்கையை எடுப்பாரோ, அதே நடவடிக்கையை நிச்சயமாக எடுப்பேன். இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால்தான் உள்ளாட்சியில் வலுவாக இறங்க முடியும். தேர்தல் களத்தில் அ.ம.மு.க, மக்கள் நீதி மய்யம் போன்ற கட்சிகள் இல்லை.

கூட்டணிக் கட்சிகளுக்கு நம்பிக்கையைக் கொடுக்க வேண்டும் என்றால், நம்முடைய வெற்றி உறுதிப்படுத்தப்பட வேண்டும். பா.ம.க தனித்துப் போட்டியிட்டு 54,000 வாக்குகளை வாங்கிய தொகுதி இது. பா.ம.க நிர்வாகிகளை நன்றாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். விக்கிரவாண்டியில் நாம் வெற்றி பெறவில்லையென்றால், எதாவது ஒரு காரணத்தைக் கூறிவிட்டு நீங்களே பதவியில் இருந்து விலகிக்கொள்ளுங்கள்' என எச்சரித்திருந்தார்.

கூடவே, ராமதாஸ், அன்புமணி ஆகியோர் நேரடியாகப் பிரசாரத்தில் களமிறங்கியதும் தி.மு.க முன்வைத்த விமர்சனங்களுக்குப் பா.ம.க கொடுத்த பதிலடிகளும் வன்னிய சமூக மக்கள் மத்தியில் ஆதரவு வளையத்தை உருவாக்கியது. பொன்முடிக்கு எதிரான உள்கட்சி மோதலும் எங்களுக்குப் ப்ளஸ்ஸாக மாறிவிட்டது. நாங்குநேரி வெற்றிக்கும் காங்கிரஸ் கட்சியினரின் செயல்பாடுகள் பிரதான காரணமாக அமைந்தன. அதனால்தான் கழக வேட்பாளர் நாராயணனால் வெற்றி பெற முடிந்தது. இனி உள்ளாட்சித் தேர்தலை நம்பிக்கையோடு எதிர்கொள்வோம்" என்கின்றனர் உற்சாகத்துடன்.

பிரசாரத்தில் ஸ்டாலின்
பிரசாரத்தில் ஸ்டாலின்

`` கனிமொழியைக் களமிறக்காததுதான் தேர்தல் தோல்விக்குக் காரணம். அவர் வந்திருந்தால் நாங்குநேரியில் காங்கிரஸ் கட்சிக்கு ஓரளவு வாக்குகள் கிடைத்திருக்கும். விக்கிரவாண்டியிலும் கனிமொழி களமிறக்கப்படவில்லை. அதேபோல், வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் உட்பட சமூக ரீதியாகவும் சிலரைக் களமிறக்காமல் தி.மு.க நிர்வாகிகள் தவிர்த்தனர். இவையெல்லாம் ஒன்று சேர்ந்து அ.தி.மு.க-வின் வெற்றியை உறுதிப்படுத்திவிட்டன. இனி வரும் தேர்தல் பிரசாரங்களில் ஸ்டாலின், உதயநிதி ஆகிய இருவர் மட்டுமே போதும் என்ற தலைமையின் மனநிலையில் மாற்றம் வரும் என எதிர்பார்க்கிறோம்" என கவலை தோய்ந்த குரலில் பேசுகின்றனர் அறிவாலய நிர்வாகிகள்.