Published:Updated:

`உங்கள் மசோதாக்களிலேயே இதுதான் ஏற்றுக்கொள்ளக்கூடியது, ஆனால்...!’ - நாடாளுமன்றத்தில் தகித்த கனிமொழி

பட்டியலின பிரிவினருக்கான சட்டமன்ற, நாடாளுமன்ற இட ஒதுக்கீடு இன்னும் 10 ஆண்டுகளுக்கு நீட்டிக்கும் மசோதாவுக்கு தி.மு.க ஆதரவளித்துள்ளது.

கனிமொழி
கனிமொழி

நாடாளுமன்றத்தில் நடந்துவரும் குளிர்காலக் கூட்டத்தொடரில் மத்திய அரசு பல்வேறு மசோதாக்களை நிறைவேற்றி வருகிறது. ஒவ்வொரு மசோதா நிறைவேற்றப்படும்போதும் பல்வேறு விவாதங்கள் நடைபெறுகின்றன. அதன் வரிசையில் நேற்று பட்டியலின பிரிவினருக்கான சட்டமன்ற, நாடாளுமன்ற இட ஒதுக்கீட்டை மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டிக்கும் சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

கனிமொழி
கனிமொழி

இந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்த தி.மு.க எம்.பி கனிமொழி, மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு கேள்விகளையும் முன்வைத்துள்ளார். நாடாளுமன்றத்தில் பேசிய கனிமொழி, ``பட்டியலின மக்களின் இட ஒதுக்கீடு நீட்டிப்பு மசோதாவை முழுமையாக நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். இந்த அரசு கொண்டுவரும் மசோதாக்களில் துரதிர்ஷ்டவசமாக இந்த மசோதா மட்டுமே ஏற்றுக்கொள்ளும்படியாக இருக்கிறது என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். ஆனால், இந்த மசோதாவின் மீது சில சந்தேகங்களும் உள்ளன. ஆங்கிலோ இந்தியன் சமூகத்துக்கான இடஒதுக்கீடு இந்த மசோதாவில் எங்கும் குறிப்பிடப்படவில்லை என்று அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தனது உரையின்போது தெரிவித்தார். ஆங்கிலோ இந்தியன் சமூகம் இந்த நாட்டுக்காக பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பங்காற்றியுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 50,000 ஆங்கிலோ இந்தியன்ஸ் சமூகத்தினர் வாழ்கிறார்கள். நாடு முழுவதும் அவர்கள் சுமார் மூன்று லட்சம் எண்ணிக்கைக்கு மேல் இருக்கக்கூடும். இன்னும் சொல்லப்போனால் 13 மாநிலங்களில் ஆங்கிலோ இந்தியன் சமூகத்தினர் சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்றிருக்கிறார்கள். குறிப்பாகத் தென்னிந்திய மாநிலங்களில் 5 சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்றுள்ளனர்.

இந்த நிலையில், ஆங்கிலோ இந்தியன்ஸ் சமூகத்தினருக்கான இடஒதுக்கீடு நீட்டிப்பது பற்றி ஏன் இந்த மசோதாவில் குறிப்பிடப்படவில்லை. இந்த மசோதாவைப் பற்றி மாநில அரசுகளிடம் ஏதாவது விவாதித்தீர்களா? மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து கூட்டாட்சியில் தலையிடுவதே மத்திய அரசுக்கு வேலையாகப் போய்விட்டது. ஒவ்வொரு மசோதாவிலும் இதுவே நடந்துகொண்டிருக்கிறது. நீங்கள் பெரும்பான்மை பெற்றுவிட்ட ஒரே காரணத்தால் சிறுபான்மையின மக்களைத் தொடர்ந்து துன்புறுத்த வேண்டும் என அர்த்தம் கிடையாது. அனைவரையும் உள்ளடக்கியதுதான் ஜனநாயகம் என்பதை இங்கே நினைவுபடுத்த விரும்புகிறேன்’ எனக் கூறிய அவர்,

கனிமொழி
கனிமொழி

தொடர்ந்து, ``பட்டியலின மக்களுக்கான இடஒதுக்கீடு நீட்டிக்கப்படுவதை முழுமனதோடு வரவேற்கிறோம். ஆனால், அந்த மக்கள் பிற மக்களுடன் சாதாரணமாகச் சேர்ந்து வாழமுடியாத நிலை இன்னும் உள்ளது. இதற்காக நாம் வெட்கப்பட வேண்டும். மேலும், மத்திய அரசுப் பணிகளில் 90% பேர் பணியாற்றும் 10 முக்கியமான துறைகளில் எஸ்.சி பிரிவினருக்கான 8223 பணியிடங்கள் இன்னும் காலியாகவே இருக்கின்றன. அதேபோல எஸ்.டி பிரிவினருக்கான 6925 பணியிடங்கள் இன்னும் நிரப்பப்படாமல் இருக்கின்றன. மத்திய அரசு இந்தப் பணியிடங்களை நிரப்பாமல் இருக்க விரும்பும் காரணம் என்ன?

`ஐ.ஐ.டி பேராசிரியர்கள் மீது ஏன் எஃப்.ஐ.ஆர் பதிவாகவில்லை?!' -நாடாளுமன்றத்தில் கொந்தளித்த கனிமொழி

பட்டியலின மக்களின் முன்னேற்றத்தில் கல்வித்துறை ஒரு பெரும்பங்கு வகிக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். ஆனால், அந்த மாணவர்களின் ஸ்காலர்ஷிப் தொகை பெருமளவுக்கு இன்னமும் அவர்களுக்குச் சென்று சேராத நிலை இருக்கிறது. இதனால் நிர்வாகக் கோட்டாவில் சேரும் பல பட்டியலின மாணவர்கள் நெருக்கடியான நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். மத்திய அரசு தமிழகத்தைச் சேர்ந்த பட்டியலின மாணவர்களுக்கு வழங்க வேண்டிய 384 கோடி ரூபாய் உதவித் தொகையை இன்னமும் வழங்காமல் வைத்திருக்கிறது. இப்படிப்பட்ட அணுகுமுறைகளால் எப்படி பட்டியலின சமுதாயத்தை முன்னேற்ற முடியும்?

கனிமொழி
கனிமொழி

நாட்டிலுள்ள 13 ஐ.ஐ.எம் உயர்கல்வி நிறுவனங்களில் பெங்களூரு ஐ.ஐ.எம் நடத்திய ஒரு சர்வேயின்படி மொத்தமுள்ள 642 ஆசிரியர் பணியிடங்களில் எஸ்.சி பிரிவினர் 4 பேர்தான், எஸ்.டி பிரிவில் ஒரே ஒருவர் மட்டும்தான். சென்னை ஐ.ஐ.டி-யிலும் இதே நிலைதான். கடந்த 10 ஆண்டுகளில் 3,848 முனைவர் இருக்கைக்கான சேர்க்கையில் பட்டியலின பிரிவினருடையது 234 மட்டும்தான். இதுதான் அறிவுத் தீண்டாமையா? ரோஹித் வெமுலா என்ற மாணவன் தற்கொலை செய்துகொள்வதற்கு முன், `சமத்துவம் நிராகரிக்கப்படும்போது எல்லாமே நிராகரிக்கப்படுகிறது’ என்று கூறினார். எனவே, இட ஒதுக்கீட்டை நீட்டிப்பதன் மூலம் மட்டுமல்ல, பல்வேறு வகைகளிலும் பட்டியலின சமுதாயத்தினரை முன்னேற்ற, மத்திய அரசு முன்வர வேண்டும். அந்த மக்களுக்கான சுயமரியாதையும், சமத்துவமும் பாதுகாக்கப்பட வேண்டும்” என்று பேசினார்.