Published:Updated:

திமுக-வின் `பி’ டீமா ஓ.பி.எஸ்?! - இ.பி.எஸ் குற்றச்சாட்டும் உள்ளரசியலும்!

ஓபிஎஸ் - இபிஎஸ் - ஸ்டாலின்

அதிமுக-வின் இரட்டைத் தலைமைகளாக ஒன்றாகப் பயணித்த ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் மாறி மாறிக் குற்றக்கணைகளை வீசுவது அதிமுக வட்டாரத்தில் அனலாக தகிக்கிறது.

திமுக-வின் `பி’ டீமா ஓ.பி.எஸ்?! - இ.பி.எஸ் குற்றச்சாட்டும் உள்ளரசியலும்!

அதிமுக-வின் இரட்டைத் தலைமைகளாக ஒன்றாகப் பயணித்த ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் மாறி மாறிக் குற்றக்கணைகளை வீசுவது அதிமுக வட்டாரத்தில் அனலாக தகிக்கிறது.

Published:Updated:
ஓபிஎஸ் - இபிஎஸ் - ஸ்டாலின்

``ஓ.பன்னீர்செல்வத்தை `பி’ டீமாக வைத்துக்கொண்டு அதிமுக-வைப் பிளக்கப் பார்க்கிறார் ஸ்டாலின். சட்டமன்றம் முடிந்த பிறகும் ஓ.பி.எஸ்-ஸும் ஸ்டாலினும் சந்தித்துக்கொண்டார்கள்'' என எடப்பாடி பழனிசாமி ஒரு குற்றச்சாட்டைப் பற்றவைக்க, ``முதலமைச்சர் ஸ்டாலினை நான் சந்தித்ததாக அவர்கள் சொல்வதை நிரூபித்தால் அரசியலிலிருந்து விலகத் தயார். அப்படி நிரூபிக்க முடியாவிட்டால் எடப்பாடி பழனிசாமி விலகத் தயாரா?'' என சரவெடியாக வெடித்திருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். திமுக-வை முன்வைத்து இ.பி.எஸ்., ஓ.பி.எஸ் இடையே நிகழும் இந்தக் கருத்து யுத்தத்தின் பின்னணி என்ன?

அதிமுக போராட்டம்
அதிமுக போராட்டம்

தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் விவகாரத்தில் சபாநாயகர் முடிவெடுக்காததைக் கண்டித்து அதிமுக சார்பில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்தப் போராட்டத்துக்கு, சட்டம்-ஒழுங்கு பிரச்னையைக் காரணம் காட்டி காவல்துறை அனுமதியளிக்க மறுத்துவிட்டது. ஆனால், அனுமதி மறுக்கப்பட்ட நிலையிலும், எடப்பாடி மற்றும் அதிமுக நிர்வாகிகள், திட்டமிட்டபடி வள்ளுவர் கோட்டத்துக்கு கறுப்புச் சட்டை அணிந்து வந்து தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி,

``ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக சபாநாயகர் செயல்படுவது பச்சையாகத் தெரிகிறது. ஸ்டாலினின் ஆணைக்கிணங்க பேரவைத்தலைவர் செயல்படுகிறார். கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டவர்கள் நீக்கப்பட்டுவிட்டனர். ஆனால், ஓ.பன்னீர்செல்வத்தை `பி’ டீமாக வைத்துக்கொண்டு அதிமுக-வை பிளக்கப் பார்க்கிறார். அது ஒருபோதும் நடக்காது. அரசியல்ரீதியாக எதிர்க்க முடியாமல் திராணியற்று திமுக தலைவர் ஓ.பன்னீர்செல்வத்தைப் பயன்படுத்தி எங்களை வீழ்த்தப் பார்க்கிறார். அது ஒருபோதும் நடக்காது. சட்டமன்றம் முடிந்த பிறகு, அரை மணி நேரம் ஸ்டாலினும் ஓ.பன்னீர்செல்வமும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஸ்டாலின் ஆலோசனைப்படிதான் ஜூலை 11-ம் தேதி பொதுக்குழுவுக்கு வராமல் தலைமைக்கழகத்துக்குச் சென்று சேதப்படுத்தியிருக்கிறார்'' என்கிற கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

பாபு முருகவேல்
பாபு முருகவேல்

இதற்கு பதிலளித்துப் பேசிய ஓ.பன்னீசெல்வம்,

``தி.மு.க-வின் `பி’ டீம் என என்னைச் சொல்கிறார்களா... யார்மீது குற்றம் என தமிழக மக்களுக்குத் தெரியும். நேற்று நான் சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஸ்டாலினைச் சந்தித்ததாக அவர் (இபிஎஸ்) குற்றம்சாட்டியிருக்கிறார். இதுவரை நான் கடுமையான சொல்லை யாரைப் பார்த்தும் சொன்னதில்லை. முதலமைச்சர் ஸ்டாலினை நான் சந்தித்ததாக அவர்கள் சொல்வதை நிரூபித்தால் அரசியலிலிருந்து விலகத் தயார். அப்படி நிரூபிக்க முடியாவிட்டால் எடப்பாடி பழனிசாமி விலகத் தயாரா என்று நான் கேட்டிருக்கிறேன். அதற்கு உரிய பதிலை அவர் முதலில் சொல்லட்டும். அதிமுக-வின் 50-ம் ஆண்டு நிறைவுவிழாவைக் கொண்டாடிவரும் இந்த நேரத்தில், கட்சிக்குள் விரும்பத்தகாத பிரச்னைகளை உருவாக்கியது யார் எனத் தொண்டர்களுக்கும், மக்களுக்கும் நன்றாகத் தெரியும். இவ்வளவு பெரிய பாவத்தைச் செய்துவிட்டு அடுத்தவர் மீது பழி போடுவது ஏற்புடையது அல்ல. மெதுவாக ஊர்ந்து ஊர்ந்து சென்று பதவிகளை வாங்கியது யார் என்றும், நம்பிக்கை துரோகம் செய்தது யார் என்றும் மக்களுக்கும்... அரசியல் தெரிந்தவர்களுக்கும் நன்கு தெரியும்' எனப் பேசியிருந்தார். அதிமுக-வின் இரட்டைத் தலைமைகளாக ஒன்றாகப் பயணித்தவர்கள், மாறி மாறி குற்றக்கணைகளை வீசுவது அதிமுக வட்டாரத்தில் அனலாகத் தகிக்கிறது.

இந்த நிலையில், அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் பாபு முருகவேலிடம் பேசினோம்...

``நிரூபிக்க முடியாத அளவுக்குத் தவறு செய்திருக்கிறேன் என்பதைத்தான் ஓ.பி.எஸ் முடிந்தால் நிரூபியுங்கள் என்று சொல்கிறார். அம்மா மரணத்தில் யார்மீது குற்றம் சொன்னாரோ, அவர்மீதே விசாரணை ஆணையத்தில் சந்தேகம் இல்லை என்று சொன்னவர். அவர் என்ன செய்கிறாரோ, அவர் நடவடிக்கைகள் என்னவோ அதை வைத்துத்தான், அவர் திமுக-வின் `பி’ டீம் என எடப்பாடி சொல்கிறார். மகன் மூலமாகவும் வேறு சில உறவினர்களின் மூலமாகவும் திமுக-வினருடன் தொடர்பில்தான் இருக்கிறார். ஒரிஜினல் அதிமுககாரனின் செயல்பாட்டைப்போல, ஓ.பி.எஸ்-ஸின் செயல்பாடுகள் இல்லை. அதிமுக-வின் பிரதான கொள்கை, நிலைப்பாடே திமுக எதிர்ப்புதான். அந்த திமுக எதிர்ப்பு என்கிற நிலைப்பாடு அவரிடம் சுத்தமாக இல்லை. அவரின் நடவடிக்கைகள் இவ்வளவு காலம் சந்தேகத்துக்கு உரியதாக இருந்தன. சமீபகாலமாக, அதை உறுதி செய்வதைப்போல சில விஷயங்களை அவர் செய்கிறார்'' என்கிறார் அவர்.

- கோவை செல்வராஜ்
- கோவை செல்வராஜ்

ஓ.பி.எஸ் மீதான இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து, அவரின் ஆதரவாளரான கோவை செல்வராஜிடம் பேசினோம்.

``அதிமுக-வை நான்காக உடைத்து, கட்சியைச் சின்னா பின்னமாக்கியது எடப்பாடி பழனிசாமிதான். இனிமேல் இந்தக் கட்சியை உடைப்பதற்கு என்ன இருக்கிறது... தமிழ்நாடு முதலமைச்சருக்கு அந்த வேலையும் இல்லை. தமிழ்நாடு முதலமைச்சரைப் பற்றிப் பேசுவதற்கு முதலில் எடப்பாடி பழனிசாமிக்கு என்ன தகுதியிருக்கிறது... கட்சியில் ஒரு பிரச்னை வந்தால் எல்லோரையும் கூப்பிட்டுப் பேசி, ஒருங்கிணைப்பதுதான் ஒரு தலைவரின் வேலையாக இருக்க வேண்டும். அந்தப் பணியை தமிழ்நாடு முதல்வர் சிறப்பாகச் செய்துகொண்டிருக்கிறார். ஆனால், எடப்பாடி பழனிசாமி, 17 வருடங்கள் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரும், 28 ஆண்டுகளாக புரட்சித்தலைவி அம்மாவும் கடுமையாக உழைத்து உருவாக்கிய இயக்கத்தை குரங்கு கையில் சிக்கிய பூமாலையைப்போல சிதைத்துக்கொண்டிருக்கிறார். நடக்காத ஒன்றை நடந்ததுபோலச் சொல்கிறார் அவருக்கு இது போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்க, எந்த யோக்கியதையும், தகுதியும் கிடையாது'' என்கிறார் அவர்.