அலசல்
Published:Updated:

விரைவில் அ.தி.மு.க பிளவுபடும்! - தங்க தமிழ்ச்செல்வன் தடாலடி...

தங்க தமிழ்ச்செல்வன்
பிரீமியம் ஸ்டோரி
News
தங்க தமிழ்ச்செல்வன்

இதுநாள்வரை வெளிவராத ஸ்லீப்பர் செல்கள், இனிமேல்தான் வெளியே வரப்போகிறார்களா என்ன...

சசிகலா வருகையை அடுத்து, ‘நன்றி மறந்த துரோகிகள்’ என்று அ.ம.மு.க-வினரும், ‘அம்மா ஆட்சியைக் கவிழ்க்க நினைத்த துரோகிகள்’ என்று அ.தி.மு.க-வினரும் மாறி மாறி ‘உண்மை’களைச் சொல்லிவருகிறார்கள். இந்தச் சூழலில்தான், அ.தி.மு.க மற்றும் அ.ம.மு.க-வில் நீந்தி, இறுதியாக தி.மு.க-விடம் கரைசேர்ந்திருக்கும் அந்தக் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரான தங்க தமிழ்ச்செல்வனிடம் பேசினேன்...

“அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனுடன்தானே உங்களுக்குப் பிரச்னை... சசிகலாவுக்கு விசுவாசமாகத்தானே இருந்தீர்கள், அவரிடம் நீங்கள் ஏன் நலம் விசாரிக்கவில்லை?’’

“எப்படி சார் நான் நலம் விசாரிப்பேன்? தினகரனுடன்தான் எனக்குப் பிரச்னை... இல்லையென்று சொல்லவில்லை. ஆனால், தினகரன் செய்த தவறுகளைக் கண்டிக்க வேண்டிய இடத்திலிருந்த சசிகலாவும் அவரைக் கண்டிக்கவில்லையே!’’

“திரும்பவும் தினகரன், ‘அ.தி.மு.க-வில் இன்னும் எங்களது ‘ஸ்லீப்பர் செல்கள்’ இருக்கிறார்கள்’ என்கிறார். உண்மைதானா?’’

“இதுநாள்வரை வெளிவராத ஸ்லீப்பர் செல்கள், இனிமேல்தான் வெளியே வரப்போகிறார்களா என்ன... தினகரனை நம்பி அ.தி.மு.க-விலிருந்து வெளியே வந்த 18 எம்.எல்.ஏ-க்களையும் பதவியிழக்கச் செய்து, நடுத்தெருவில் நிற்கவைத்துவிட்டு இன்றைக்கு இவர் மட்டுமே எம்.எல்.ஏ-வாக இருக்கிறார். இப்படிப்பட்டவரை மக்களும் கட்சிக்காரர்களும் எப்படி நம்புவார்கள்?

“சசிகலாவின் வருகை, தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துமா?’’

“நிச்சயம் ஏற்படுத்தும்... விரைவில் அ.தி.மு.க பிளவுபடும். சாதாரணமாக அந்தக் கட்சி நிர்வாகிகள் யாரேனும் சசிகலாவை வரவேற்று போஸ்டர் ஒட்டினாலே கட்சியைவிட்டு நீக்கிவிடுகிறார்கள். ஆனால், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் இளைய மகன், சசிகலாவுக்கு வாழ்த்து சொல்லி பிரார்த்தனையே செய்கிறார். அவர்மீது எந்த நடவடிக்கையும் இல்லை. ஆக, இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் இடையில் ஏதோவொரு அண்டர்ஸ்டேண்டிங் ஓடிக்கொண்டிருக்கிறது. நிச்சயம் வெகு விரைவில் அ.தி.மு.க பிளவுறும்!’’

“நீங்கள் சொல்வதுபோல ஒருவேளை அ.தி.மு.க பிளவுபட்டால், தமிழக அரசியல் சூழலில் அது யாருக்குச் சாதகம்?’’

“யாருக்குச் சாதகம், யாருக்குப் பாதகம் என்பதெல்லாம் இரண்டாம் விஷயம். எனது 25 ஆண்டுக்கால அரசியல் அனுபவத்தில் சொல்கிறேன்... மக்கள் தயாராகிவிட்டார்கள். தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்தான் அடுத்த முதலமைச்சர்.’’

விரைவில் அ.தி.மு.க பிளவுபடும்! - தங்க தமிழ்ச்செல்வன் தடாலடி...

“அதனால்தான், ‘சசிகலா வந்தவுடன் நடக்க வேண்டியது நடக்கும்’ என்றாரா மு.க.ஸ்டாலின்?’’

(சிரிக்கிறார்.) “தலைவர் எந்த அர்த்தத்தில் அப்படிச் சொன்னார் என்று தெரியவில்லை. ஆனால் போஸ்டர் அடிப்பது, காரில் ஏறி பவனிவருவது என இவர்கள் அடிக்கிற கூத்தைப் பார்க்கும்போது, அ.தி.மு.க-வுக்குள் குழப்பங்கள் ஏற்படுவது மட்டும் நிச்சயம்.’’

“இந்தக் குழப்பங்களெல்லாம் தி.மு.க-வுக்குச் சாதகமாக அமையும் என்கிறீர்களா?’’

“அ.தி.மு.க-வில் குழப்பம் ஏற்பட்டாலும்... ஏற்படாவிட்டாலும் இயல்பாகவே தி.மு.க-தான் வெற்றிபெறும் என்கிறேன். ஏனெனில், இது ஊழல் ஆட்சி; பா.ஜ.க-வின் அடிமை ஆட்சி; தமிழ்நாட்டின் எந்த நலன்களையும் இவர்கள் பாதுகாக்கவில்லை. அதனால், இயல்பாகவே அரசியல் சூழல் தி.மு.க-வுக்குச் சாதகமாக இருக்கிறது.’’

“பொது எதிரி தி.மு.க-தான் என்பதில் அ.தி.மு.க தலைவர்களும் சரி... சசிகலா தரப்பினரும் சரி... தெளிவாக இருக்கிறார்கள். பிறகு எப்படி அ.தி.மு.க-வில் பிளவு ஏற்படும் என்று சொல்கிறீர்கள்?’’

“அப்புறம் ஏன், ‘சசிகலா காரில் அ.தி.மு.க கொடியைக் கட்டக் கூடாது’ என்கிறார்கள்... அமைச்சர்களே டி.ஜி.பி-யை சந்தித்துப் புகார் கொடுக்கிறார்கள்... ஏன் இந்தப் பதற்றம்? பேசாமல் இருக்க வேண்டியதுதானே!’’

“அமைச்சர் ஜெயக்குமார், ‘சசிகலாவும் தினகரனும் தி.மு.க-வின் `பி’ டீம்’ என்கிறாரே?’’

“மாறி மாறிப் பேசிக்கொண்டிருப்பதுதான் இவர்களின் இயல்பு. ‘சசிகலா குடும்பத்தினர் ஜெயலலிதாவை அடித்துக் கொன்றுவிட்டார்கள்’ என்று சொன்ன இதே ஜெயக்குமார், இ.பி.எஸ்., ஓ.பி.எஸ் ஆகியோர்தான் விசாரணை கமிஷனும் அமைத்தார்கள். ஆனால், மூன்றரை வருடங்களாகியும் எந்த உண்மையையும் இவர்கள் கண்டுபிடிக்கவில்லை. எல்லாம் அரசியல்.’’

“ஆனால், ‘தி.மு.க ஆட்சிக்கு வந்ததும், ஜெயலலிதா மரணத்திலுள்ள மர்மத்தைக் கண்டுபிடிப்போம்’ என்று ஸ்டாலினும் சொல்கிறாரே, அது மட்டும் அரசியல் இல்லையா?’’

“ஜெயலலிதா மரணத்தைவைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் தி.மு.க-வுக்கு இல்லை. மனிதாபிமானத்தின் அடிப்படையில் தலைவர் ஸ்டாலின் அப்படிச் சொல்லியிருக்கிறார். ஏனெனில், அன்றைய தினம் இறந்தது ஒரு முதலமைச்சர். அவரது சாவில் மர்மம் இருப்பதாகக் குற்றச்சாட்டுவைத்தது ஓ.பன்னீர்செல்வம். எனவே, உண்மையைக் கண்டுபிடிக்க வேண்டிய தேவை இருக்கிறது.’’

“சொத்துக்குவிப்பு வழக்கில் ‘குற்றவாளி’ என்று சசிகலாவைக் குற்றம்சாட்டும் அ.தி.மு.க-வினரே ஜெயலலிதா பற்றிப் பேச மறுக்கின்றனர். ‘ஜெயலலிதாவும் குற்றவாளிதான்’ என்பதை நீங்களாவது ஏற்கிறீர்களா?’’

“சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நான்கு பேருக்கும் நீதிமன்றமே தண்டனை கொடுத்துவிட்டது. இதில் ஜெயலலிதா இறந்துவிட்டார் என்பதால், அவரை வழக்கிலிருந்து விடுவித்துவிட்டனர். மீதமுள்ள மூவருக்குத்தான் தண்டனை. எல்லோருக்கும் தெரிந்த இந்த உள்ளங்கைக்கு எதற்குக் கண்ணாடி?’’