Published:Updated:

ஊழல் பட்டியல், வழக்குகள்!அ.தி.மு.கவுக்கு எதிராக ஆவணங்களைத் திரட்டும் தி.மு.க

ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி
ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி

மதுரை, கோயமுத்தூர், தஞ்சாவூர், சென்னை, ஈரோடு உள்ளிட்ட நகரங்களில் உள்ள முக்கிய புள்ளிகள் அவர்கள் செய்த ஊழல்பட்டியல் கொண்ட விவரங்களை தி.மு.க-வினர் கையில் எடுத்திருக்கிறார்கள்.

முதல்வர் மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடுத்திருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆளும்கட்சியில் உள்ள ஐந்து முக்கிய புள்ளிகள். அவர்கள் செய்த ஊழல் பட்டியலைக் கொண்டு மாவட்டம் முழுவதும் அடுத்தடுத்த வழக்குகளை தொடுக்க தி.மு.க தயாராகி வருகிறது. இவ்வழக்குதான் ஆளும்கட்சிக்கு மிகப்பெரிய குடைச்சலை கொடுக்கப்போவதாகச் சொல்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தினர்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

மத்திய அரசின் பாரத் நெட் திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் 12,524 ஊராட்சிகளிலும் (பைபர் ஆப்டிக் கேபிள்) இன்டர்நெட் இணைப்பு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 1,950 கோடி ரூபாய் மதிப்பில் இத்திட்டத்துக்கு டெண்டர் கோரப்பட்டது.

ஆர்.எஸ் .பாரதி மற்றும் ஸ்டாலின்
ஆர்.எஸ் .பாரதி மற்றும் ஸ்டாலின்

அதில் பல நிறுவனங்கள் கலந்துகொண்டபோதிலும், இரண்டு நிறுவனங்களுக்கு மட்டும் டெண்டர் வழங்கப்பட்டதாகச் சர்ச்சை எழுந்தது.

இந்தநிலையில் இதுதொடர்பாக ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ``தமிழகம் முழுவதும் 12,524 ஊராட்சிகளில் பைபர் ஆப்டிக் கேபிள் அமைக்கும் டெண்டரை முதல்வர் மற்றும் வருவாய்த்துறை அமைச்சரின் விருப்பப்படி அளிக்குமாறு தகவல் தொழில்நுட்பச் செயலாளர் சந்தோஷ் பாபு, டான்ஃபினெட் நிர்வாக இயக்குநர் எம்.எஸ்.சண்முகம் ஆகியோருக்கு அழுத்தம் தரப்பட்டது” என்று குற்றம்சாட்டியுள்ளார்.

எடப்பாடி
எடப்பாடி

இந்நிலையில் பைபர் ஆப்டிக் கேபிள் அமைக்கத் தனியார் நிறுவனங்களுக்கு டெண்டர் வழங்கியதில் முறைகேடு குறித்து வழக்கு பதிவு செய்ய வேண்டும். இந்த முறைகேடு தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார். தி.மு.க தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தியதுபோல் தமிழகம் முழுவதும் அ.தி.மு.க-வினர் செய்த ஊழல் பட்டியல்களைக் கொண்டு வழக்கு தொடுக்க இருக்கிறார்கள். இவ்வழக்கு தான் ஆளும்கட்சிக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தப்போவதாகச் சொல்கிறார்கள்.

இதுகுறித்து அறிவாலய வட்டாரத்தில் விசாரித்தோம். ``தி.மு.க அமைப்புச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி பட்டியல் இனத்தவர்களை அவதூறாகப் பேசியதாகச் சமீபத்தில் கைது செய்தது காவல்துறை. அத்தோடு, அ.தி.மு.க அரசை எதிர்த்துப் பேசியதால் கோயம்புத்தூர், திருநெல்வேலி, நாகை மாவட்டங்களில் தி.மு.க-வினர் மீது ஐந்து வழக்குகளுக்கும் மேல் போட்டார்கள்.

அமைச்சர் உதயகுமார்
அமைச்சர் உதயகுமார்

அதன் பிறகு தி.மு.க தலைவர் ஸ்டாலின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கொரோனா காலகட்டத்தில்கூட, டெண்டர் ஊழல்கள், கொரோனா மருத்துவ உபகரணங்கள், கிருமிநாசினிகள், உள்ளிட்ட மருந்துகள் கொள்முதல் செய்வதில் ஏகப்பட்ட ஊழல்கள் என்று ஒவ்வொரு நாளும் `கஜானாவைச் சுரண்டிக் கொள்ளையடிக்கும்’ முதலமைச்சர், அவரது அமைச்சரவை சகாக்களையும், காக்க முயல்கிறார். அவர்கள் செய்யும் ஊழல் பட்டியல்களை முழுமையாக எடுங்கள் எனவும் அதைக்கொண்டு வழக்குகள் மூலம் அவர்களுக்கு பதிலடி கொடுப்போம் என்று மாவட்டச் செயலாளர்களுக்கு உத்தரவு பிறப்பித்திருந்தார்.

ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி
ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி

அதன்படி அ.தி.மு.க-வில் உள்ள மதுரை, கோயமுத்தூர், தஞ்சாவூர், சென்னை, ஈரோடு உள்ளிட்ட நகரங்களில் உள்ள முக்கிய புள்ளிகள் அவர்கள் செய்த ஊழல்பட்டியல் கொண்ட விவரங்களை தி.மு.க-வினர் கையில் எடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள். அவர்கள் மீது வழக்கு தொடுக்க இருக்கிறார்கள்.

இதுகுறித்து அ.தி.மு.க செய்தி செய்தித்தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தியிடம் பேசினோம்.``ஊழல் புகார் என்பது யார் யார் மீது வேண்டுமானாலும் தொடுக்கலாம். அதற்கு லோக் ஆயுக்தா சட்டம் இருக்கிறது. இந்நிலையில் பட்டியல் இனத்தவர்களை அவதூறாகப் பேசியதற்காக ஆர்.எஸ்.பாரதி மீது அ.தி.மு.க-வினர் வழக்கு பதிவுசெய்தார்கள்.

பெங்களூரு புகழேந்தி
பெங்களூரு புகழேந்தி

அவ்வளவுதான். தி.மு.க-வினர் வழக்கு தொடுத்துவிட்டோம் என்ற காரணத்துக்காக அ.தி.மு,க-வில் உள்ளவர்கள் மீது ஊழல் புகார்களைத் தட்டி எடுக்கிறோம் என்று சொல்லி மிரட்டுவது எந்தவிதத்தில் நியாயம். இது முழுக்க முழுக்க அரசியல் காழ்ப்புணர்ச்சியால் நடக்கிறது. தி.மு.க-வினர் தொடர்ந்த வழக்கை எப்படி எதிர்கொள்வது என்பது எங்களுக்கு நன்கு தெரியும். அதற்கெல்லாம் நாங்கள் பயந்தவர்கள் அல்ல’’ என்று முடித்துக்கொண்டார்.

அடுத்த கட்டுரைக்கு