Published:Updated:

`என் மகனாகப் பார்க்காதீர்கள்..?!’’ - பொறுப்பாளர்களிடம் கலங்கிய துரைமுருகன்

ஆ.விஜயானந்த்

``37 நாடாளுமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்ற நாம், 38-வதாக வேலூர் தொகுதியையும் கைப்பற்றியாக வேண்டும். அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் வெற்றிக்காக வியூகம் அமைக்க வேண்டும்.''

கதிர் ஆனந்த், துரைமுருகன்
கதிர் ஆனந்த், துரைமுருகன்

வேலூர் நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் வெற்றியை மிக முக்கியமானதாகப் பார்க்கிறார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். `9 தொகுதிகளில் ஏற்பட்டது போன்ற நிலைமை உருவாகிவிடக் கூடாது' என நிர்வாகிகளை அவர் எச்சரித்திருக்கிறார்.

ஸ்டாலின் தலைமையில் கூட்டம்
ஸ்டாலின் தலைமையில் கூட்டம்

நாடாளுமன்றத் தேர்தலில் அதிகளவில் பண விநியோகம் நடந்ததாகக் கூறி வேலூர் தொகுதிக்கான தேர்தலை ரத்து செய்தது தேர்தல் ஆணையம். இந்த அறிவிப்பை தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்தும் அ.தி.மு.க வேட்பாளர் ஏ.சி.சண்முகமும் எதிர்பார்க்கவில்லை. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, மத்தியில் பெரும்பான்மை பலத்தோடு ஆட்சியில் அமர்ந்தது பா.ஜ.க. இந்தநிலையில், வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி வேலூர் மக்களவைக்குத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதற்கான வேட்புமனுத்தாக்கல் நாளை மறுநாள் முடிவடைய இருக்கிறது. அ.தி.மு.க தரப்பில் ஏ.சி.சண்முகம் மனுத்தாக்கல் செய்துவிட்ட நிலையில், தி.மு.க வேட்பாளரின் வெற்றிக்காகப் பெரும் படையைக் களமிறக்கியிருக்கிறார் ஸ்டாலின். இந்தப் படைக்குத் தி.மு.க முதன்மை நிலையச் செயலாளர் டி.ஆர்.பாலு தலைமை தாங்க இருக்கிறார். இதுதொடர்பாக நேற்று அன்பகத்தில் மாவட்டச் செயலாளர்களை அழைத்துக் கூட்டம் நடத்தினார் ஸ்டாலின். கழக எம்.எல்.ஏ-க்கள், 65 மாவட்டச் செயலாளர்கள் எனப் பெரும் எண்ணிக்கையில் நிர்வாகிகள் குழுமியிருந்தனர்.

`வேலூர் தொகுதிக்கான தேர்தல் பணிகளைக் கவனிக்க 20-ம் தேதிக்குப் பிறகு செல்லலாம்' என்ற நினைப்பில் பல நிர்வாகிகள் இருந்தனர். `எம்.எல்.ஏ-க்களைத் தவிர மற்றவர்கள் அனைவரும் உடனடியாகக் கிளம்ப வேண்டும்' என உத்தரவிட்ட ஸ்டாலின், `இந்தத் தேர்தலில் 100 சதவிகித வெற்றியை நாம் பெற்றாக வேண்டும். ஒன்பது தொகுதிகளில் ஏற்பட்டது போன்ற சூழல் ஏற்பட்டுவிடக் கூடாது. நமக்கு மிக முக்கியமான தேர்தல் இது. 37 நாடாளுமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்ற நாம், 38-வதாக வேலூர் தொகுதியையும் கைப்பற்றியாக வேண்டும். அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் வெற்றிக்காக வியூகம் அமைக்க வேண்டும். நாம் வெற்றி பெறாவிட்டால் கழகத்தின் பலவீனமாகத்தான் பார்க்கப்படும். பொறுப்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் சரிவர வேலை பார்க்காமல் இருப்பதாகத் தகவல் வந்தால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என எச்சரிக்கும் தொனியில் பேசினார்.

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

கூட்டத்தில் பேசிய துரைமுருகன், `கடந்தமுறை வேலூர் தொகுதியில் பிடிபட்டது நமது பணமே இல்லை. தேர்தல் பணியிலும் நம்பிக்கைத் துரோகம் நடந்தது. என் மகனை வெற்றி பெற வைக்க வேண்டியது உங்கள் கைகளில்தான் இருக்கிறது. என் மகனாகப் பார்க்காமல் தி.மு.க தொண்டனாகப் பாருங்கள்' என உருக்கமாக வேண்டுகோள் வைத்தார். இதன் பிறகு, ஒவ்வொரு நிர்வாகியையும் பேச வைத்து கருத்துகளை உள்வாங்கிக் கொண்டார் ஸ்டாலின்.

வேலூர் நிலவரம் தொடர்பாக நம்மிடம் பேசிய தி.மு.க முன்னணி நிர்வாகிகள் சிலர், ``மிக முக்கியமான தேர்தலாக இதைக் கவனிக்கிறார் ஸ்டாலின். நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் வீசிய தி.மு.க அலை, மத்தியில் பா.ஜ.க ஆட்சி நீடிப்பதால் மாறிவிடக் கூடாது என நினைக்கிறார். அதன் காரணமாகத் தோல்வி ஏற்பட்டால், அது தன்னுடைய தலைமைக்குக் கிடைத்த தோல்வியாகத்தான் பார்க்கிறார். `அ.தி.மு.க - பா.ஜ.க அணிக்கு இங்கே வேலையில்லை என்பதைப்போலத் தேர்தல் முடிவுகள் அமைய வேண்டும்' எனக் கணக்குப்போடுகிறார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

தேர்தல் முடிவுகள் அ.தி.மு.க-வுக்குச் சாதகமாக வந்துவிட்டால், இதை வைத்தே அரசியல் செய்வார்கள் எனவும் நிர்வாகிகள் அச்சத்தில் இருக்கின்றனர். அடுத்தடுத்து வரக்கூடிய தேர்தலுக்கும் இந்த வெற்றியை மிக முக்கியமானதாகப் பார்க்கின்றனர். அதனால்தான், மாநிலம் முழுவதும் உள்ள முக்கிய நிர்வாகிகளைத் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமித்தார் ஸ்டாலின். `தேர்தல் பணிகள் சரியாக நடக்கிறதா?' என்பதைக் கண்காணிக்கவும் தனிக்குழுவை அமைக்க இருக்கிறார். கூட்டத்தில் துரைமுருகன் காட்டிய உருக்கத்தைக் காட்டிலும், வேலூர் தொகுதியை வென்றாக வேண்டும் என்பதில் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்கிறார் ஸ்டாலின்" என்கின்றனர் விரிவாக.