Published:Updated:

``தமிழகத்துக்கு ஒரு பாஜக தலைவர் போதும்" - ஆளுநரை விமர்சித்த டி.ஆர்.பாலு

டி.ஆர்.பாலு - ஆளுநர் ஆர்.என்.ரவி

``தமிழ்நாடு, தமிழன், தமிழ் என்று பேசுவதுதான் பிரிவினைவாதம் என்றால் அவரின் உள்நோக்கம் தெளிவாகத் தெரிந்துவிட்டது. இவை ஆளுநர் ரவிக்குக் கசப்பானவையாக இருக்கின்றன. எனவே, இவற்றைவிட்டு விலகிச் செல்லும் முடிவை அவர்தான் எடுக்க வேண்டும்.” - டி.ஆர்.பாலு

``தமிழகத்துக்கு ஒரு பாஜக தலைவர் போதும்" - ஆளுநரை விமர்சித்த டி.ஆர்.பாலு

``தமிழ்நாடு, தமிழன், தமிழ் என்று பேசுவதுதான் பிரிவினைவாதம் என்றால் அவரின் உள்நோக்கம் தெளிவாகத் தெரிந்துவிட்டது. இவை ஆளுநர் ரவிக்குக் கசப்பானவையாக இருக்கின்றன. எனவே, இவற்றைவிட்டு விலகிச் செல்லும் முடிவை அவர்தான் எடுக்க வேண்டும்.” - டி.ஆர்.பாலு

Published:Updated:
டி.ஆர்.பாலு - ஆளுநர் ஆர்.என்.ரவி

உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியில் நடைபெற்ற காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியை ஏற்பாடுசெய்ய தமிழகத்திலிருந்து சென்ற தன்னார்வலர்களைச் சிறப்பிக்கும்விதமாக கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகையில் ஆர்.என்.ரவி தலைமையில் பாராட்டுவிழா நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில், தன்னார்வலர்களைப் பாராட்டிப் பேசிய பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, ``திராவிட ஆட்சியில் 50 ஆண்டுகளாக மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கின்றனர்" என்று கூறியிருந்தார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

இந்த நிலையில், தி.மு.க பொருளாளர் டி.ஆர்.பாலு, `தமிழக பா.ஜ.க-வுக்கு ஒரு மாநிலத் தலைவர் போதும். ஆளுநர் ரவி பா.ஜ.க மாநிலத் தலைவராகச் செயல்பட வேண்டாம்' எனக் கூறியிருக்கிறார்.

இது குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் டி.ஆர்.பாலு, ``தமிழ்நாட்டில் பிரிவினையையும், மோதல்களையும், குழப்பத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்த வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்துடன் உள்ளே நுழைந்து நாள்தோறும் சர்ச்சைக்குரிய கருத்துகளையும், செயல்பாடுகளையும் செய்துகொண்டிருப்பவர்தான் ஆளுநர் ஆர்.என்.ரவி.

எந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலும் சனாதனம், ஆரியம், திராவிடம், திருக்குறள், காலனி ஆதிக்கம் உள்ளிட்டவை குறித்து அவர் கூறும் கருத்துகள் அபத்தமானவையாகவும், ஆபத்தானவையாகவும் இருக்கின்றன. பட்டியலின மக்கள் குறித்தும், அண்ணல் அம்பேத்கர் குறித்தும் அவதூறுப் பேச்சு பேசினார். அவருடைய திட்டம்தான் என்ன என்பதைப் புரிந்துகொள்வது சிரமம் அல்ல. வகுப்புவாதப் பிரிவினை அரசியலைப் பேசி, மீண்டும் வர்ணாசிரம காலத்துக்கு இட்டுச்செல்வதுதான் அவருடைய நோக்கமாக இருந்துவருகிறது.

டி.ஆர்.பாலு
டி.ஆர்.பாலு

இதுவரை பொதுவாக நுண்ணிய வர்ணாசிரம அரசியலைப் பேசிவந்த அவர், இப்போது வெளிப்படையாகத் தேர்தல் அரசியல்வாதியாகப் பேசத் தொடங்கிவிட்டார். கமலாலயத்தில் போய்ப் பேசவேண்டியதை, ஆளுநர் மாளிகையில் உட்கார்ந்துகொண்டு அவர் பேசுவது கடும் கண்டனத்துக்குரியது. இவருக்குத் தமிழ்நாடு பா.ஜ.க. தலைவராக ஆகும் ஆசை இருந்தால், ஆளுநர் பதவியை விட்டுவிட்டு வந்து, இது போன்ற அபத்தங்களைப் பேசட்டும். சனாதனம், ஆரியம், திராவிடம், திருக்குறள் ஆகியவை குறித்த அவருடைய கருத்துகள் அவர் மூளையில் படிந்துவிட்ட ஆர்.எஸ்.எஸ் வகைப்பட்ட தன்மையைக் காட்டுகிறது என்றால், திராவிட ஆட்சி குறித்த அவருடைய விமர்சனம் பா.ஜ.க-வின் தேர்தல் அரசியல் உள்நோக்கத்தைக் காட்டுகிறது.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

ஐம்பது ஆண்டுகளுக்கு முந்தைய பீகாரும், உத்தரப்பிரதேசமும் இன்று எப்படி இருக்கின்றன... தமிழ்நாடு எப்படி இருக்கிறது என்பதுகூட அவருக்குத் தெரியாதா... தமிழ்நாட்டின் வளர்ச்சி என்பது என்ன என்பதைத் தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மதிப்பில், தமிழ்நாட்டின் பங்கு 9.22 விழுக்காடு! ஒன்றிய அரசின் மொத்த வரி வருவாயில் தமிழ்நாட்டின் பங்கு 6 விழுக்காடு. இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 8.4 விழுக்காடு. ஜவுளித்துறை ஏற்றுமதியில் 19.4 விழுக்காடு.

கார்கள் ஏற்றுமதியில் 32.5 விழுக்காடு. தோல் பொருள்கள் ஏற்றுமதியில் 33 விழுக்காடு. கல்வியில் இரண்டாவது இடம். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். தொழில் நிறுவனங்களை ஈர்ப்பதில் மூன்றாவது இடத்தில் தமிழ்நாடு இருப்பதாக ஒன்றிய அரசே பாராட்டியிருக்கிறது. இந்தியா முழுமைக்குமான பணவீக்கம் இப்போது அதிகமாகியிருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டுக்கு மட்டுமான பணவீக்கம் குறைந்திருக்கிறது. இதுவும் அண்மையில் ஒன்றிய அரசு வெளியிட்ட புள்ளிவிவரம்தான். இந்த வெற்றி, சில அரசியல் சக்திகளுக்கு எரிச்சலைத் தரலாம். அதில் ஒருவராக ஆளுநர் இருப்பதுதான் அதிர்ச்சியைத் தருகிறது.

டி.ஆர்.பாலு
டி.ஆர்.பாலு

தமிழ்நாடு வளர்ந்துவிட்டதே என்ற ஆத்திரத்தில் ஆளுநர் இப்படிப் பேசுகிறாரோ என்ற ஐயமே எழுகிறது. அதனால்தான் திராவிட ஆட்சியின் மீது அவருக்குக் கோபம் வருகிறது. 'திராவிடம்' என்ற சொல்லைப் பார்த்து இவர் வயிறு ஏன் எரிகிறது... அந்தச் சொல் எதனால் இவருக்குச் சுடுகிறது... `திராவிடக் கட்சிகள் பிரிவினையை வளர்த்தன' என்கிறார் அவர். தலையில், தோளில், தொடையில், காலில் பிறந்தவர்கள் என்று பிரித்தது திராவிடமல்ல, ஆரியம். `இன்னார் படிக்கலாம், இன்னார் படிக்கக் கூடாது’ என்று பிரித்தது திராவிடமல்ல, ஆரியம். தொடக் கூடாத சாதி, கண்ணில்படக் கூடாத சாதி, மூச்சுக்காற்றுபடக் கூடாத சாதி எனப் பிரித்தது திராவிடமல்ல, ஆரியம். சமூகத்தின் சரிபாதியான பெண்குலத்தை, மூலையில் முடக்கி இழிவுபடுத்தியது திராவிடமல்ல, ஆரியம். எனவே, பிரிவினைக்கு எதிராகக் கண்ணீர் வடிக்கும் ஆர்.என்.ரவி, ஆரியத்தை எதிர்த்துத்தான் குரல் எழுப்ப வேண்டுமே தவிர திராவிடத்தை அல்ல.

டி.ஆர்.பாலு - ஆளுநர் ஆர்.என்.ரவி
டி.ஆர்.பாலு - ஆளுநர் ஆர்.என்.ரவி

'வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது' என்ற நிலைமையை மாற்றி, இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாகத் தமிழ்நாட்டை ஆக்கியது தி.மு.க ஆட்சி. அனைவரும் 'இந்தியர்' என்று மேடைதோறும் பேசிவருகிறார் ஆளுநர். இந்தியர் என்ற ஒற்றுமை உணர்வு வேண்டும் என்பது உண்மைதான். அந்த ஒற்றுமை உணர்வுக்கு விரோதமான மதவாத அரசியலை அவரால் கண்டிக்க முடியுமா... அந்த ஒற்றுமை உணர்வுக்கு எதிரான சனாதன, வர்ணாசிரமக் கோட்பாட்டை அவரால் எதிர்த்து குரல் கொடுக்க முடியுமா... வர்ணாசிரம உணர்வு, வேதகால சனாதனக் கோட்பாட்டுகளைக் கையில் வைத்துக்கொண்டு தமிழ்நாடு, தமிழன், தமிழ் என்று பேசுவதுதான் பிரிவினைவாதம் என்றால் அவரது உள்நோக்கம் தெளிவாகத் தெரிந்துவிட்டது. தமிழ்நாடு, தமிழன், தமிழ் என்பவை ஆளுநர் ரவிக்குக் கசப்பானவையாக இருக்கின்றன. எனவே, இவற்றைவிட்டு விலகிச் செல்லும் முடிவை அவர்தான் எடுக்க வேண்டும்" என்று கூறியிருக்கிறார்.