Published:Updated:

திமுக Vs அதிமுக: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கு நெருக்கடி அதிகம்?!

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்

11 ஆண்டுகளாக நடைபெறாமலிருந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19-ம் தேதி நடைபெற உள்ளது. தற்போது இருக்கும் அரசியல் சூழலில் இந்தத் தேர்தலில் நெருக்கடி அதிகமிருப்பது திமுக-வுக்கா, அதிமுக-வுக்கா?

திமுக Vs அதிமுக: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கு நெருக்கடி அதிகம்?!

11 ஆண்டுகளாக நடைபெறாமலிருந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19-ம் தேதி நடைபெற உள்ளது. தற்போது இருக்கும் அரசியல் சூழலில் இந்தத் தேர்தலில் நெருக்கடி அதிகமிருப்பது திமுக-வுக்கா, அதிமுக-வுக்கா?

Published:Updated:
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்று மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22-ம் தேதி நடைபெறும் எனவும் மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிகுமார் தெரிவித்துள்ளார். வார்டு வரையறை பிரச்னைகள், வெள்ள பாதிப்பு, கொரோனா மூன்றாம் அலையைக் காரணம் காட்டி இன்னும் கொஞ்ச காலம் தேர்தலைத் தள்ளிப்போடலாம் என்ற கணக்கிலிருந்த தி.மு.க தற்போது தேர்தலைச் சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. ``பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கியதில் ஏற்பட்ட குழப்பங்கள், பெண்களுக்கு அளிப்பதாகச் சொன்ன 1,000 ரூபாய் உரிமைத் தொகை எனச் சில விவகாரங்களில் மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டிருப்பதாக ஆளும் கட்சி நினைத்ததாலேயே அவர்கள் தேர்தலை தற்போது நடத்த முன்வரவில்லை" என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

நாடாளுமன்றம், சட்டமன்றம், ஊரக உள்ளாட்சி எனத் தொடர்ச்சியான தேர்தல் தோல்விகளாலும், உட்கட்சிப் பூசல், இரட்டை தலைமைகளுக்குள் உள்ள முரண்கள் எனப் பல்வேறு பிரச்னைகளுக்குள் சிக்கியுள்ள அ.தி.மு.க ஆர்வமில்லாமல் கடமைக்குத்தான் தேர்தலைச் சந்திக்கிறது. பல தொகுதிகளில் நிற்பதற்காக விருப்ப மனு கூட யாரும் கொடுக்கவில்லை" அதனால் இந்தத் தேர்தலை ஆர்வமே இல்லாமல்தான் அ.தி.மு.க எதிர்கொள்கிறது என்கிறார்கள அரசியல் பார்வையாளர்கள்.

ஸ்டாலின், எடப்பாடி
ஸ்டாலின், எடப்பாடி

11 ஆண்டுகளாக நடைபெறாமலிருந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், எப்போது நடக்கும் என்ற கேள்விக்கு இறுதியாக முற்றுப்புள்ளி வைத்துவிட்டது தேர்தல் ஆணையம். தற்போது இருக்கும் அரசியல் சூழலில் இந்தத் தேர்தலில் நெருக்கடி அதிகமிருப்பது தி.மு.க-வுக்கா, அ.தி.மு.க-வுக்கா என்ற கேள்வியை இரண்டு தரப்பிலும் வைத்தோம்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``நெருக்கடி இல்லை; ஆனால், சவாலான தேர்தல்” - இரா.ராஜீவ்காந்தி தி.மு.க செய்தித்தொடர்பு இணைச் செயலாளர்

``கொங்கு மண்டலம் உட்பட அனைத்துப் பகுதிகளிலும் தி.மு.க மிகப்பெரிய வெற்றி பெறும். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தி.மு.க-வுக்கு நெருக்கடி இல்லை, சவாலாக இருக்கும். பதினோரு ஆண்டுகள் கழித்து, ஆட்சிக்கு வந்து குறிப்பிட்ட நாள் கழித்து நடைபெற உள்ள இந்தத் தேர்தலில் நூறு விழுக்காடு நாம் வெற்றி பெற்றாக வேண்டும் எனக் கட்சித் தொண்டர்களுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளதாலேயே தி.மு.க-வுக்கு இந்தத் தேர்தல் சவாலாக இருக்கும் எனக் கூறுகிறேன். அதற்காகவே இன்னும் உழைக்க வேண்டியிருக்கிறது. கருத்தியல் ரீதியாகவும், கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதிலும், செயல்பாட்டிலும் இந்த அரசு நூறு விழுக்காடு சரியாக இருந்திருக்கிறது. எங்கள் மீது எழும் நியாயமான குற்றச்சாட்டுகளை, விமர்சனங்களை அரசு இயந்திரங்களைக் கொண்டு சரி செய்வதற்கும் எங்களைச் சுய பரிசோதனை செய்து சரி செய்துகொள்வதற்கும் முதல்வர் அனுமதி அளித்திருக்கிறார். பொங்கல் தொகுப்பில் ஒரு சில இடங்களில் புகார்கள் எழுந்த போது உடனடியாக விசாரணை நடத்தி, சர்ச்சைக்குக் காரணமான நிறுவனங்களைக் கறுப்புப் பட்டியலில் சேர்த்ததோடு, அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களையும் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியிருக்கிறார் என்பதே அதற்குச் சான்று. டி.வி.எஸ் நிறுவனத்தின் தலைவர் சொன்னது போல எட்டு மாதத்திலேயே ஐந்து ஆண்டுகளுக்கும் உரிய தொழில் வளர்ச்சியையும், விளிம்புநிலை, ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் போன்றவர்களுக்கும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியிருக்கிறோம்.

ராஜீவ் காந்தி
ராஜீவ் காந்தி

உடம்பில் ஒரு பகுதி மட்டுமல்லாமல் உடம்பின் அனைத்து பாகங்களும் வளர வேண்டும் என்பார்கள். அதுபோல வெளிநாட்டுத் தொழில் நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்த்தது முதல், சிறு குறு தொழில் நிறுவனங்களின் முதலீடுகளை அதிகரிக்கச் செய்தது, கொரோனா போன்ற பேரிடர்களை எதிர்கொண்டது வரை தி.மு.க அரசு திறம்படச் செயலாற்றியிருக்கிறது. தமிழ் விரோத, மக்கள் விரோத நடவடிக்கைகள் நடைபெறாமல் இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறோம். எனவே, நூறு சதவிகிதம் வெற்றி பெறுவோம் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``அ.தி.மு.க-வுக்கு வாக்களிக்க மக்கள் தயாராக இருக்கிறார்கள்”  - கோவை செல்வராஜ் அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர்

``2019 நாடாளுமன்றத் தேர்தலில் எந்தளவு போலியான வாக்குறுதிகள் கொடுத்தார்களோ அதைவிட அதிகமான போலி வாக்குறுதிகளைக் கொடுத்து சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்டார்கள். இவற்றில் எந்த வாக்குறுதிகளும் இதுவரை தி.மு.க-வால் நிறைவேற்றப்படவில்லை. அனைவருக்கும் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படுமெனச் சொல்லிவிட்டு, வீட்டுக்கு ஒருவருக்கு மட்டும் கொடுப்போம் என்கிறார்கள், விவசாயக் கடன் வாங்கியவர்களுக்குத் தள்ளுபடி இல்லை என்கிறார்கள். இப்படிப் பலரையும் கழித்துவிட்டு பெயருக்குச் சிலருக்கு மட்டும் கடன் தள்ளுபடி செய்து ஒட்டுமொத்த மக்களையும் ஏமாற்றியிருக்கிறார்கள். குடும்பத்திலிருக்கும் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனச் சொல்லிவிட்டு அதுவும் இதுவரைக் கொடுக்கப்படவில்லை. பொங்கல் தொகுப்பில் முழுமையாக யாருக்கும் அனைத்துப் பொருள்களும் சென்றதாகத் தெரியவில்லை. தி.மு.க-வினரே பலரும் பொங்கல் தொகுப்பு குறித்து புகார் தெரிவித்திருக்கிறார்கள். சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் கொடுப்போம் என்றார்கள், அதுவும் கொடுக்கப்படவில்லை. கொரோனா மூன்றாவது அலையை முறையாகக் கையாளாமல் மக்களைத் தவிக்க விட்டிருக்கிறார்கள். நாள் ஒன்றுக்கு முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

கோவை செல்வராஜ்
கோவை செல்வராஜ்

தி.மு.க-வுக்கு வாக்களித்து ஏமாந்துவிட்டோம் என மக்கள் அழுது, புலம்பிக்கொண்டிருக்கிறார்கள். அ.தி.மு.க-வைப் போல மக்களை யாராலும் பாதுகாக்க முடியாது என மக்கள் உணர்ந்து எங்களுக்கு வாக்களிக்கத் தயாராக இருக்கிறார்கள். இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று தி.மு.க-வுக்கு அதன் ஆட்சிக்குச் சிம்ம சொப்பனமாக அ.தி.மு.க விளங்கும்.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism