Published:Updated:

திமுக Vs அதிமுக - தமிழக அரசியலில் வாரிசுகள் அதிகம் எங்கே?!

திமுக அதிமுக வாரிசுகள்

தமிழகத்தில் வாரிசு அரசியல் சகஜமாகிவிட்டதா, திமுக, அதிமுக இரண்டு கட்சியில் எங்கு வாரிசுகள் அதிகம்?

திமுக Vs அதிமுக - தமிழக அரசியலில் வாரிசுகள் அதிகம் எங்கே?!

தமிழகத்தில் வாரிசு அரசியல் சகஜமாகிவிட்டதா, திமுக, அதிமுக இரண்டு கட்சியில் எங்கு வாரிசுகள் அதிகம்?

Published:Updated:
திமுக அதிமுக வாரிசுகள்

திமுக இளைஞரணிச் செயலாளரும், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகப் பொறுப்பேற்கப் போகிறார் என்கிற செய்தி வெளியானதிலிருந்து, தமிழகத்தில் வாரிசு அரசியல் குறித்த விவாதங்களும் சூடுபிடிக்கத் தொடங்கின. ``தி.மு.க ஆட்சியில் குடும்ப அரசியல் இருக்காது என்று கூறிவிட்டு, தற்போது ஸ்டாலின் தன்னுடைய மகனை அமைச்சராக்குவது மட்டும் குடும்ப அரசியல் இல்லையா?'' என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். ஆனால், ``எந்த கட்சியை எடுத்துக் கொண்டாலும் 10 சதவிகித வாரிசு அரசியல் என்பது சகஜம்தான். உதயநிதிக்கு அமைச்சர் பொறுப்பு ஒன்றரை ஆண்டுகள் தாமதமாக வழங்கப்படுகிறது'' என வாரிசு அரசியல் குறித்த கேள்விக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பதிலளித்திருந்தார். தமிழகத்தில் வாரிசு அரசியல் சகஜமாகிவிட்டதா, திமுக, அதிமுக இரண்டு கட்சியில் எங்கு வாரிசுகள் அதிகம்?

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

திமுகவைப் பொறுத்தவரை கட்சியின் தலைவராக மு.க.ஸ்டாலின், துணைப் பொதுச் செயலாளராக நாடாளுமன்ற உறுப்பினராக கனிமொழி, இளைஞரணிச் செயலாளர் மற்றும் அமைச்சராக உதயநிதி ஸ்டாலின், திமுக விளையாட்டு அணி மேம்பாட்டுச் செயலாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினராக தயாநிதி மாறன் ஆகியோர் முதல்வரின் குடும்பத்திலிருந்து கட்சி மற்றும் ஆட்சிப் பொறுப்புகளில் இருக்கின்றனர். அதேபோல, கட்சியின் பொதுச் செயலாளரான துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினராகவும் கட்சியின் அமைப்புசாரா ஓட்டுநர் அணியின் தலைவராகவும் உள்ளார். அதேபோல, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் மகன் கௌதம சிகாமணி, கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார். கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மகன் டி.ஆர்.பி.ராஜா சட்டமன்ற உறுப்பினராகவும் கட்சியின் ஐ.டி.விங் செயலாளராகவும் இருக்கிறார்.

அதேபோல, ஊரக வளர்ச்சிதுறை அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகன் செந்தில்குமார், சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான மறைந்த க.அன்பழகனின் பேரன் வெற்றியழகன் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். அதேபோல,நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் எ.வ.வே.கம்பன், மாநில மருத்துவ அணித் துணைத்தலைவராக இருக்கிறார். அதேபோல. தங்கம் தென்னரசு, தமிழச்சி தங்கப்பாண்டியன், பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் என வாரிசுகள் பலர் சட்டமன்ற,நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கின்றனர். அதேபோல, பால்வளத்துறை அமைச்சர் நாசர், சிறுபான்மை நலத்துறை, அமைச்சர் செஞ்சி மஸ்தான் உள்ளிட்ட திமுக முக்கியப் புள்ளிகள் பலரின் வாரிசுகள் உள்ளாட்சிகளில் பிரநிதிகளாக இருக்கிறார்கள்.

எம்.ஜி.ஆர் மாளிகை
எம்.ஜி.ஆர் மாளிகை

அதிமுகவை எடுத்துக்கொண்டாலும் ஓ.பி.எஸ்ஸின் மகன் ரவீந்திரநாத்குமார், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தன், ராஜன் செல்லப்பாவின் மகன் ராஜ்சத்யன், மறைந்த பி.ஹெச்.பாண்டியனின் மகன் மனோஜ் பாண்டியன் என பலர் கட்சிப் பொறுப்புகளிலும் சிலர் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களாகவும் இருக்கிறார்கள். இவர்கள் தவிர, காஞ்சிபுரத்தில் மரகதம் குமரவேல் மகளிர் அணி இணைச் செயலாளராகவும், அவரின் கணவர் தையூர் குமரவேல் திருப்போரூர் வடக்கு ஒன்றியச் செயலாளராகவும் இருக்கிறார்கள். தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் சண்முகநாதனின் மகன் ராஜா மேற்குப் பகுதிச் செயலாளராகவும், மகள் பெருங்குளம் பேரூராட்சித் தலைவராகவும் இருக்கிறார்கள். ஈரோடு மாவட்டச் செயலாளர் கே.வி.ராமலிங்கத்தின் மகன் ரத்தன் பிரத்வி மாவட்ட மாணவரணிச் செயலாளராக இருக்கிறார். ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் முனியசாமியின் மனைவி கிருத்திகா மாநில மகளிரணிப் பொறுப்பில் இருக்கிறார்.

இவர்கள் தவிர திருச்சியில் வெல்லமண்டி நடராஜன், திருவள்ளூரில் சிறுணியம் பலராமன், திருவொற்றியூரில் குப்பன், சோழிங்கநல்லூரில் கந்தன், சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டத்தில் ஆதிராஜாராம், வளர்மதி, மனோஜ் பாண்டியன் என ஒவ்வொருவரும் தங்கள் குடும்பத்தில் ஒருவருக்குக் கட்சியில் முக்கியப் பதவியை வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள். இவர்கள் தவிரவும் பல மாவட்டச் செயலாளர்கள் தங்களின் நேரடி வாரிசுகள் அல்லது உறவினர்களுக்கு கட்சிப் பொறுப்புகள் கொடுத்து அழகு பார்த்திருக்கிறார்கள். அமைச்சர் பொன்முடி சொல்வதைப்போல பத்து சதவிகிதம் என்பது கூடுதலாகவோ, குறைவாகவோ இருக்கலாம். ஆனால், முக்கியமான, அதிகாரமிக்க பதவிகளில் வாரிசுகள் இருக்கிறார்கள் என்பது நிதர்சனமாக இருக்கிறது. திமுக, அதிமுக தவிர காங்கிரஸ், பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகளிலும் வாரிசுகள் இருக்கத்தான் செய்கிறார்கள். தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியா முழுவதுமே அரசியல் வாரிசுகளின் பட்டியல் நீண்டுகொண்டேதான் போகிறது.

கல்யாணசுந்தரம்
கல்யாணசுந்தரம்

இந்தநிலையில், திமுகவை நோக்கி தொடர்ச்சியாக வாரிசு அரசியல் என்கிற குற்றச்சாட்டை முன்வைப்பது ஏன்?... அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் கல்யாணசுந்தரத்திடம் பேசினோம்..,

``எம்.எல்.ஏவாக, கவுன்சிலர்களாக அப்பாவுக்குப் பிறகு பையன் பொறுப்புக்கு வருவது அனைத்துக் கட்சியிலும் இருக்கிறது. ஆனால், கட்சியின் தலைவராக தன் மகனைக் கொண்டுவருவது, கட்சியில் உயரிய பொறுப்புகளைக் கொடுப்பது, தன் உறவினர்களை வைத்து கட்சியை ஆக்கிரமிப்பதைத்தான் வாரிசு அரசியல் ஆதிக்கம் என்கிறோம். அதிமுகவில் எடுத்துக்கொண்டால்கூட, அண்ணன் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தனுக்கு அம்மாதான் கூப்பிட்டு சீட்டுக் கொடுத்தார். எடப்பாடி பழனிசாமி இப்போது பொதுச் செயலாளராக இருக்கிறார். ஆனால், அவரின் மகன் அடுத்து பொதுச் செயலாளர் பொறுப்புக்கு வரமாட்டார் என்பதை ஒவ்வொரு அ.திமுக தொண்டனாலும் உறுதியாகச் சொல்லமுடியும்.

வாரிசுகள் அடுத்தடுத்து தலைவர்களாக வருவது பூர்ஷுவா சிந்தனை கொண்ட காங்கிரஸில் காலம்காலமாக நடக்கிறது. காரணம், அது ஒரு பண்ணையார் அமைப்பு. ஆனால், புரட்சி பேசிக்கொண்டு வந்த திமுக-வினர் அதைச் செய்வதுதான் மோசடி. ஜனநாயகத்தில் கடைசி குடிமகனுக்கும் வாய்ப்புக் கிடைக்கவேண்டும். ஆனால், அது ஒரு குடும்பத்துக்குள்ளேயே நிறுத்தப்படுவதைத்தான் ஜனநாயகப் படுகொலை என்கிறோம்'' என்கிறார் அவர்.

சிவ ஜெயராஜ்
சிவ ஜெயராஜ்

இந்த விமர்சனங்கள் குறித்து திமுகவின் செய்தித் தொடர்பாளர் சிவ ஜெயராஜிடம் பேசினோம்..,

``வாரிசு அரசியலை முதன்முதலில் அறிமுகப்படுத்தியதே அதிமுகதான். அம்மையார் ஜெயலலிதா அவர்கள் சினிமாவில் இருந்து எந்தத் தியாகமும் செய்யாமல் நேரடியாக கட்சிப் பொறுப்புகளுக்கு வந்தார். ஜானகி அம்மையார் எம்.ஜி.ஆரின் மனைவி என்கிற ஒரே தகுதியோடு முதலமைச்சரானார். அதேபோல, டி.டி.வி.தினகரன் என்ன அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினராகவும் அதிமுகவின் பொருளாளராகவும் ஆனார். ஆனால், உதயநிதி இப்படிக் கட்சிப் பொறுப்புகளுக்கு நேரடியாக வந்தவர் அல்ல. எட்டாண்டுகாலம் கட்சிக்காக களப்பணியாற்றியிருக்கிறார். இளைஞரணிச் செயலாளாராகவும் சாதித்திருக்கிறார். நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் பிரசாரம் செய்திருக்கிறார். அவர் கலைஞரின், தளபதியின் ரத்த வாரிசு மட்டுமல்ல அவர்களின் கொள்கை வாரிசு. இப்போது மட்டுமல்ல, அவர் தேர்தலின்போதே எதிர்க்கட்சிகள் வாரிசு அரசியல் விமர்சனத்தை முன்வைத்தனர். ஆனால், மக்கள் அதை நிராகரித்து அறுபதாயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் அவரை வெற்றிபெற வைத்தனர்.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

இப்போதும் கட்சி இளைஞரணி கோட்டாவில்தான் அவர் அமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கிறார். அமைச்சரவையிலும் அவருக்கு பத்தாவது இடம்தான் கொடுக்கப்பட்டிருக்கிறது. கலைஞரின் பேரன், தலைவரின் மகன் என்பதால் திறமை இருந்தும் ஒருவரை நிராகரிப்பது என்பதை நவீன தீண்டாமையாகத்தான் நான் பார்க்கிறேன். அவரின் செயல்பாடுகளில் விமர்சனத்தை முன்வையுங்கள். ஆனால், அவர் வரவே கூடாது என்பது தவறு. திமுகவின் வாரிசு அரசியலால் பாதிக்கப்பட்ட ஒரு சாமானிய மக்களை, அடித்தட்டு மக்களைக் காட்டுங்கள் பார்க்கலாம்...திமுகவின் உட்கட்சி விஷயத்தை ஜனநாயகப் படுகொலை என்று பேசவேண்டிய அவசியமே இல்லை. எங்களின் மீது வேறு எந்தக் குற்றச்சாட்டையும் சொல்லமுடியாதவர்கள் இதுபோன்ற விஷயங்களைப் பேசுகின்றனர்'' என்கிறார் அவர்.