Published:Updated:

நிதிப் பங்கீடு மல்லுக்கட்டு! - தி.மு.க-பா.ஜ.க யார் சொல்வது உண்மை?

 கனிமொழி - நிர்மலா சீதாராமன்
பிரீமியம் ஸ்டோரி
கனிமொழி - நிர்மலா சீதாராமன்

தமிழ்நாட்டின் நெடுஞ்சாலை, துறைமுகம், ரயில்வே உள்ளிட்ட முக்கியத் துறைகளுக்காக மத்திய அரசு சார்பில், 2.3 லட்சம் கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது

நிதிப் பங்கீடு மல்லுக்கட்டு! - தி.மு.க-பா.ஜ.க யார் சொல்வது உண்மை?

தமிழ்நாட்டின் நெடுஞ்சாலை, துறைமுகம், ரயில்வே உள்ளிட்ட முக்கியத் துறைகளுக்காக மத்திய அரசு சார்பில், 2.3 லட்சம் கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது

Published:Updated:
 கனிமொழி - நிர்மலா சீதாராமன்
பிரீமியம் ஸ்டோரி
கனிமொழி - நிர்மலா சீதாராமன்

விலைவாசி உயர்வு பிரச்னையால் பற்றி எரிகிறது நாடாளுமன்றம். அமளி, போராட்டம், சஸ்பெண்ட், ஒத்திவைப்பு... என மழைக்காலக் கூட்டத்தொடர் முழுக்க அனல் பறக்கிறது. விலைவாசி உயர்வு பற்றிய விவாதத்தின்போது, எதிர்க்கட்சிகள் சுமத்திய குற்றச்சாட்டுகளால் கோபாவேசமடைந்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

தி.மு.க எம்.பி கனிமொழியும், ஜி.எஸ்.டி வரிவிதிப்பு, பெட்ரோல், டீசல் விலை மற்றும் விலைவாசி உயர்வு குறித்து மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்தார். இதற்கு பதிலளித்துப் பேசிய நிர்மலா சீதாராமனோ, கோபத்தில் தான் மத்திய அமைச்சர் என்பதையே மறந்து, தமிழ்நாட்டு எதிர்க்கட்சித் தலைவர்போலப் பேசினார். தி.மு.க தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருப்பதையும், பால் பொருள்களின் விலை உயர்ந்திருக்கும் விகிதத்தையும் பட்டியலிட்ட அவர், “ஜி.எஸ்.டி கவுன்சிலில் உங்கள் தமிழ்நாட்டு நிதியமைச்சரும் இருக்கிறார். அவரது ஒப்புதலுடன்தான் வரி உயர்த்தப்பட்டிருக்கிறது” என்றார்.

நிதிப் பங்கீடு மல்லுக்கட்டு! - தி.மு.க-பா.ஜ.க யார் சொல்வது உண்மை?

இதையடுத்து, நிர்மலா சீதாராமனின் விமர்சனங்களுக்கு விளக்கமளித்த தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், “ஒன்றிய நிதியமைச்சர் கூறியதில் கால்வாசி மட்டுமே உண்மை. ஜி.எஸ்.டி-யில் வரி அதிகரிப்பு செய்வதற்கு, தமிழ்நாடு வணிக வரி ஆணையர் எழுத்துபூர்வமாகவும், வாய்மொழியாகவும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். ஜி.எஸ்.டி-யின் வரி அளவைச் சீர்திருத்துவதற்கான கமிட்டியில் நான் இல்லை. கடந்த எட்டு ஆண்டுகளாக பெட்ரோல், டீசல் மீதான வரி உயர்வின் மூலம் ஒன்றிய அரசுக்குப் பல லட்சம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்திருக்கிறது. ஆனாலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் குறைக்கிறேன் என்ற பெயரில், மாநில அரசுகளுடன் பகிர்ந்துகொள்ளக்கூடிய கலால் வரியைத்தான் குறைத்திருக்கிறது ஒன்றிய அரசு” என்றார் காட்டமாக.

இதற்கு பதிலளித்த பா.ஜ.க தரப்பு, “தமிழ்நாட்டின் நெடுஞ்சாலை, துறைமுகம், ரயில்வே உள்ளிட்ட முக்கியத் துறைகளுக்காக மத்திய அரசு சார்பில், 2.3 லட்சம் கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த எட்டு ஆண்டுகளில் மத்திய பட்ஜெட்டில், தமிழ்நாட்டுக்கு மொத்தம் 7.5 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அளவு நிதியை, பா.ஜ.க ஆளும் மாநிலத்துக்குக்கூட மத்திய அரசு ஒதுக்கவில்லை. ஆனாலும்கூட, மத்திய அரசு எதுவுமே செய்யவில்லை எனச் சொல்வது வியப்பளிக்கிறது” என்கிறது. இதற்கிடையே மதுரையில் நடைபெறவிருக்கும் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத் தேதியை இறுதி செய்வதற்காக அண்மையில், மத்திய நிதியமைச்சரைச் சந்தித்தார் தமிழ்நாடு நிதியமைச்சர். இந்தச் சந்திப்பின்போது, மத்திய, மாநில அரசுகளுக்கு இடையேயான நிதி மோதல்கள் குறித்துப் பேசப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

நிதிப் பங்கீடு மல்லுக்கட்டு! - தி.மு.க-பா.ஜ.க யார் சொல்வது உண்மை?

நிதி விவகாரத்தில், மாநில அரசின் நிலை என்ன என்ற கேள்வியை தி.மு.க செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் இராஜீவ் காந்தியிடம் கேட்டபோது, “திட்டக்குழுவைக் கலைத்துவிட்டு, ஜி.எஸ்.டி கவுன்சில், நிதி ஆயோக் எனக் கொண்டுவந்து அனைத்து வரிகளையும் ‘ஒரே நாடு’ என்ற பெயரில், தனக்குக் கீழே வைத்துக்கொண்டிருக்கிறது ஒன்றிய அரசு. இப்படி வசூலாகும் வரிகளைத் தனக்கு விருப்பப்பட்ட மாநிலங்களுக்கு அதிகமாகவும், எதிரான மாநிலங்களுக்குத் தேவைக்கும் குறைவாகவும் ஒதுக்கிவருகிறது. தமிழ்நாடு தனக்கு வரவேண்டிய நிதி உரிமையைப் பெறுவதற்கு, சக்திக்கும் மீறிப் போராட வேண்டியிருக்கிறது. ‘தமிழ்நாட்டுக்குப் பல லட்சம் கோடி கொடுத்திருக்கிறோம்’ என்று சொல்கிற பா.ஜ.க., எத்தனை லட்சம் கோடிகளை தமிழ்நாட்டிலிருந்து வரியாக வசூலித்திருக்கிறது என்ற கணக்கையும் சொல்லத் தயாரா... பா.ஜ.க-விடம் அவர்களது கட்சிப் பணத்தைக் கேட்பதுபோல் கோபப்படுகிறார் நிர்மலா சீதாராமன். தமிழ்நாட்டுக்கு எது சேர வேண்டுமோ அதைத்தானே கேட்கிறோம்?” என்றார்.

நிதிப் பங்கீடு மல்லுக்கட்டு! - தி.மு.க-பா.ஜ.க யார் சொல்வது உண்மை?

தி.மு.க-வின் குற்றச்சாட்டு குறித்து பா.ஜ.க மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதியிடம் கேட்டோம். “ஜி.எஸ்.டி நிலுவை ஜூன் மாதத்துக்கு மட்டும்தான் இருக்கிறது. பல திட்டங்களுக்கு மத்திய அரசு உதவிவருகிறது. ஆனாலும்கூட ‘எதுவுமே தரவில்லை’ என்று குறை சொல்லிவருகிறார்கள். நிதி மேலாண்மையில் மத்திய அரசின் எந்த ஆலோசனையையும் ஏற்காமல், உண்மைக்குப் புறம்பான செய்திகளை மட்டுமே சொல்லிக்கொண்டிருக்கிறது தமிழ்நாடு அரசு. வாக்குகளுக்காகச் செயல்படுவதையும், ஊழலுக்குத் துணைபோவதையும் எதிர்த்து கேள்வி கேட்டால், மத்திய அரசுமீது பழி போடுகிறார்கள். முழுக்க முழுக்க மாநில அரசின் தவறுகளை, நிர்வாகத் திறமையின்மையை மறைத்து மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறது தி.மு.க அரசு. இந்த உண்மையையெல்லாம் நாங்கள் வெளிக்கொண்டுவருகிறோம் என்ற காழ்ப்பில், மத்திய அரசுமீது அவதூறு பரப்புகிறார்கள்” என்றார்.

இராஜீவ் காந்தி - நாராயணன் திருப்பதி
இராஜீவ் காந்தி - நாராயணன் திருப்பதி

மத்திய, மாநில அரசுகளின் குற்றச்சாட்டுகளில் எது உண்மை என்பது குறித்து பொருளாதார வல்லுநர் நாகப்பனிடம் கேட்டபோது, “நிதி விவகாரத்தில், இருவருமே தேவையில்லாமல் அரசியல் செய்கிறார்கள். ‘எது உண்மை, எது பொய்’ என்று மத்திய, மாநில நிதியமைச்சர்களுக்கு நன்றாகவே தெரியும். எனவே, இந்தப் பிரச்னையை அவர்களிடமே விட்டுவிட்டு மற்றவர்கள் ஒதுங்கிக்கொள்வதுதான் நல்லது” என்றார் சுருக்கமாக.

சண்டை போட்டு ‘ரேட்டைக்’ குறைப்பார்கள் என்று பார்த்தால், போட்டி போட்டு எல்லாப் பொருள்களின் விலையையும் ஏற்றுகிறார்களே?!