Published:Updated:

தனி மாநில அந்தஸ்தை தி.மு.க விரும்பவில்லையா?

தி.மு.க
பிரீமியம் ஸ்டோரி
News
தி.மு.க

- கொந்தளிக்கும் புதுச்சேரி காங்கிரஸ்...

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும், புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து கோரியும் ஜனவரி 18-ம் தேதி ஆளும் காங்கிரஸ் அரசு புதுச்சேரி சட்டமன்றத்தில் கொண்டு வந்த தீர்மானங்களை தி.மு.க புறக்கணித்திருக்கிறது. அதேசமயம், அன்றைய தினமே முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் தலைமையில் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டத்தை அந்தக் கட்சி நடத்தியது மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

தனி மாநில அந்தஸ்தை தி.மு.க விரும்பவில்லையா?

புதுச்சேரியில் 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியுடன் தேர்தலைச் சந்தித்த தி.மு.க., இரண்டு தொகுதிகளில் வெற்றிபெற்றது. ஆட்சி அமைக்க 16 இடங்கள் தேவை என்ற நிலையில், 15 இடங்களில் வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சி, தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்து ஆட்சியில் அமர்ந்தது. அதற்குப் பிரதி உபகாரமாக, தி.மு.க-வின் இரண்டு எம்.எல்.ஏ-க்களுக்கும் வாரியத் தலைவர் பதவிகளை அளித்தார் முதல்வர் நாராயணசாமி.

இதற்கிடையில், தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட தொழிலதிபர் வெங்கடசேன் வெற்றிபெற்றதால், அந்தக்கட்சி எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்தது. அதன் பிறகு கூட்டணியில் இருந்துகொண்டே காங்கிரஸ் அரசின் செயல்பாடுகளை விமர்சிக்கத் தொடங்கியது தி.மு.க. முதல்வர் நாராயணசாமியும் இதையெல்லாம் பெரிதுபடுத்தாமல் புதுச்சேரி வீதிகளுக்கும், அரசுப் பள்ளிகளின் காலைச் சிற்றுண்டித் திட்டத்துக்கும் கருணாநிதியின் பெயரைச் சூட்டினார். ஆனாலும், வாரியப் பதவிகளை அனுபவித்துக்கொண்டே காங்கிரஸ் அரசு மீதான விமர்சனத்தைத் தீவிரப்படுத்தியது தி.மு.க.

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக, சமீபத்தில் காங்கிரஸ் நடத்திய ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொள்ளாமல், தனியாக வேறோர் இடத்தில் போராட்டத்தை நடத்தினர் தி.மு.க நிர்வாகிகள். ‘மக்கள்நலத் திட்டங்களுக்குத் தடையாக இருக்கும் கவர்னர் கிரண் பேடியைத் திரும்பப் பெற வேண்டும்’ என்ற கோரிக்கையை முன்வைத்து, முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் நடத்திய மூன்று நாள் போராட்டத்தையும் புறக்கணித்தது தி.மு.க. திருவள்ளுவர் தின விழாவில் கலந்துகொண்ட தி.மு.க தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ, ‘‘தி.மு.க தலைமையில்தான் புதுச்சேரியில் ஆட்சி அமையும்’’ என்று வெளிப்படையாகவே பேசியது, கூட்டணிக்குள் இருந்த விரிசலை வெளிச்சம் போட்டுக் காட்டியது.

இந்தநிலையில்தான் ஜனவரி 18-ம் தேதி புதுச்சேரி சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தில் மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும், புதுச்சேரி மக்களின் நீண்டகால கோரிக்கையான தனி மாநில அந்தஸ்தைக் கேட்டும் இரண்டு தீர்மானங்களைக் கொண்டு வந்தார் முதல்வர் நாராயணசாமி. அன்றைய தினம் சட்டப்பேரவையை முழுவதுமாக புறக்கணித்த தி.மு.க., ஜெகத்ரட்சகன் தலைமையில் செயல்வீரர்கள் கூட்டத்தையும் நடத்தியது.

இது குறித்து நம்மிடம் பேசிய காங்கிரஸ் பிரமுகர்கள், “மாநில பா.ஜ.க-வினரே கிரண் பேடி மீது அதிருப்தியில்தான் இருக்கிறார்கள். ‘ஆளுநர் கிரண் பேடியைத் திரும்பப் பெற வேண்டும்’ என்று அ.தி.மு.க சட்டமன்றக்குழுத் தலைவர் அன்பழகனும் வலியுறுத்தியிருக்கிறார். ஆனால், ‘முதல்வரும் சரியில்லை, ஆளுநரும் சரியில்லை’ என்று மேலோட்டமாக அறிக்கைவிட்டதுடன், தி.மு.க-வினர் அமைதியாகி விடுகிறார்கள்.

நெருக்கடியான நிலையில் அதி முக்கியமான இரண்டு தீர்மானங்களைக் கொண்டுவரும்போது, அவற்றைப் புறக்கணித்துவிட்டு கட்சிக் கூட்டம் நடத்துகிறார்களென்றால், இவர்களின் கோபம் யார் மீது? காங்கிரஸ்மீது கோபமாக இருந்தால், நாங்கள் கொடுத்த வாரியத் தலைவர் பதவிகளை ராஜினாமா செய்திருக்கலாமே... நான்கரை வருடங்களாக ஏன் அதை அனுபவிக்க வேண்டும்... புதுச்சேரிக்கு, தனி மாநில அந்தஸ்து கிடைக்க வேண்டும் என்று தி.மு.க விரும்பவில்லையா... வேளாண் சட்டங்களுக்கும் அந்தக் கட்சி ஆதரவு தெரிவிக்கிறதா?” என்றவர்கள் தி.மு.க போடும் உள் அரசியல் கணக்குகளையும் பகிர்ந்து கொண்டார்கள்...

தனி மாநில அந்தஸ்தை தி.மு.க விரும்பவில்லையா?

‘‘புதுச்சேரியில் தனித்துப் போட்டியிடும் அளவுக்கு தி.மு.க-வுக்கு வாக்குவங்கியும் இல்லை... வேட்பாளர்களும் இல்லை. அதனால்தான் தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் கட்சிக்கும் தொகுதிக்கும் சம்பந்தமே இல்லாத ஒருவரை பணத்தை மட்டும் நம்பி நிற்கவைத்தார்கள். இப்போதுகூட புதுச்சேரியில் ஆள் இல்லாமல்தான், இங்கு வாக்குரிமைகூட இல்லாத ஜெகத்ரட்சகனை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்துகிறார்கள். ‘புதுச்சேரியில் தனித்து ஆட்சி’ என்று தி.மு.க கூறுவதெல்லாம் சாத்தியமில்லை. வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்குக் குறைவான இடங்களைக் கொடுப்பதற்காக இப்படியெல்லாம் நாடகமாடுகிறது தி.மு.க. இன்னொரு பக்கம், புதுச்சேரியில் தனித்துப் போட்டியிட்டு, தேர்தலுக்குப் பின்னர் பி.ஜே.பி-க்கு ஆதரவு தரும் எண்ணமும் அவர்களுக்கு இருக்கிறது’’ என்றார்கள் கொந்தளிப்புடன்.

இதற்கிடையே ஜனவரி 18-ம் தேதி புதுச்சேரியில் நடந்த தி.மு.க செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசும்போது உணர்ச்சிவசப்பட்ட ஜெகத்ரட்சகன், ‘‘கூட்டணியை ஸ்டாலின் முடிவு செய்வார். 30 தொகுதிகளிலும் தி.மு.க கூட்டணியை வெற்றிபெறச் செய்ய வேண்டும். இல்லையென்றால், புதுச்சேரி பக்கமே வர மாட்டேன். இதே மேடையில் தற்கொலை செய்துகொள்வேன்’’ என்றார்.

அரசியலுக்காக மக்கள்நலனைப் புறக்கணிக்கலாமா?