Published:Updated:

`கட்டாயத் திருமணம்’, `கள்ளத் திருமணம்’... அ.தி.மு.க Vs தி.மு.க கூட்டணி குஸ்தி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி
ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி என்பது `கட்டாயத் திருமணம்’ என்று காங்கிரஸ் தரப்பு விமர்சிக்க, தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியைக் `கள்ளத் திருமணம்’ என்று பதிலடி கொடுக்கிறது பா.ஜ.க தரப்பு.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் பூத் கமிட்டி உறுப்பினர்கள் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம், அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணியைக் கடுமையாக விமர்சித்தார். அப்போது, ``பா.ஜ.க ஆட்சியில் மக்கள் நிம்மதியாக இல்லை. மக்களுக்கு எதிரான திட்டங்களையே மத்திய அரசு நிறைவேற்றிவருகிறது. பா.ஜ.க அரசின் திட்டங்களை ஏற்பதற்கு மக்கள் தயாராக இல்லை. வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடும் விவசாயிகளை பயங்கரவாதிகள், பிரிவினைவாதிகள் என்றெல்லாம் பா.ஜ.க-வினர் விமர்சித்துவருகின்றனர்.

சிதம்பரம்
சிதம்பரம்

விவசாயிகள் கோரிக்கையை நிறைவேற்ற மத்திய அரசு தயாராக இல்லை. இந்தி பேசும் மாநிலங்களில் மட்டுமே பா.ஜ.க வளர்ந்துவருகிறது. பிற மாநிலங்களில் அந்தக் கட்சிக்கு வளர்ச்சி இல்லை. தேசியமும் திராவிடமும் இணைந்து தமிழ் வளர்த்த தமிழகத்தில் எக்காலத்திலும் பா.ஜ.க துளிர்க்க முடியாது. பா.ஜ.க விஷச்செடி போன்றது. தமிழகத்தில் அந்தக் கட்சி காலூன்றினால் மக்கள் நிம்மதியாக இருக்க முடியாது. அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி தமிழகத்தில் எடுபடாது. அந்தக் கூட்டணி என்பது கட்டாயத் திருமணம் போன்றது’’ என்றார் ப.சிதம்பரம்.

இதேபோல, 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போதும் அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணியைக் `கட்டாயத் திருமணம் போன்றது’ என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவரான திருநாவுக்கரசர் விமர்சித்தார். மேலும், தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி என்பது உறவின்முறை அடைப்படையில் நடைபெறும் மனம் ஒத்த திருமணம் என்றும் திருநாவுக்கரசர் குறிப்பிட்டார். அதற்கு பதில் கொடுத்த பா.ஜ.க-வின் முன்னாள் மத்திய இணை அமைச்சரான பொன்.ராதாகிருஷ்ணன், ``தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியைக் கள்ளத் திருமணம் போன்றது'' என்று விமர்சித்தார்.

மேலும் அவர், ``அ.தி.மு.க - பா.ஜ.க இடையிலான கூட்டணி என்பது ஒரு கட்டாயத் திருமணம் என்று எதிர்க்கட்சியினர் விமர்சித்திருக்கிறார்கள். பெற்றோருக்கு எதிராக, உறவினர்களுக்கு எதிராக, சொந்த பந்தங்களுக்கு எதிராக, நண்பர்களுக்கு எதிராக ஓடிப்போய்க் கள்ளத் திருமணம் செய்துகொள்வதைப்போல, டெல்லிக்கு ஓடிப்போய் காங்கிரஸுடன் தி.மு.க கூட்டணி பேசியிருக்கிறது. அத்தகைய தி.மு.க-வுக்கு அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி பற்றிப் பேசுவதற்கு தகுதி இல்லை. அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி முறைப்படியானது. `கூடா நட்பு கேடாய் முடியும்' என்று கருணாநிதியே கூறியிருக்கிறார். இதுதான் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி’’ என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

நாராயணன்
நாராயணன்

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பரபரப்பு தொடங்கியிருக்கும் இந்த நேரத்தில், அதே போன்ற விமர்சனத்தை ப.சிதம்பரம் முன்வைத்திருக்கிறார். இது குறித்து பா.ஜ.க-வின் செய்தித் தொடர்பாளரான நாராயணன் திருப்பதியிடம் பேசினோம். ``2014 தேர்தல் சமயத்தில், அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸின் அழுத்தம் காரணமாக, தி.மு.க தலைவருக்குச் சொந்தமான தொலைக்காட்சியில் சி.பி.ஐ சோதனை நடத்தியது. அப்படி ஓர் அழுத்தம் கொடுத்து தி.மு.க-வுடன் கட்டாயக் கூட்டணி வைத்துக்கொண்ட காங்கிரஸ் கட்சியின் ப.சிதம்பரம், கட்டாயக் கல்யாணம் பற்றி பேசலாமா?

அதேபோல 2009 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு, மத்திய அமைச்சரவையில் தங்களுக்கு என்னென்ன துறைகள் வேண்டும் என்று தி.மு.க கட்டாயப்படுத்தியதும், அதற்கு காங்கிரஸ் அடிபணிந்ததும் அனைவரும் அறிந்த ஒரு வரலாறு. அப்படிப்பட்ட இவர்களுக்கு எங்கள் கூட்டணி பற்றிப் பேசுவதற்கு எந்தவித தார்மிக உரிமையும் கிடையாது. தேசிய ஜனநாயகக் கூட்டணி என்பது ஆலமரம் போன்றது. அதை அசைக்க முடியாது. தோல்வி பயத்தில் இது போன்ற தவறான கருத்துகளை தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியைச் சேர்ந்த தலைவர்கள் தெரிவித்துக்கொண்டிருக்கிறார்கள்” என்றார் நாராயணன் திருப்பதி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவரும், தமிழ்நாடு காங்கிரஸ் ஊடகப்பிரிவின் தலைவருமான கோபண்ணாவிடம் பேசினோம். ``அ.தி.மு.க-வால் பா.ஜ.க-வை விட முடியாது. அதேபோல, பா.ஜ.க-வால் அ.தி.மு.க-வை விட முடியாது என்கிற நிலையில்தான் அந்தக் கூட்டணி இருக்கிறது. கூட்டணி என்று சொல்லிக்கொள்கிறார்களே ஒழிய இதுவரை அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணியின் தலைவர்கள் சந்தித்துப் பேசியதே கிடையாது.

கோபண்ணா
கோபண்ணா

நாங்கள் அப்படி அல்ல. எங்கள் கூட்டணியின் தலைவர்கள் அடிக்கடி சந்தித்துக்கொள்கிறார்கள். ஒருமித்த கருத்துகளுடன் பல முடிவுகளை ஒரு மனதுடன் எடுக்கிறோம். எங்களின் அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஒரே மேடையில் அமர்கிறோம். ஒன்றாகப் போராட்டம் நடத்துகிறோம். ஒருமித்த கருத்தும், ஒருங்கிணைப்பும் எங்களிடம் இருக்கிறது. ஆனால், அங்கு எதுவும் கிடையாது. அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணித் தலைவர்கள் இதுவரை ஒரு முறையாவது சந்தித்துப் பேசியிருக்கிறார்களா... அ.தி.மு.க அலுவலகத்துக்கு அவர்களின் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் சென்று பேசியிருக்கிறார்களா... எதுவும் கிடையாது

கூட்டணிக்கான எந்த இலக்கணமும் இல்லாமல் அந்தக் கூட்டணி இருக்கிறது. அவர்களுக்குக் கொள்கை கிடையாது. சுயநலத்தின் அடிப்படையில் சந்தர்ப்பவாதத்துக்காக ஒரு கூட்டணியை அமைத்திருக்கிறார்கள். பா.ஜ.க-வை அவர்களால் எதிர்க்க முடியாது. ஏனென்றால், பல ஊழல் வழக்குகளில் அ.தி.மு.க அமைச்சர்கள் சிக்கியிருக்கிறார்கள். சி.பி.ஐ விசாரணை, வருமான வரிச் சோதனை, அமலாக்கத்துறை சோதனை என்று மத்திய பா.ஜ.க அரசு மிரட்டத் தொடங்கினால், அ.தி.மு.க-வினர் ஆட்டம் கண்டுவிடுவார்கள். அப்படி பயமுறுத்தியே அ.தி.மு.க-வை பா.ஜ.க வசப்படுத்திவைத்திருக்கிறது. எனவே, பா.ஜ.க என்னதான் மிரட்டினாலும், அழுத்தம் கொடுத்தாலும் அ.தி.மு.க அடிபணிந்துவிடுகிறது.

திருநாவுக்கரசர்
திருநாவுக்கரசர்

அரசியலுக்கு ரஜினிகாந்த் வராத நிலையில், சட்டமன்றத் தேர்தலில் அதிகமான இடங்களை பா.ஜ.க கேட்பதாகத் தகவல்கள் வெளியாகின்றன. 2-3 சதவிகித வாக்குவங்கியைக் கொண்ட பா.ஜ.க-வுக்கு அதிகமாக தொகுதிகளைக் கொடுத்துவிட்டால், அதன் கூட்டணியில் இருக்கும்.பா.ம.க., தே.மு.தி.க போன்ற மற்ற கட்சிகளுக்கு எப்படி சீட் கொடுப்பது என்ற சிக்கலில் அ.தி.மு.க இருக்கிறது. எனவே, அங்கு மிகப்பெரிய குழப்பம் இருக்கிறது. எனவேதான், அந்தக் கூட்டணியைக் `கட்டாயத் திருமணம்’ என்கிறோம். எங்கள் கூட்டணியில் எந்தக் குழப்பமும் இல்லை. முதல்வர் யார் என்பதில் எங்கள் கூட்டணியில் எந்தக் குழப்பமும் இல்லை. தமிழகத்தின் அடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்தான் என்று நாங்கள் அனைவரும் ஒரே குரலில் உறுதியுடன் கூறுகிறோம். அந்த அளவுக்கு நாங்கள் ஒற்றுமையுடன் இருக்கிறோம். எங்கள்மீது எந்த விமர்சனமும் வைக்க முடியாது” என்றார் கோபண்ணா.

ரஜினியின் ஆதரவு: எடப்பாடிக்கா... சீமானுக்கா... கமலுக்கா? #TNElection2021

இது குறித்து அ.தி.மு.க-வின் செய்தித் தொடர்பாளரான வழக்கறிஞர் சிவசங்கரியிடம் பேசினோம். ``அ.தி.மு.க-வைப் பொறுத்தவரையில், நாங்கள் எடுத்த முடிவுகளில் வெற்றிபெற்றிருக்கிறோம். கடந்த நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வந்தது. அப்போது, அ.தி.மு.க அரசு மீது மக்கள் கோபத்துடன் இருக்கிறார்கள் என்றும், அதனால் இடைத்தேர்தலில் வெற்றிபெற்று மறுநாளே ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்றும் தி.மு.க தலைவர் ஸ்டாலின் கூறினார். பா.ஜ.க-வுடன் கூட்டணி சேர்ந்திருப்பதால் அ.தி.மு.க-வுக்கு கடும் எதிர்ப்பு இருக்கிறது என்று சொல்லப்பட்டது. ஆனால், இடைத்தேர்தலில் அதிகமான தொகுதிகளில் வெற்றுபெற்று ஆட்சியைத் தொடர்கிறோம்.

நாடாளுமன்றத் தேர்தலில், கூட்டணிக் கட்சியான பா.ஜ.க-வுக்கு ஐந்து தொகுதிகளைக் கொடுத்து, பிரதமர் வேட்பாளராக மோடியை அறிவித்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. மத்தியில் பா.ஜ.க அமோக வெற்றிபெற்றது. காங்கிரஸ் படுதோல்வியடைந்தது. மீண்டும் ஆட்சிக்கு வர முடியவில்லை. `கூடா நட்பு கேடாய் முடியும்’ என்று காங்கிரஸ் கட்சியை கருணாநிதி விமர்சித்தார். ஆனால், காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளர் என்று ஸ்டாலின் அறிவித்தார். அப்படியென்றால், அவர்களுக்கு என்ன கட்டாயம் இருந்தது?

சிவசங்கரி
சிவசங்கரி

கூட்டணிக் கட்சியான பா.ஜ.க-வுக்கு ஐந்து தொகுதிகளைத்தான் அ.தி.மு.க அளித்தது. ஆனால், நாங்கள் ரொம்ப ஸ்ட்ராங்காக இருக்கிறோம் என்று சொல்லிக்கொண்ட தி.மு.க., காங்கிரஸ் கட்சிக்கு ஏன் பத்து தொகுதிகளைக் கொடுத்தது... அப்படியென்றால் எந்தக் கூட்டணி கட்டாயத் திருமணம்... அவர்களுக்கு என்ன நிர்ப்பந்தம்... எங்களுக்கு ஒரு தேசியக் கட்சி தேவை, தேசியத் தலைவர் தேவை என்பதால் பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்திருக்கிறோம். நாங்கள் எடுத்த முடிவில் உறுதியாக இருக்கிறோம். எங்களைப் பொறுத்தவரையில் யதார்த்தமாகப் போய்க்கொண்டிருக்கிறோம். `நாங்கள் ஏன் காங்கிரஸைத் தூக்கிச் சுமக்க வேண்டும்...’ என்று தி.மு.க-வைச் சேர்ந்த கே.என்.நேரு கேட்டார். `உங்களுக்கு என்ன வாக்குவங்கி இருக்கிறது...’ என்று துரைமுருகன் கேட்டார். எங்கள் கூட்டணியை விமர்சனம் செய்யும் அவர்களுக்கு இதெல்லாம் மறந்துவிட்டதா?” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு