Published:Updated:

`பணக்கார' தி.மு.க, `சரிந்த' பா.ம.க! - சொத்துப் பட்டியலில் பின்னுக்குத் தள்ளப்பட்ட அ.தி.மு.க

இந்தியா முழுவதும் உள்ள மாநிலக் கட்சிகளின் சொத்து விவரங்களை ஜனநாயக சீர்திருத்த அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில் தி.மு.க இரண்டாவது இடத்தில் உள்ளது.

தமிழக அரசியல் கட்சிகள்
தமிழக அரசியல் கட்சிகள்

தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ள தேசிய மற்றும் மாநிலக் கட்சிகள் ஆண்டுதோறும் தங்களின் சொத்து விவரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும். அதன் அடிப்படையில் கிடைக்கும் விவரங்களை வைத்து, `எந்தக் கட்சி அதிக சொத்து வைத்துள்ளது?' என்ற பட்டியலை ஜனநாயக சீர்திருத்த அமைப்பு வெளியிட்டு வருகிறது.

தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம்

கட்சிகளின் நிலையான சொத்துகள், கடன்கள், வைப்புத் தொகைகள், முதலீடு, கட்சியின் செலவீனங்கள் போன்றவை இதில் அடங்கும். 2017-18-ம் ஆண்டுக்கான மாநிலக் கட்சிகளின் சொத்து விவரப் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தேசிய அளவில் சமாஜ்வாதி கட்சி முதல் இடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் தி.மு.க-வும் மூன்றாவது இடத்தில் அ.தி.மு.க-வும் உள்ளன.

தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ள 42 கட்சிகளின் மொத்த சொத்து மதிப்பு ரூ.1,320 கோடியாக உள்ளது. இதில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி ரூ.583 கோடியுடன் முதல் இடத்தில் உள்ளது. 2016-17 ம் ஆண்டு சமாஜ்வாதி கட்சியின் சொத்து மதிப்பு ரூ.571 கோடியாக இருந்தது. அது தற்போது 2.13 சதவிகிதம் உயர்ந்துள்ளது.

ஸ்டாலின்
ஸ்டாலின்

திராவிட முன்னேற்றக் கழகம்

தி.மு.க-வின் சொத்து மதிப்பு 2016-17-ம் ஆண்டுகளில் ரூ.183.36 கோடியாக இருந்தது. அது தற்போது 4.5% அதிகரித்து 2017-18-ம் ஆண்டில் ரூ.191.64 கோடியாக உள்ளது. இந்தத் தொகையில் ரூ.171 கோடியை முதலீடு செய்துள்ளது தி.முக.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

தமிழகத்தில் ஆளும் கட்சியான அ.தி.மு.க கடந்த 2016-17-ம் நிதியாண்டில் ரூ.187 கோடி சொத்து மதிப்புடன் இருந்தது. இந்த வருடம் (2017-18) அ.தி.மு.க-வின் சொத்து மதிப்பு ஒரு சதவிகிதம் அதிகரித்து ரூ.189 கோடியாக உள்ளது. கடந்தமுறை அ.தி.மு.க-தான் இரண்டாவது இடத்தில் இருந்தது. இந்த ஆண்டு அ.தி.மு.க-வை பின்னுக்குத் தள்ளி, தி.மு.க இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ்
ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ்

தெலுங்கு தேசம் கட்சி

ஆந்திர எதிர்க்கட்சியான தெலுங்குதேசம் கட்சி 131 கோடி ரூபாயுடன் நான்காவது இடத்தில் உள்ளது. கடந்த 2016-17-ம் நிதியாண்டில் ரூ.114 கோடியாக இருந்த சொத்து மதிப்பு இந்த வருடம் 15 சதவிகிதம் அதிகரித்து ரூ.131 கோடியாக உள்ளது.

பா.ம.க - தே.மு.தி.க

பாட்டாளி மக்கள் கட்சியின் சொத்து மதிப்பு கடந்த 2016-17ம் ஆண்டு 2.63 கோடியாக இருந்து, இந்த வருடம் (2017-18) 2.59 கோடியாகக் குறைந்துள்ளது. தே.மு.தி.க-வை பொறுத்தவரை கடந்த நிதியாண்டில் ரூ.67 லட்சமாக இருந்து இந்த ஆண்டு ரூ.87 லட்சமாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த கட்சியின் சொத்து மதிப்பு 28 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

ராமதாஸ் - விஜயகாந்த்
ராமதாஸ் - விஜயகாந்த்

இதேபோன்று டி.ஆர்.எஸ் கட்சி, மதச்சார்பற்ற ஜனதா தளம், ஐக்கிய ஜனதாதளம் போன்ற மாநிலக் கட்சிகளின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிகரித்துள்ளது.