Published:Updated:

தி.மு.க-வின் முக்கியப் பிரமுகருக்கு சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் பொறுப்பு?!

சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சி

சென்னை மாநகராட்சியில் மீண்டும் சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தைச் செயல்படுத்தவிருப்பதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இந்தத் திட்டம் சார்ந்த பணிகளைக் கட்சியின் முக்கியப் பிரமுகர் ஒருவரிடம் ஒப்படைக்கத் திட்டமிடப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிங்காரச் சென்னை திட்டம் ஒரு பார்வை:

உலகிலுள்ள பழம்பெரும் மாநகராட்சிகளில் சென்னை மாநகராட்சியும் ஒன்று. `இந்த மாநகராட்சியின் மக்களால் நேரடியாக வாக்களித்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர்’ என்ற பெருமைக்குரியவர் இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின். சென்னையை 'சிங்காரச் சென்னை’யாக மாற்றுவேன் என்று கூறினார் ஸ்டாலின். அதன்படி, ஜவகர்லால் நேரு நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ்' சிங்காரச் சென்னைத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

இந்தத் திட்டத்தின் கீழ், சென்னையில் மேம்பாலங்கள், தரைப்பாலங்கள், சிறிய பாலங்கள், சாலை விரிவாக்கம், நடைபாதை அமைத்தல், சாலைப் பராமரிப்பு, பூங்காக்கள் அமைத்தல், கடற்கரை சீரமைப்பு போன்ற பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 2001-ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்ததும், சிங்காரச் சென்னை திட்டம் அப்படியே நின்றபோனது. பின்னர் 2006-ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததும், மீண்டும் இந்தத் திட்டம் கையிலெடுக்கப்பட்டது. இந்தக் காலகட்டத்தில்தான் சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கின.

2011-ம் ஆண்டு அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், சிங்காரச் சென்னை திட்டம் நீர்த்துப்போனது. கடந்த 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட முதல்வரின் கனவுத் திட்டம் தற்போது மீண்டும் `சிங்காரச் சென்னை திட்டம் 2.0’ என்ற பெயரில் கையில் எடுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின்கீழ், சென்னை மாநகராட்சியை சர்வதேசத் தரத்துக்கு உயர்த்தப்போவதாகக் கூறப்பட்டிருக்கிறது. கலை, கலாசாரம், கல்வி, சுகாதாரம், விளையாட்டு போன்ற பல்வேறு சிறப்பம்சங்களோடு இந்தத் திட்டம் தயாராகிவருகிறது.

சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தில் ‘புராஜக்ட் ப்ளூ’ என்ற முக்கியத் திட்டம் செயல்படுத்தப்படவிருக்கிறது. அதன்படி, சென்னையிலுள்ள கடற்கரைகள் மேம்படுத்தப்படவுள்ளன.

இந்தத் திட்டம் தொடர்பாக சில தினங்களுக்கு முன்னர் சென்னை மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட பல்வேறு மாநகராட்சியின் துறை சார்ந்த உயரதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினர். இந்தக் கூட்டத்தில் சிங்காரச் சென்னை திட்டப் பணிகளை மேற்கொள்வதற்கான செலவினங்கள் மற்றும் நிதிநிலை குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை, மின்வாரியம் மற்றும் குடிநீர் வாரியத்திடமிருந்து திட்ட அறிக்கைகள் கேட்கப்பட்டுள்ளன. இந்த அறிக்கை தயாரானவுடன், மீண்டும் ஒரு கூட்டம் நடைபெறும் என்று தெரியவருகிறது.

சிங்காரச் சென்னை 2.0

இந்தத் திட்டத்தில், முதலில் திட்டமிடப்பட்டதைத் தாண்டியும் பல்வேறு முக்கிய அம்சங்கள் உள்ளன. குறிப்பாக, பூங்காக்களைச் சீரமைத்து மேம்படுத்துவது, செல்லப்பிராணிகளுக்கு பிரத்யேக பூங்கா அமைப்பது, மாநகராட்சிப் பள்ளிகளின் தரம் உயர்த்துதல், நெரிசல் அதிகமுள்ள மற்றும் தேவையான இடங்களில் மேம்பாலங்கள் கட்டுவது, சுரங்கப்பாதைகளை உருவாக்குவது, ரயில் நிலையங்களை மேம்படுத்துவது, கடற்கரைகளை மேலும் அழகுபடுத்துவது மற்றும் மேம்படுத்துவது, கடலுக்கு அடியில் மீன் அருங்காட்சியகம் அமைப்பது, கடற்கரைகளைச் சுற்றி நீர் விளையாட்டுகள் கொண்டுவந்து அதன் மூலமும் அரசுக்கு வருவாய் ஏற்படுத்துவது உட்பட பல திட்டங்களை அரசு கைவசம் வைத்திருக்கிறது. இதைவிட முக்கியமாக, கூவம் ஆற்றைச் சுத்தப்படுத்தி மேம்படுத்துவதும் இந்தத் திட்டத்தில் இருப்பதாகக் கூறுகிறார்கள்.

முதலமைச்சர் ஸ்டாலினின் கனவுத் திட்டமான சிங்காரச் சென்னை 2.0 நிறைவேற்றும் பொறுப்பு யாருக்கு வழங்கப்படவுள்ளது என்று தி.மு.க தரப்பில் விசாரித்தபோது, ``சென்னையில் தன் தொகுதியில் இறங்கி தினமும் மக்கள் பணியைப் பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு வி.ஐ.பி-க்குத்தான் அந்தப் பொறுப்பு” என்று சூசகமாகச் சொன்னார்கள்.

அடுத்த கட்டுரைக்கு