Published:Updated:

`உயர்த்தப்பட்ட வயது வரம்பு; 30 லட்சம் உறுப்பினர்கள் இலக்கு!’ - இளைஞரணியில் உதயநிதி அதிரடி

சத்யா கோபாலன்

சென்னையில் நடந்த தி.மு.க இளைஞரணி கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன!

DMK youth wing meeting
DMK youth wing meeting

தி.மு.க-வின் இளைஞரணி மாநிலச் செயலாளராக கடந்த ஜூலை மாதம் தி.மு.க தலைவர் ஸ்டாலினின் மகனும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டார். இதையடுத்து இளைஞரணி கூட்டம், வேலூர் தேர்தல் பிரசாரம் என பிஸியாக அரசியலில் மும்முரம் காட்டிவருகிறார் உதயநிதி.

udhayanidhi stalin
udhayanidhi stalin

இந்த நிலையில் இன்று சென்னை, கிண்டியில் உள்ள ஹில்டன் ஹோட்டலில் தி.மு.க இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இளைஞரணியில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தி.மு.க முன்னாள் தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்திய பிறகு தொடங்கப்பட்ட கூட்டத்தில், மறைந்த எம்.பி, எம்.எல்.ஏ மற்றும் மாவட்ட உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களுக்கும், நீலகிரி மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

udhayanidhi stalin
udhayanidhi stalin

தொடர்ந்து, சமீபத்தில் நடந்த மக்களவைத் தேர்தலில் 39 தொகுதிகளில் தி.மு.க கூட்டணி வெற்றி பெற்றதற்கு உழைத்த அனைத்துத் தொண்டர்கள் மற்றும் கழக நிர்வாகிகளுக்கு நன்றி கூறி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் மாநில மொழிகளுக்கான உரிய அந்தஸ்தைப் பெற்றுத் தந்து, தபால் தேர்வை அந்தந்த மாநில மொழிகளில் எழுதுவதற்கு வகை செய்த ஸ்டாலினுக்கு நன்றி கூறி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Vikatan

அண்ணா, கருணாநிதி ஆகியோரின் பிறந்தாளில் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்படும் விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட மற்றும் மாநில அளவில் நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. தொடர்ந்து தி.மு.க-வில் 30 லட்சம் இளைஞர்களை உறுப்பினர்களாகச் சேர்க்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

DMK youth wing meeting
DMK youth wing meeting

15 வயது முதல் 30 வயதுள்ளவர்கள் இளைஞரணியில் உறுப்பினர்களாக இருக்கலாம் என்ற விதியை மாற்றி 18 முதல் 35 வயதுள்ளவர்கள் உறுப்பினர்களாக இருக்கலாம், அவர்களுக்கு உடனடியாக புகைப்படத்துடன் கூடிய உறுப்பினர் அட்டை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

தூர்வாரப்படாமல் உள்ள நீர்நிலைகள், பிளாஸ்டிக் பயன்பாடுகள் போன்ற சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்னைகளில் தி.மு.க இளைஞரணி அதிக கவனம் செலுத்த வேண்டும். இந்தப் பணிகளைக் கருணாநிதி பிறந்த ஊரான திருக்குவளையிலிருந்து தொடங்க வேண்டும் என உதயநிதி தெரிவித்தார்.

udhayanidhi stalin
udhayanidhi stalin

மூன்று மாதங்களுக்கு மிகாமல் ஒரு மண்டல மாநாடு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு வேலையில் தமிழருக்கு முன்னுரிமை வழங்காதது, மும்மொழிக் கொள்கை வரையறை, பொருளாதாரக் கொள்கை ஆகியவற்றை எதிர்த்து மத்திய அரசைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது