Published:Updated:

13 ஆண்டுகளில் முறியடிக்கப்பட்ட அன்வரின் 194; 50 ஆண்டுகளாக முறியடிக்கப்படாத திமுகவின் 184! #Flashback

தி.மு.க
தி.மு.க

தமிழக அரசியல் வரலாற்றில், இதுவரை நடந்து முடிந்துள்ள 15 சட்டமன்றத் தேர்தல்களிலும், தனிப்பட்ட ஒரு கட்சி, 1971 தேர்தலில் தி.மு.க வெற்றி பெற்ற 184 தொகுதிகள் என்கிற சாதனையை முறியடிக்க முடியவில்லை. ஏன் தி.மு.கவால் கூட அந்த இடத்தை எட்ட முடியவில்லை.

1997...மே 21...இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் வாழ்வில் மறக்க முடியாத நாள். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் சயீத் அன்வர், இந்திய பவுலர்களின் பந்துகளை நாலாபுறமும் சிதறடித்தார். கடைசியாக, 194 ரன்னில் கங்குலியின் அபார கேட்ச்சால் அவுட் ஆனார். சயித் அன்வரின் இந்த சாதனை கிட்டத்தட்ட பல ஆண்டுகள் முறியடிக்கப்படாலேயே இருந்தது. ஜெயசூர்யா, சச்சின், கங்குலி, டிராவிட், தோனி எனப் பலரும் மிக நெருக்கமாக வந்து வாய்ப்பைத் தவறவிட்டனர். கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்குப் பிறகு, குவாலியரில் நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான, ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்து அந்தச் சாதனையை முறியடித்தார் சச்சின்.

சயீத் அன்வர்
சயீத் அன்வர்

ஆனால், தமிழக தேர்தல் வரலாற்றில், ஒரு சாதனை கடந்த ஐம்பதாண்டுகளாக இன்னும் முறியடிக்கபடாமலேயே இருக்கிறது. இதுவரை நடந்து முடிந்துள்ள 15 சட்டமன்றத் தேர்தல்களிலும், 1971 தேர்தலில் தி.மு.க 184 தொகுதிகளில் வெற்றி என்கிற சாதனைதான் அது.

தி.மு.கவைப் பொறுத்தவரை, 1957-ல் நடந்த பொதுத்தேர்தலில் முதன்முதலாகப் போட்டியிடுகிறது. அதில்,15 இடங்களில் வெற்றிபெற்றது. ஆனால், அந்தத் தேர்தலில் அனைவருமே ஒரே சின்னத்தில் போட்டியிடவில்லை. தொடர்ந்து 1958-ம் ஆண்டு மார்ச் இரண்டாம் தேதி, மாநிலக் கட்சியாக அந்தஸ்து பெற்று, உதயசூரியன் சின்னம் அதிகாரபூர்வமாக தி.மு.கவுக்குக் கிடைத்தது. தொடர்ந்து, 1962-ல் நடந்த தேர்தலில், 143 இடங்களில் போட்டியிட்டு, 50 தொகுதிகளில் வெற்றி பெற்றது தி.மு.க. அடுத்ததாக, 1967-ல் நடந்த பொதுத்தேர்தலில், 174 இடங்களில் போட்டியிட்டு 137 இடங்களில் வெற்றி பெற்று முதல்முறையாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது தி.மு.க. அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் அண்ணாதுரை முதல்வராகத் தேர்தெடுக்கப்பட்டார்.

அண்ணாதுரை
அண்ணாதுரை

பின்னர், 1971...அண்ணா மறைவுக்குப் பிறகு தி.மு.க சந்திக்கும் முதல் பொதுத்தேர்தல். இந்தத் தேர்தலில்தான் 203 இடங்களில் போட்டியிட்டு,184 இடங்களில் அபார வெற்றி பெறுகிறது இந்தக் கட்சி. காங்கிரஸில் ஏற்பட்ட பிரிவால் காமராஜர் ஸ்தாபன காங்கிரஸ் என்கிற கட்சியைத் தொடங்கி போட்டியிட்டார். இந்திரா காங்கிரஸ் இந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை. தி.மு.கவுக்கு ஆதரவாக தேர்தல் பணியாற்றியதாகச் சொல்லப்படுகிறது. இந்தத் தேர்தலில் காமராஜர்- ராஜாஜி அணிக்கு மிகப்பெரிய அளவில் கூட்டம் கூடியது. கருத்துக் கணிப்புகள் எல்லாம் காமராஜருக்கு ஆதரவாகவே இருந்துள்ளன. ஆனாலும் இந்தத் தேர்தலில் மாபெரும் வெற்றியைப் பெற்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது தி.மு.க.

இந்தத் தேர்தலுக்கு முன்பாக, 1952-ல் 152, 57-ல் 151,62-ல் 139 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது காங்கிரஸ் கட்சி. 67-ல் தி.மு.கவும் 137 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. 71 தேர்தலுக்குப் பிறகு நடந்த மூன்று தேர்தல்களிலும் எம்.ஜி.ஆரின் அண்ணா தி.மு.க வெற்றி பெற்றிருந்தாலும், முறையே,77-ல் 130, 1980-ல் -129, 1984-ல் 132 இடங்களில்தான் வெற்றி பெற்றது. தொடர்ந்து எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு 89-ல் நடந்த தேர்தலில், அ.தி.மு.க ஜெ அணி, ஜா அணி என இரண்டாகப் பிளவுற்ற போதும், தி.மு.க 150 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

கருணாநிதி - எம்.ஜி.ஆர்
கருணாநிதி - எம்.ஜி.ஆர்

தொடர்ந்து 91-ல் அ.தி.மு.க கூட்டணி அபார வெற்றி பெற்றாலும், அ.தி.மு.க 164 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்தத் தேர்தலில் முதலில் தி.மு.க சார்பில் கருணாநிதி மட்டுமே வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தி.மு.க, அ.தி.மு,.க என மாறி மாறி ஆட்சிக்கு வந்தாலும், 96-ல் தி.மு.க 173 இடங்களையும், 2001-ல் அ.தி.மு.க 132 இடங்களையும், 2006-ல் தி.மு.க - 96 இடங்களையும், 2011-ல் அ.தி.மு.க 146 இடங்களையும், கடைசியாக 2016-ல் அதே அ.தி.மு.க 134 இடங்களிலும் மட்டுமே வெற்றி பெற்றிருக்கின்றன. ஆக, 1971-ல் தி.மு.க பெற்ற மாபெரும் வெற்றியை இன்னும் யாராலும் நெருங்க முடியவில்லை அதற்கு அடுத்ததாக, இரண்டாவது இடத்திலும் கூட, 96 தேர்தலில் தி.மு.க பெற்ற 173 இடங்களே இருக்கின்றன.

எந்தக் கட்சிக்கு எவ்வளவு சீட்டு... தி.மு.க, அ.தி.மு.கவின் கூட்டணிக் கணக்கு! #TNElection2021

ப்ரியன் (மூத்த பத்திரிகையாளர்)

''1971 காலகட்டத்தில் மன்னர் மானிய ஒழிப்பு, வங்கிகளை தேசிய மயமாக்கியது உள்ளிட்ட பல்வேறு மக்கள் நல நடவடிக்கைகளால் இந்திரா காந்திக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயர் இருந்தது. அவர் பாராளுமன்றத்தை ஓராண்டுக்கு முன்பே கலைத்து தேர்தலுக்கு பரிந்துரை செய்தார். அதே பார்முலாவைத்தான் தமிழகத்தில் கருணாநிதியும் பின்பற்றினார். நாடாளுமன்றத் தேர்தலுடனே சட்டமன்றத் தேர்தலையும் நடத்த முடிவு செய்தார். இந்திரா காந்தியின் வேண்டுகோளை ஏற்று, குடியரசுத் தேர்தலில், வி.வி.கிரிக்கு திமுக ஆதரவு அளித்ததன் காரணமாக அப்போது, தி.மு.க, இந்திரா காங்கிரஸுடன் நல்ல நட்புறவு இருந்தது. அந்தத் தேர்தலில் இந்திரா காங்கிரஸுக்கு நாடாளுமன்றத்துக்கு மட்டும் 10 தொகுதிகளை ஒதுக்கினார் கருணாநிதி. சட்டமன்றத்துக்கு இடங்கள் ஒதுக்கவில்லை. மற்ற சிறிய கட்சிகளுக்கு மட்டும் கொஞ்சம் இடங்களை ஒதுக்கிவிட்டு பெருவாரியான இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்திரா காந்தியின் புகழைப் பயன்படுத்திக்கொண்டு, அந்தக் கப்பலுடனே சேர்ந்து கரையேற வேண்டும் என்கிற கருணாநிதியின் புத்திசாலித்தனம் பாராட்டத்தக்கது.”

ப்ரியன்
ப்ரியன்

1971 தேர்தல் வெற்றியின்போது, அ.தி.மு.க தொடங்கப்படவில்லை என்பதை ஒரு காரணமாகச் சொல்லலாம். ஆனால், அ.தி.மு.க தொடங்கப்பட்ட பிறகும், அந்தக் கட்சிக்கு எதிராக தி.மு.க,1996-ல் பெற்ற 173 இடங்களே, ஒரு கட்சி பெற்ற அதிக இடங்களின் வரிசையில் இரண்டாவதாக இருக்கிறது.

வருகின்ற 2021 தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுக்கு குறைவான இடங்களை ஒதுக்கிவிட்டு 200 தொகுதிகளில் போட்டியிட தி.மு.க , அ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளும் முடிவு செய்திருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பாக செய்திகள் வெளியாகின. ஒருவேளை அப்படிப் போட்டியிட்டு, மக்களின் ஏகோபித்த ஆதரவு கிடைத்தால், கடந்த ஐம்பதாண்டுகளாக முறியடிக்கபடாமல் இருக்கிற 184 என்கிற எண்ணிக்கை முறியடிக்கப்படவும் வாய்ப்பிருக்கிறது.

என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!

அடுத்த கட்டுரைக்கு