Published:Updated:

`ஈழத்தமிழர்' துரோகம், பிண அரசியல்... எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு தி.மு.கவின் பதில் என்ன?

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், இலங்கைத் தமிழர்களுக்குத் துரோகம், பிண அரசியல் போன்ற குற்றச்சாட்டுகள், தி.மு.க-வை மையப்படுத்தி பா.ஜ.க மற்றும் பா.ம.க தரப்புகளால் எழுப்பப்பட்டுள்ளன.

அன்புமணி, ஸ்டாலின்
அன்புமணி, ஸ்டாலின்

மத்திய பா.ஜ.க அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக வடகிழக்கு மாநிலங்கள் பற்றியெரிகின்றன. டெல்லி உட்பட பல்வேறு இடங்களில் மாணவர் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. மாணவர் போராட்டங்களை ஒடுக்குவதற்கான நடவடிக்கையில் போலீஸார் இறங்கியதால், வன்முறைகள் வெடிக்கின்றன. காங்கிரஸ், தி.மு.க., இடதுசாரிகள் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராகப் போராட்டங்கள் நடத்திவருகின்றன.

தமிழகத்தில் தி.மு.க சார்பில் மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெற்றது. அப்போது, காஞ்சிபுரத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பேசிய தி.மு.க தலைவர் ஸ்டாலின், ``பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து பிற மதத்தவர் வந்தால் ஏற்றுக்கொள்வோம் என்கிறீர்களே... இஸ்லாமியர்களை மட்டும் புறக்கணிப்பதற்கு என்ன காரணம்? அண்டை நாடுகளிலிருந்து வருவோரின் நன்மைக்காக சட்டம் கொண்டுவருவதாகச் சொல்கிறீர்களே, இலங்கை அண்டை நாடு இல்லையா?

ஸ்டாலின்
ஸ்டாலின்

அங்குள்ள ஈழத் தமிழர்களை மட்டும் புறக்கணிப்பதற்கு என்ன காரணம்? அ.தி.மு.க மற்றும் பா.ம.க-வின் மாநிலங்களவை உறுப்பினர்கள் குடியுரிமைத் திருத்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்ததால்தான், இந்தச் சட்டம் வந்திருக்கிறது. இதை ஆதரித்து வாக்களித்ததன் மூலம் அ.தி.மு.க-வும் பா.ம.க-வும் இலங்கைத் தமிழர்களுக்குத் துரோகம் செய்துள்ளன” என்று பேசினார்.

தி.மு.க-வின் போராட்டமும் ஸ்டாலினின் பேச்சும் பா.ஜ.க., அ.தி.மு.க., பா.ம.க கட்சிகளுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளன. ``தி.மு.க பிண அரசியல் நடத்தும் கட்சி...” என்று கடுமையாக விமர்சித்துள்ளார் முன்னாள் மத்திய அமைச்சரும் பா.ஜ.க-வின் தலைவர்களில் ஒருவருமான பொன்.ராதாகிருஷ்ணன். செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், ``பிணந்தின்னிக் கழுகுகள் எவ்வளவு உயரப் பறந்தாலும் பிணத்தின் மீதுதான் அதன் பார்வை இருக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டாக தி.மு.க-வின் செயல்பாடு உள்ளது. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஜாதி, மதம், மொழி ரீதியாகப் பிரித்து, சூழ்ச்சி செய்து தி.மு.க அதிகாரத்தில் அமர்ந்தது.

பொன்.ராதாகிருஷ்ணன்
பொன்.ராதாகிருஷ்ணன்

இந்தி எதிர்ப்பு என்று தி.மு.க கூறியதை நம்பி, மாணவர்கள் களப் பலியானார்கள். இலங்கைத் தமிழர் குறித்துப் பேசும் அருகதையை 2009-லேயே தி.மு.க இழந்துவிட்டது. ஒன்றரை லட்சம் தமிழர்கள் கொல்லப்படுவதற்கு தி.மு.க-வும் காங்கிரஸ் கட்சியும்தான் காரணம். பகல் வேடதாரியின் சொல்லைக் கேட்டு, மாணவர் சமுதாயம் தங்களை அழித்துக்கொள்ளக் கூடாது. தி.மு.க-வின் வார்த்தைகளில் முஸ்லிம்கள் மயங்கி விடக்கூடாது” என்று தி.மு.க மீது பாய்ந்திருக்கிறார்.

பா.ம.க-வின் இளைஞரணித் தலைவரும் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ், தி.மு.க தலைவர் ஸ்டாலினின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்திருப்பதுடன், இதுகுறித்து தம்முடன் நேரடியான விவாதத்துக்கு வருமாறு ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ``குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக காஞ்சிபுரத்தில் தி.மு.க நடத்திய போராட்டத்தில் பேசிய தி.மு.க தலைவர் ஸ்டாலின், பாட்டாளி மக்கள் கட்சிதான் இலங்கைத் தமிழர்களுக்கு மிகப்பெரிய துரோகம் இழைத்துள்ளது என்ற மிகப்பெரிய பொய்யைச் சொல்லியிருக்கிறார். பா.ம.க தொடங்கிய காலத்திலிருந்து இலங்கைத் தமிழர்களுக்காகப் பல போராட்டங்களை நடத்தியிருக்கிறோம். சிறை சென்றுள்ளோம். ஐ.நா மனித உரிமைகள் மன்றத்தில் பசுமைத் தாயகம் மூலமாக 50 முறைக்கு மேல் அழுத்தம் கொடுத்து போராடிவந்துள்ளோம்.

அன்புமணி
அன்புமணி

உண்மையிலேயே தி.மு.க-தான் இலங்கைத் தமிழர்களுக்குத் துரோகம் செய்தது. இலங்கையில் பிரச்னை தீவிரமடைந்த 1983-ம் ஆண்டுக்குப் பிறகு, தமிழகத்தை 12 ஆண்டுக்காலம் தி.மு.க ஆட்சி செய்தது. 18 ஆண்டுக்காலம் மத்திய அரசில் அங்கம் வகித்தது. அப்போது ஏன் இலங்கைத் தமிழர்களுக்கு தி.மு.க குடியுரிமையைப் பெற்றுத்தரவில்லை... இலங்கையில் 2009-ல் இறுதிப்போர் நடைபெற்றது. அந்த இறுதிப்போருக்கு முன்பாக காங்கிரஸ் கூட்டணியைவிட்டு நாங்கள் வெளியேறினோம். ஆனால், இறுதிக்கட்டப் போரில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டபோது ஏன் நீங்கள் ஆட்சியிலிருந்து வெளியேறவில்லை?

இறுதிக்கட்டப் போரில் ஒன்றரை லட்சம் தமிழர்களைக் கொன்று குவித்த நேரத்தில், மூன்று மணி நேரம் நாடக உண்ணாவிரதம் நடத்திய உங்கள் தலைவர், பேச்சுவார்த்தை மூலமாக இலங்கையில் போர் நின்றுவிட்டது என்று சொன்னார். அதை நம்பி இலங்கையில் பதுங்கு குழியில் இருந்த தமிழர்கள் வெளியே வந்தனர். அவர்களை இலங்கை ராணுவம் கொத்துக்கொத்தாகக் கொன்று குவித்தது. இந்தப் பாவச்செயல் துரோகம் அல்லவா.

பா.ம.க என்றுமே ஈழத்தமிழர்களுக்காகப் போராட்டங்கள் நடத்தி, ஐ.நா மன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இலங்கைத் தமிழர்களுக்கு யார் நன்மை செய்தது... யார் தீமை செய்தது என்பது பற்றி விவாதிக்கத் தயாராக இருக்கிறேன். வாங்க விவாதிப்போம்” என்று கூறியிருக்கிறார்.

செந்தில் குமார் எம்.பி ட்வீட்
செந்தில் குமார் எம்.பி ட்வீட்

அன்புமணியின் சவாலை ஏற்றுள்ளார் தி.மு.க-வின் நாடாளுமன்ற உறுப்பினரான செந்தில்குமார். அவர் தன் ட்விட்டர் பதிவில், ``நான் விவாதிக்கத் தயார். நீங்கள் சொல்லும் இடத்தில், சொல்லும் தேதியில், சொல்லும் நேரத்தில் உங்களுடன் விவாதிக்கத் தயார். பொதுவெளியில் சவால் விடுகிறேன். ஆரோக்கியமான விவாதத்துக்கு ஆர்வமுடன் காத்திருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து தி.மு.க-வின் செய்தித்தொடர்பாளரான வழக்கறிஞர் சரவணனிடம் பேசினோம்.``அன்புமணி எப்போதுமே லாஜிக்காகப் பேசுவது கிடையாது. `டயர் நக்கி' என்று யாரை இவர் கிண்டல் செய்தாரோ, அவர்களையே தன் வீட்டுக்கு அழைத்து வந்து விருந்துவைத்து உபசரித்தவர்தான் அன்புமணி. இலங்கைத் தமிழர் விவகாரத்தைப் பொறுத்தவரை தி.மு.க-வுக்கு எதிராக இவர்கள் சொல்லும் குற்றச்சாட்டுகள் புளித்துப்போனவை. அவற்றுக்கு எத்தனையோ முறை பதில் சொல்லிவிட்டோம். ஆனாலும், கீறல் விழுந்த ரெக்கார்டு மாதிரி சொன்னதையே சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

``எங்களுக்கு குடியுரிமை ஏன் அவசியம்?'' - முகாம் வாழ் ஈழத் தமிழர்கள் அடுக்கும் காரணங்கள்

`போர் என்று வந்தால் அப்பாவி மக்கள் சாகத்தான் செய்வார்கள்’ என்று சொன்ன ஜெயலலிதாவுடன் தானே பா.ம.க கூட்டணி வைத்தது. `விடுதலைப்புலிகள்தான் அப்பாவித் தமிழர்களைக் கேடயமாக வைத்திருக்கிறார்கள்’ என்று சொன்ன ஜெயலலிதாவின் அ.தி.மு.க-வுடன்தானே இப்போதும் அவர்கள் கூட்டணி வைத்திருக்கிறார்கள். எனவே, தி.மு.க மீது குற்றம்சாட்ட பா.ம.க-வுக்கு எந்தத் தகுதியும் இல்லை.

பா.ம.க-வும் மத்திய ஆட்சியில் இருந்தது. அப்போது, இலங்கைத் தமிழர்களுக்காக பா.ம.க என்ன செய்தது? அ.தி.மு.க-வும் பா.ம.க-வும் மாநிலங்களவையில் வாக்களிக்கவில்லை என்றால், குடியுரிமை திருத்தச் சட்டம் என்கிற மிக மோசமான சட்டமே வந்திருக்காது. அன்புமணி மாநிலங்களவைக்குப் போவதே கிடையாது. ஆனால், இப்போது மட்டும் வாக்களித்துவிட்டுச் சென்றுள்ளார். `அவர் ஊழல் வழக்கில் சிக்கியிருப்பதால், அதிலிருந்து தப்பிக்கவே இந்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளார்’ என்று எங்கள் கட்சியின் நாடாளுமன்றக்குழு தலைவர் டி.ஆர்.பாலு கூறியிருக்கிறார். அதுதான் உண்மை.

டி.ஆர்.பாலு
டி.ஆர்.பாலு

பா.ஜ.க-வைப் பொறுத்தவரையில், பிண அரசியல் செய்வது அந்தக் கட்சிக்குக் கைவந்த கலை. 2002-ல் குஜராத்தில் பா.ஜ.க செய்ததற்கு பெயர் என்ன? கோத்ராவில் இறந்தவர்களின் பிணங்களை ஊர்வலமாக எடுத்துச்சென்றதற்கு பெயர் பிண அரசியல் இல்லையா? புல்வாமாவில் இறந்த ராணுவவீரர்களின் பிணங்களை வைத்து அரசியல் செய்தது யார்? பா.ஜ.க தானே. எனவே, இப்படியெல்லாம் பேசுவதற்கு பா.ஜ.க-வினருக்கு வாய் கூச வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் பெற்ற வெற்றியை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. அதனால், இப்படியெல்லாம் பா.ஜ.க தலைவர்கள் உளறுகிறார்கள்” என்றார்.