Published:Updated:

`40 ஆண்டுகளில் இதுதான் முதல்முறை!' - தொண்டர்கள் மத்தியில் உற்சாகப்பட்ட ஐ.பெரியசாமி

திண்டுக்கல் மாவட்டத்தில் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் போன்ற பதவிகளில் ஆளும் அ.தி.மு.க-வைவிட அதிக இடங்களில் தி.மு.க வெற்றி பெற்றிருக்கிறது.

ஐ.பெரியசாமியிடம் வாழ்த்து பெறும் தொண்டர்கள்
ஐ.பெரியசாமியிடம் வாழ்த்து பெறும் தொண்டர்கள்

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 23 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் தி.மு.க 15 இடங்களிலும், ம.தி.மு.க 1 இடத்திலும், அ.தி.மு.க 7 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இதன் மூலம் மாவட்ட கவுன்சிலர் பதவியைத் தி.மு.க கைப்பற்றியுள்ளது. மாவட்டத்தில் உள்ள 232 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் 117 இடங்களைத் தி.மு.க-வும், 80 இடங்களை அ.தி.மு.க-வும் கைப்பற்றியுள்ளன.

உற்சாகத்தில் தி.மு.க... உணர்ந்துகொண்ட அ.தி.மு.க- உள்ளாட்சித் தேர்தல் சொல்லும் கணக்கு என்ன?

`தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி சட்டசபை தேர்தலைப் போலவே, உள்ளாட்சித் தேர்தலிலும் வியூகம் அமைத்துச் செயல்பட்டார். எந்தப் பகுதியில் கட்சி பலவீனமாக இருக்கிறது. அங்கு என்ன செய்ய வேண்டும் எனத் தொடர்ந்து ஆலோசனைக் கொடுத்துக்கொண்டே இருந்தார்.

அவரது ஆலோசனையின் பேரில் மாவட்டச் செயலாளர்கள் சக்கரபாணி, செந்தில்குமார் இருவரும் மாவட்டம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்தார்கள்' என்கிறார்கள் தி.மு.க. தொண்டர்கள். இந்த நிலையில், மாவட்டம் முழுவதும் அ.தி.மு.க-வைவிட அதிக இடங்களில் தி.மு.க வெற்றி பெற்றிருப்பதால் தி.மு.க தொண்டர்கள் உற்சாகம் அடைந்திருக்கிறார்கள்.

தி.மு.க தொண்டர்கள்
தி.மு.க தொண்டர்கள்

தி.மு.க துணைப்பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி வீடு, திண்டுக்கல் கோவிந்தாபுரம் அருகேயுள்ளது. அவரிடம் ஆசி வாங்க வெற்றி பெற்ற தி.மு.க வேட்பாளர்கள் மாவட்டம் முழுவதில் இருந்தும் வந்துகொண்டே இருந்தனர். இதனால் அந்தத் தெரு முழுவதும் மக்கள் கூட்டம் அலைமோதியது. ஐ.பிக்கு சால்வை போர்த்தி ஆசி வாங்குவதற்காகக் கூட்டம் அலைமோதியது.

தொண்டர்களின் மரியாதையை ஏற்றுக்கொண்டு, அவர்கள் மத்தியில் பேசிய ஐ.பெரியசாமி,``எதிர்க்கட்சியாக இருக்கும் ஒரு கட்சி உள்ளாட்சித் தேர்தலில் இத்தனை இடங்களில் வெற்றி பெற்றிருப்பது 40 ஆண்டுகளில் முதல்முறை. எதிர்க்கட்சியாக இருக்கும் தி.மு.க, இந்தத் தேர்தலில் அதிக இடங்களைப் பிடித்திருக்கிறது. தலைவர் ஸ்டாலின் மீது மக்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.

தி.மு.க தொண்டர்கள்
தி.மு.க தொண்டர்கள்

ஊராட்சியில் திறமையான நிர்வாகம் வேண்டும் என்றுதான் உங்களுக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்திருக்கிறார்கள். அந்த நம்பிக்கையைக் காப்பாற்றுங்கள்.

பிரசாரத்தின்போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முன்னுரிமை கொடுங்கள். உங்கள் செயல்பாடு வரும் சட்டமன்ற தேர்தலில் இன்னும் அதிக இடங்களை நமக்குப் பெற்றுத்தர வேண்டும்'' என்றார்.

தி.மு.க தொண்டர்கள்
தி.மு.க தொண்டர்கள்

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொகுதியான திண்டுக்கல் ஒன்றியத்தில் தி.மு.க அதிக இடங்களைப் பிடித்து ஒன்றிய சேர்மன் பதவியைக் கைப்பற்றியுள்ளது. இது அ.தி.மு.க-வினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.