Published:Updated:

``இந்த வாய்ப்பைத் தவறவிடக் கூடாது” - ஸ்டாலின் திட்டத்தால் பி.ஜே.பி அணி அதிர்ச்சி!

ஜனவரி 6-ம் தேதி தமிழக சட்டமன்றம் கூட உள்ளது. அப்போது குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று தி.மு.க கோரிக்கை வைக்க உள்ளது.

ஸ்டாலின்
ஸ்டாலின்

``மத்திய அரசுக்கு எதிரான இந்த எதிர்ப்பு அலையை நாம் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்று தி.மு.க தலைவர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். அதற்கான வேலைகளை அகில இந்திய அளவில் தொடங்கியிருக்கிறார் ஸ்டாலின் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

இரண்டாம் முறையாக மத்தியில் ஆட்சிப்பீடத்தில் அமர்ந்த ஆறு மாதங்களுக்குள் அதிரடியாகப் பல்வேறு சட்டத்திருத்தங்களை பி.ஜே.பி அரசு நிறைவேற்றி வருகிறது. இவற்றில் சிலவற்றுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தாலும் நாடாளுமன்றத்தில் இருக்கும் அசுர பலத்தால் அனைத்தையும் மத்திய அரசு தயக்கமின்றி அமல்படுத்தியும் வருகிறது. ஒரு கட்டத்தில் எந்தச் சட்டத்தையும் எங்கள் அரசு கொண்டுவந்து நிறைவேற்ற முடியும் என்று வெளிப்படையாகச் சொல்ல ஆரம்பித்தார்கள் பி.ஜே.பி தலைவர்கள். அதற்கு பிரதான காரணமாக இருந்தவை, யானை பலத்துடன் நாடாளுமன்றத்தில் இருந்த பி.ஜே.பி உறுப்பினர்கள் எண்ணிக்கை மற்றும் நாடு முழுவதும் சிதறிக்கிடந்த எதிர்க்கட்சிகள். இந்த இரண்டு அம்சங்களுமே பி.ஜே.பி-க்கு பக்கபலமாக இருந்தன.

இவற்றைப் பயன்படுத்தி, நாடு முழுவதும் ஒரு வலுவான கட்சியாகவும், இந்துத்துவாவின் முகமாகவும் வடமாநிலங்களில் அசைக்க முடியாத ஒரு சக்தியாகவும் பி.ஜே.பி பரிணமித்திருந்தது. இந்தக் காரணங்களால் அடுத்தடுத்து சட்டத்திருத்தங்களை நிறைவேற்றி வந்த பி.ஜே.பி, அதே பாணியில் குடியுரிமை திருத்த மசோதாவையும் நாடாளுமன்றத்தில் கொண்டுவந்தது. வழக்கம்போலவே நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கிடையே சட்டத்தை நிறைவேற்றுவதில் குறியாக இருந்தது

ஆனால், நாடு முழுவதும் இந்தச் சட்டத்துக்கு எதிராகப் போராட்டம் வெடிக்கும் என்பதை பி.ஜே.பி அரசு எதிர்பார்க்கவில்லை. குறிப்பாக, மாணவர்கள் இந்தச் சட்டத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்தியது பி.ஜே.பி. எதிர்பாராத விஷயமாக இருந்தது. இந்தப் போராட்டத்தை அனைத்து எதிர்க்கட்சிகளும் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள ஆரம்பித்தன. நாடு முழுவதும் போராட்டம் உக்கிரமாக நடந்தது. தமிழகத்தின் எதிர்க்கட்சியான தி.மு.க-வும் அதன் கூட்டணிக் கட்சிகளும் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்தார்கள். தமிழகத்தில் பிரமாண்ட பேரணி ஒன்றையும் தி.மு.க நடத்தி முடித்தது. ஆனால், அதற்குப் பின் பெரிய போராட்டங்கள் எதுவும் நடக்கவில்லை. கடந்த சில நாள்களாக இந்தப் போராட்டத்தின் தாக்கம் குறையத் தொடங்கியுள்ளது. ஆனால், தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதுகுறித்த எதிர்ப்பை ஏதாவது ஒரு விதத்தில் தொடர்ந்து பதிவு செய்துவருகின்றன.

இந்நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் தொடர்ந்து தேசிய மக்கள் தொகை பதிவேடுக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்தது. இதுவே தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு ஆரம்பகட்டம் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துவந்தன. அதன் தொடர்ச்சியாகத் தமிழகத்தில் சி.ஏ.ஏ சட்டத்துக்கு எதிராகக் கோலம் போட்ட பெண்களைக் கைது செய்து எச்சரித்து விடுதலை செய்தது காவல்துறை. அந்தப் பெண்கள் அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலினைச் சந்தித்தார்கள்.

அமித் ஷா, மோடி
அமித் ஷா, மோடி

குடியரிமை மசோதாவுக்கு எதிராகப் போராடுபவர்கள் மீது தொடர்ந்து தமிழக அரசு வழக்குகளைப் பாய்ச்சுவது குறித்து ஸ்டாலினும் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்தார். இந்நிலையில், புத்தாண்டு தொடங்கியதுமே மத்திய அரசுக்கு எதிரான தி.மு.க-வின் போராட்டம் வீரியத்துடன் இருக்கப் போகிறது என்று சொல்கிறார்கள் ஸ்டாலினுக்கு நெருக்கமானவர்கள்.

தி.மு.க தலைவர் ஸ்டாலின், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கான எதிர்ப்பை இன்னும் வலுவடையச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார். அகில இந்திய அளவில் பல்வேறு கட்சிகளும் இதே எண்ண ஓட்டத்தில் இருக்கிறார்கள். ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஹேமந்த் சோரன் பதவியேற்பு விழாவுக்கு ஸ்டாலின் உட்பட பல அகில இந்திய தலைவர்களும் பங்கேற்றனர். அப்போது இதுகுறித்து அவர்கள் மத்தியில் பேசப்பட்டுள்ளது. அகில இந்திய அளவில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தலாம் என்பது பற்றி அவர்கள் விவாதித்துள்ளனர். ராஞ்சியிலிருந்து தமிழகம் திரும்பிய ஸ்டாலின் இதுகுறித்து கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தியுள்ளார்.

கோலப்போராட்டம்
கோலப்போராட்டம்
எம்.விஜயகுமார்

குறிப்பாக, தமிழத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கும், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு திட்டத்திற்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தொடர் ஆர்ப்பாட்டங்களை நடத்த தி.மு.க கூட்டணி தரப்பில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசுக்கு எதிரான இந்தக் களத்தை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று ஸ்டாலின் நினைப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தகவல் தெரிவிக்கின்றனர். உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, கூட்டணிக்கட்சிகளுடன் இதுபற்றி ஆலோசனை நடத்தவும் தி.மு.க திட்டமிட்டுள்ளது.

அகில இந்திய அளவில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து போராட்டம் நடத்துவதுபோல தமிழகத்திலும் அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஓரணியில் திரட்டி மத்திய அரசுக்கு எதிராகவும், மாநில அரசுக்கு எதிராகவும் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தை நடத்திக்கொண்டிருக்க வேண்டும் என்று ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். முக்கிய நிர்வாகிகள் இதுகுறித்து சில தகவல்களையும் சொல்கிறார்கள்.

``ஜனவரி 6-ம் தேதி தமிழக சட்டமன்றம் கூட உள்ளது. அப்போது குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று தி.மு.க கோரிக்கை வைக்க உள்ளது. அதேபோல் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு தமிழகம் ஆதரவில்லை என்று சொல்ல வேண்டும் என்று வலியுறுத்த இருக்கிறார்கள். இதற்கு அ.தி.மு.க அரசு கண்டிப்பாக ஒத்துப்போகாது. அப்போது மீண்டும் பொதுவெளியில் இதைக் கண்டித்து தி.மு.க ஆர்ப்பாட்டம், போராட்டம் என்று களத்தில் குதிக்கத் திட்டமிட்டுள்ளது” என்கிறார்கள்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க பேரணி
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க பேரணி
`Holy Land' சாவர்க்கர்..! ராகுல் காந்தியுடன் பி.ஜே.பி-யை முட்டி மோத வைக்கும் சாவர்க்கர் யார்?

இந்தத் திட்டத்தின் மூலம் தமிழகத்தில் பிஜே.பி, அ.தி.மு.க தரப்புக்கு எதிரான அலையை வலிமையாக உருவாக்க முடியும் என்று ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக விரைவில் டெல்லி அல்லது வேறு ஒரு முக்கிய நகரம் ஒன்றில் அகில இந்திய அளவிளான தலைவர்கள் பங்குபெறும் மாபெரும் போராட்டம் நடத்த உள்ளார்கள்.இதற்குப் பிறகு, தமிழகத்திலும் தொடர் போராட்ட அறிவிப்புகளை வெளியிட இருக்கிறார் ஸ்டாலின். தேர்தல் வேலைகளை புத்தாண்டிலேயே புத்துணர்ச்சியுடன் ஆரம்பிக்கப்போகிறார் எங்கள் தலைவர் என்று மகிழ்ச்சியுடன் சொல்கிறார்கள் தி.மு.க-வினர். அதேவேளையில், இப்படி பல்வேறு மாநிலக் கட்சிகள் ஓரணியில் திரள்வது தமிழகத்தில் மட்டுமல்லாது, தேசிய அளவிலும் பி.ஜே.பி அணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்டாலின் தரப்புக்கு எந்தவகையில் நெருக்கடி கொடுக்கலாம் என பி.ஜே.பி தலைமை ஆலோசித்து வருவதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.