Published:Updated:

CAA-க்கு எதிர்ப்பு, கோயில்களுக்குக் குரல்... தி.மு.க ஆரம்பித்த தேர்தல் உத்தி!

M.K. Stalin
M.K. Stalin ( Photo: Vikatan / Vijay.T )

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல் கோயில்களுக்குக் குரல் கொடுப்பதன் மூலம் இந்து மக்களையும் கவரமுடியும். மற்றொருபுறம் தமிழகக் கோயில்களை மத்திய அரசு அபகரிக்கப் பார்க்கிறது என்று பி.ஜே.பி-க்கும் செக் வைக்க முடியும் என்று தி.மு.க முடிவு செய்துள்ளது.

``தமிழர்களின் நாகரிகத்தை - கலாசாரத்தைச் சிதைக்க மத்திய பா.ஜ.க அரசு முயற்சி செய்தால் தி.மு.க சார்பில் தமிழ் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும்” என்று அதிரடியாக அறித்துள்ளார் தி.மு.க தலைவர் ஸ்டாலின்.

நாடு முழுக்கப் பல்வேறு புராதானச் சின்னங்களை தொல்லியல் துறைக் கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நாடுமுழுவதும் அமலுக்கு வர உள்ள இந்தத் திட்டத்தைக் கொண்டுவந்தால் தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் இயங்கும் கோயில்கள் பல மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டிற்குள் செல்லும் நிலை இருக்கிறது. மத்தியக் கலாசாரத்துறை அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல் இதற்கான அறிவிப்பை வெளியிட்டதும், தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழகத்தில் ஏற்கெனவே இந்துசமய அறநிலையத்துறை என்கிற தனித்துறை கோயில்களின் நிர்வாகத்தை மேற்கொண்டுவருகிறது. மேலும், அனைத்துக் கோயில்களுக்கும் அறங்காவலர் குழுவும் செயல்பட்டுவருகிறது. மத்திய அரசின் அறிவிப்பினால் தமிழகக் கோயில்களின் நிர்வாகம் மத்திய அரசின் கைகளுக்குள் சென்றுவிடும் நிலை இருக்கிறது.

தஞ்சைப் பெரிய கோயில்
தஞ்சைப் பெரிய கோயில்

மத்திய அரசின் இந்த அறிவிப்புக்குத் தமிழகத்தில் பலத்த எதிர்ப்பும் இருக்கிறது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் யாரும் எதிர்பார்க்காத விதமாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் ``தமிழகத்தில் உள்ள திருக்கோயில்கள் எல்லாம் ஏற்கெனவே தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ளது. பண்டைய வரலாற்றுத் தொன்மை வாய்ந்த சின்னங்களைக் கண்டறிந்து - பாதுகாத்து, பராமரிப்பதற்கென தமிழகத்தில் `தொல்லியல் துறை' ஒன்று செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் மத்தியத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நினைவுச் சின்னங்களே பாழடைந்து - பராமரிப்பு இல்லாமல் கிடக்கின்ற நிலையில், மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளவற்றையும் கைப்பற்றுவோம் என்பது அநீதியானது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலை எடுக்க முயன்று - அதற்கு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும் தமிழக மக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததன் விளைவாக - அத்திட்டத்தை மத்திய பா.ஜ.க அரசு கைவிட்டது. ஏன், திருப்பதி வெங்கடாசலபதி கோயிலைக் கூட கைப்பற்ற முயன்று - அம்மாநில மக்களின் எதிர்ப்பால் கைவிட்டது. இதுபோன்ற சூழலில், பா.ஜ.கவின் கலாசாரத் திணிப்பைத் தமிழ்நாட்டில் எப்படியாவது அரங்கேற்றிட வேண்டும் - தமிழைப் புறக்கணித்து - இந்திக்கும் சம்ஸ்கிருதத்திற்கும் திருக்கோயில்களிலும் நினைவுச் சின்னங்களிலும் ``தாலாட்டு” பாட வைக்க வேண்டும் எனத் தீர்மானித்து - இந்த ஆபத்து மிகுந்த விளையாட்டில் மத்திய பா.ஜ.க அரசு ஈடுபட விரும்புகிறது.

பிரகலாத் சிங் பட்டேல்
பிரகலாத் சிங் பட்டேல்

திருக்கோயில்கள் நிர்வாகத்தினைத் தமிழக அரசிடமிருந்து கைப்பற்ற நினைக்கும் பா.ஜ.க மத்திய அமைச்சரின் இந்த செயலுக்கு, எதிர்ப்பு காட்டாமல் இதுவரை அ.தி.மு.க அரசும் - தமிழகக் கலை மற்றும் பண்பாடு, அருங்காட்சியகங்கள், தொல்லியல் துறை அமைச்சர் திரு.பாண்டியராஜனும் மௌனமாக இருப்பது கடும் கண்டனத்திற்குரியது” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் ,``தமிழகத்தில் 100 வருடங்களுக்கு மேல் தொன்மை வாய்ந்த 7,000 கோயில்கள் இருக்கின்றன” என்று மத்திய அமைச்சர் திரு.பிரகலாத் சிங் பட்டேல் சுட்டிக்காட்டியிருப்பது - தமிழ்நாட்டின் தனித்துவம் மிக்க சங்ககால, பல்லவர், பாண்டியர், சோழர், சேரர், நாயக்கர் காலக் கட்டடக் கலை அம்சங்கள் நிறைந்த திருக்கோயில்களை எல்லாம் தமிழக அரசிடமிருந்து பறித்துக்கொண்டு - தமிழகத்திற்கே உரிய கலாசாரத்தை, பண்பாட்டைச் சிதைக்கத் துணியும் மன்னிக்க முடியாத துரோகம்.

மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களையும் நினைவுச் சின்னங்களையும் கைப்பற்ற நினைக்கும் கபட எண்ணத்தை மனதிலிருந்து மத்தியக் கலைப் பண்பாட்டுத்துறை அமைச்சர் முளையிலேயே கிள்ளியெறிந்து விட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மத்திய அமைச்சரின் இந்த அறிவிப்பிற்கு முதலமைச்சர் எடப்பாடி திரு.பழனிசாமி கடும் கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். தமிழக மக்களின் உணர்வை மீறி - மாநில உரிமையை நசுக்கும் விதமாக, திருக்கோயில்களையும் நினைவுச் சின்னங்களையும் எடுத்துக்கொண்டு தமிழர்களின் நாகரிகத்தை - கலாசாரத்தைச் சிதைக்க மத்திய பா.ஜ.க அரசு முயற்சி செய்யுமேயானால் - அதை எதிர்த்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தமிழ் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

ஏற்கெனவே மத்திய அரசு கொண்டுவந்த சி.ஏ.ஏ சட்டத்திற்கு எதிராகக் கடும் போராட்டத்தை முன்வைத்தது தி.மு.க. குறிப்பாக இஸ்லாமியர்கள் நடத்திய போராட்டத்திற்குத் தங்கள் கட்சியின் சார்பில் ஆதரவும் கொடுத்தது. இதனால் சிறுபான்மையினரின் வாக்குகளை முழுமையாக தி.மு.க பக்கம் செல்லும் நிலை இருந்துவந்தது. இந்நிலையில் இந்து மக்களுக்கு எதிராகத் தொடர்ந்து தி.மு.க செயல்பட்டுவருவதாக பி.ஜே.பி சார்ந்த அமைப்புகள் குற்றம்சாட்டிவந்தன. அதை உடைக்க தி.மு.க தரப்பும் வியூகம் அமைத்துவந்தது.

சமீபத்தில் தி.மு.க வின் தேர்தல் ஆலோசகராக பொறுப்பேற்ற பிரஷாந்த் கிஷோர் சிறுபான்மையினர் வாக்குகளை குறிவைக்கும் அதே நேரம், பெரும்பான்மை சமூகமாக உள்ள இந்து மக்களின் வாக்குகளை நாம் கவனித்தில் கொள்ளவேண்டும் என்று தி.மு.க தலைமைக்கு அறிவுறுத்தியிருந்தார். மேலும், தமிழகத்தில் சிறு தெய்வ வழிபாட்டையும் குல தெய்வ வழிபாட்டையும் தி.மு.க ஆதரித்தாலே பெரும்பான்மை சமூகத்தின் வாக்குகளையும் நாம் கவர முடியும் என்று கணக்குப் போட்டுக் கொடுத்தார். இந்த ஐடியாவை விரைவில் தி.மு.க தலைமையும் கையில் எடுக்க உள்ளது.

கோயில்
கோயில்

இந்நிலையில் மத்தியத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் தமிழகக் கோயில்களைக் கொண்டுவந்தால் மதுரை, திருவரங்கம், தஞ்சாவூர் உள்ளிட்ட பல கோயில்கள் மத்திய அரசின் கட்டுபாட்டிற்குள் வந்துவிடும். மேலும், மதுரை கோயிலுக்கும் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன் குடும்பத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஸ்டாலினைச் சந்தித்த தியாகராஜன் ``மத்திய அரசின் அறிவிப்பு என்பது நமது பாராம்பர்யக் கோயில்களின் மீதான நமது உரிமைக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடும். கண்டிப்பாக இதற்கு நமது எதிர்ப்பைப் பதிவு செய்தால், அது நமக்குப் பலனாக இருக்கும்”என்று சொல்லியிருக்கிறார்.

இதற்குப் பிறகுதான் கோயில்களுக்குக் குரல் கொடுக்கும் முடிவை தி.மு.க தலைவர் ஸ்டாலின் எடுத்துள்ளார். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல் கோயில்களுக்குக் குரல் கொடுப்பதன் மூலம் இந்து மக்களையும் கவரமுடியும். மற்றொருபுறம் தமிழகக் கோயில்களை மத்திய அரசு அபகரிக்கப் பார்க்கிறது என்று பி.ஜே.பி-க்கும் செக் வைக்க முடியும் என்று முடிவு செய்தனர். உடனடியாக இதுகுறித்த அறிக்கையைத் தயார் செய்யச் சொல்லியிருக்கிறார்.

ராஜ்ய சபா சீட்: தே.மு.தி.க-வின் தப்புக்கணக்கும் தி.மு.க-வின் தேர்தல் கணக்கும்!

மத்திய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம், மாநில அரசுக்குக் கண்டனம் என்று அந்த அறிக்கையும் தயாரானது. இந்த ஐடியாவை பிரஷாந்த் கிஷோர் டீமிடம் சொல்ல அவர்களும் சில வார்த்தைகளை அதில் இணைக்கச் சொல்லி அறிக்கையைத் தயார் செய்ய வைத்துள்ளனர். அதன்படி விரிவான அறிக்கையைத் தயார் செய்து வெளியிட்டுள்ளார். ஏற்கெனவே இஸ்லாமியர்களை வைத்து மத்திய அரசுக்கு எதிராக தண்ணி காட்டிவரும் தி.மு.க இப்போது கோயில் விவகாரத்தை வைத்தே பி.ஜே.பி-க்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு