Published:Updated:

`சீப்பை மறைத்து வைத்து விட்டால் கல்யாணம் நிற்காது!’ -அதிகாலை கைது குறித்து ஆர்.எஸ். பாரதி

ஆர்.எஸ் பாரதி
ஆர்.எஸ் பாரதி

கைது செய்யப்பட்ட ஆர்.எஸ்.பாரதியை பார்க்க அனுமதிக்க கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தி.மு.க எம்.எல்.ஏ-க்கள், வழக்கறிஞர்கள் ஆகியோர் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஆதித்தமிழர் மக்கள் கட்சித் தலைவர் கல்யாண்குமார் என்பவர் அளித்த புகாரின் பேரில் தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று அதிகாலை சென்னையில் கைது செய்யப்பட்டார். நீதிபதிகள், பட்டியலின மக்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக வந்த புகார்களின் அடிப்படையில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அவர் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆர்.எஸ் பாரதி
ஆர்.எஸ் பாரதி

கடந்த பிப்ரவரி மாதம் அன்பகத்தில் ஆர்.எஸ் பாரதி பேசியது சர்ச்சையானது. அது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாக பெரும் விவாதமே வெடித்தது. இதனால் தி.மு.க-வுக்கும் கடும் நெருக்கடி ஏற்பட்டது. இந்த நிலையில்தான், தனது பேச்சுக்காக அவர் வருத்தம் தெரிவித்தார்.

கைது குறித்து பேசிய ஆர்.எஸ் பாரதி, ``கொரோனா தடுப்பு பொருள்கள் வாங்கியதில் முறைகேடு எனக் கூறியதால் என்னை கைது செய்கிறார்கள். கோவையில் கொரோனா தடுப்பு பொருள்கள் வாங்கியதில் சுமார் 200 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருக்கிறது. ஓ.பி.எஸ் செய்த ஊழலைப் பற்றி நான் புகார் அளித்தேன். சீப்பை மறைத்து வைத்து விட்டால் கல்யாணம் நிற்காது. கொரோனா விவகாரத்தில் தொடர்ந்து ஊழல் பற்றி புகாரளிக்கப்படும்.

கைது
கைது

யாரையோ திருப்திப்படுத்த என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி சென்னையில் நான் பேசியது சமூக ஊடகங்களில் திரிக்கப்பட்டு வெளியானது கொரோனா சூழலில் தனிமைப்படுத்திக் கொண்டிருந்த நிலையில் என் மீது கைது நடவடிக்கை பாய்ந்திருக்கிறது’’ எனக் கூறினார்.

`என்னையும் சேர்த்துதான் `திராவிட இயக்கம் போட்ட பிச்சை' என்றேன்!'- ஆர்.எஸ்.பாரதி விளக்கம் #Video
`சீப்பை மறைத்து வைத்து விட்டால் கல்யாணம் நிற்காது!’ -அதிகாலை கைது குறித்து ஆர்.எஸ். பாரதி

கைது செய்யப்பட்ட ஆர்.எஸ்.பாரதியிடம் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணையை நிறைவு செய்துள்ளனர். விசாரணைக்கு பின் எழும்பூர் நீதிமன்ற நீதிபதி முன் ஆர்.எஸ்.பாரதி ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். இதனிடையே, கைது செய்யப்பட்ட ஆர்.எஸ்.பாரதியைப் பார்க்க அனுமதிக்கக் கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தி.மு.க எம்.எல்.ஏ-க்கள், வழக்கறிஞர்கள் ஆகியோர் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, ஆர்.எஸ்.பாரதியை ஜாமீனில் விடுவிக்க தி.மு.க வழக்கறிஞர் அணி நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு