Published:Updated:

`ஒரே கல்லில் 3 மாங்காய் அடிக்கலாம்!' - வேலூர் தேர்தல் முடிவுகளுக்காகக் காத்திருக்கும் தி.மு.க!

பிரசாரத்தில் ஸ்டாலின், கதிர் ஆனந்த்
பிரசாரத்தில் ஸ்டாலின், கதிர் ஆனந்த்

வேலூர் தேர்தல் பிரசாரத்தில் பா.ஜ.க-வுக்கு அ.தி.மு.க தரப்பிலிருந்து எப்படி அழைப்பு அனுப்பப்படவில்லையோ, அதேபோல்தான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியையும் தி.மு.க தரப்பில் இருந்து அழைக்கவில்லை.

`இரட்டை இலையா, சூரியனா..?' என்ற அனல் வேலூர் தொகுதி முழுக்க வீசிக்கொண்டிருக்கிறது. `தேர்தல் முடிவுகளைப் பொறுத்து மத்திய அரசோடு இணக்கமாகச் செல்வது குறித்து தி.மு.க தலைமை முடிவெடுக்கும்' என்கின்றனர் உடன்பிறப்புகள் வட்டாரத்தில்.

வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு வருகிற 5-ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான இறுதிக்கட்ட பிரசாரம், இன்று மாலையுடன் ஓய்வுபெற இருக்கிறது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் உட்பட அமைச்சர்கள் பலரும் வேலூர் தொகுதியில் பிரசாரம் செய்தனர்.

`ஏ.சி.சண்முகம் வெற்றி பெற்றால் மட்டுமே நமக்கு எதிர்காலம்' என அ.தி.மு.க அமைச்சர்கள் மேடைகளில் பேசி வருகின்றனர். அதற்கேற்ப, திண்ணைப் பிரசாரம் உட்பட பல்வேறு வியூகங்களையும் வகுத்தனர். தி.மு.க தரப்பிலும் வேட்பாளர் கதிர் ஆனந்தின் வெற்றிக்காக மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் உட்பட மாநிலம் முழுவதும் இருந்து மாவட்டச் செயலாளர்களையும் எம்.எல்.ஏ-க்களையும் களத்தில் இறக்கிவிட்டனர். இந்தநிலையில், `தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தி.மு.க-வின் எண்ண ஓட்டத்தில் மாற்றம் ஏற்படலாம்' என்கின்றனர் தி.மு.க வட்டாரத்தில்.

பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி, ஏ.சி.சண்முகம்
பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி, ஏ.சி.சண்முகம்

`` வேலூர் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மத்திய அரசோடு இணக்கமாகச் செல்வதற்கான வேலைகள் நடந்து வருகின்றன. பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷாவோடு தி.மு.க-வின் முக்கியப் பிரமுகர் ஒருவர் நல்ல நெருக்கத்தில் இருக்கிறார். தேர்தலுக்கு முந்தைய டெல்லி சந்திப்புகளில் தி.மு.க சார்பாக அந்த நபர் முன்னிறுத்தப்பட்டார். வேலூர் தேர்தலில் வெற்றி பெற்றால் மத்திய அரசோடு இணக்கமாகச் செல்வது, தோற்றுவிட்டால் பா.ஜ.க-வின் நட்பு குறித்து பரிசீலனை செய்வது என இரண்டு வகையான திட்டங்களில் இருக்கிறது தி.மு.க தலைமை. இதன் பின்னணியில் சில முக்கியமான காய் நகர்த்தல்களும் இருக்கின்றன" என விவரித்த தி.மு.க முன்னணி நிர்வாகிகள் சிலர்,

`அ.தி.மு.க நேரடிக் கூட்டு; தி.மு.க மறைமுகக் கூட்டு!' - பா.ஜ.க உறவைச் சுட்டிக்காட்டும் சீமான்

``தேர்தலுக்கு முந்தைய நாள்களில் தி.மு.க-வுடன் நட்பில் இருந்த முக்கிய தொழிலதிபர்களின் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடந்தது. இந்தச் சோதனையில் கைப்பற்றப்பட்ட டைரிகளைத்தான் முக்கிய ஆதாரமாகக் கருதுகிறது பா.ஜ.க. அந்த டைரிகளில் உள்ள குறிப்புகளை வைத்து தி.மு.க-வை மிக எளிதாக வளைத்துவிடலாம். `இதனால் கழகத்துக்குத் தேவையற்ற சோதனைகள் வரும்' என நினைக்கின்றனர். தவிர, அ.தி.மு.க அரசுக்கு மத்திய அரசு ஆதரவு அளித்து வருவதால்தான் இரண்டு ஆண்டுகாலமாக முதல்வராக நீடித்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி. பா.ஜ.க-வோடு தி.மு.க நெருங்கிவிட்டால் எடப்பாடிக்கான கெட்ட நேரம் தொடங்கிவிடும். அ.தி.மு.க அரசுக்குக் கூடுதல் நெருக்கடிகளைக் கொடுக்க முடியும் எனவும் கணக்குப் போடுகின்றனர். மேலும், 2021 சட்டமன்றத் தேர்தலில் ஸ்டாலினைத் தவிர, வலுவான தலைவராகக் களத்தில் வேறு யாரும் இல்லை. அந்தநேரத்தில், `புதிய தலைவராக வேறு யாரையும் பா.ஜ.க கொண்டு வந்துவிடக் கூடாது' எனவும் அச்சப்படுகின்றனர்.

பிரசாரத்தில் ஸ்டாலின்
பிரசாரத்தில் ஸ்டாலின்

தற்போது நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் 37 எம்.பி இடங்களை வென்றும், ` இவர்களால் எந்தப் பலனும் தமிழகத்துக்கு வந்து சேரப்போவதில்லை' என அ.தி.மு.க-வும் பா.ம.க-வும் விமர்சனம் செய்து வருகின்றன. அதுவே இணக்கமாகச் செல்வதன் மூலம், `தொகுதியின் வளர்ச்சிக்காகத் திட்டங்களைக் கொண்டு வந்து சேர்க்க முடியும், அரசின் திட்டங்களில் உள்ள குளறுபடிகளையும் சுட்டிக் காட்ட முடியும்' எனவும் கணக்கு போடுகின்றனர். இதைப் பா.ஜ.க-வும் உணர்ந்திருப்பதால்தான், வேலூர் பிரசாரத்தில் தலையைக் காட்டவில்லை" என்கின்றனர் இயல்பாக.

வேலூர் தேர்தல் களத்தில் இருக்கும் தி.மு.க பிரமுகர் ஒருவரிடம் பேசினோம். ``தொகுதி மக்களின் கோரிக்கைகளுக்காக உரிமையோடு போராடுவோம் என்பதைப்போல அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கிறது தலைமை. இதை ஜனரஞ்சகமான உறவாகத்தான் பார்க்க வேண்டும். ஆர்.கே.நகர் தேர்தலைப் போலத்தான் வேலூர் தேர்தலைப் பார்க்கிறோம். வேலூரில் முடிவுகள் எப்படி அமையும் என்பதிலும் உடன்பிறப்புகள் மத்தியில் உதறல் இருக்கிறது. `தி.மு.க முகத்துக்காக ஓட்டு விழுமா... துரைமுருகன் குடும்பத்தைப் பார்த்து வாக்களிப்பார்களா?' என்ற குழப்பமும் இருக்கிறது. பா.ஜ.க தலைவர்கள் பிரசாரக் களத்துக்கு வராமல் இருப்பதன் காரணம், அ.தி.மு.க வேட்பாளர் தரப்பில் இருந்து அழைக்காததுதான். அங்கு சிறுபான்மையின மக்கள் நிறைந்திருப்பதால் பா.ஜ.க பிரசாரத்தால் அது மைனஸ் ஆகிவிடக் கூடாது எனக் கருதுகின்றனர். இதனால் உள்ளூர் பா.ஜ.க-வினர் கடும் கோபத்தில் இருக்கின்றனர்.

ஸ்டாலின், கதிர் ஆனந்த்
ஸ்டாலின், கதிர் ஆனந்த்

அவர்களிடம் பேசும்போது, `கடந்தமுறை தாமரைச் சின்னத்தில் நின்று 3 லட்சம் வாக்குகளை வாங்கினார் ஏ.சி.எஸ். அப்படியானால், அந்த வாக்குகள் அனைத்தும் தாமரைக்கு விழுந்ததா... ஏ.சி.எஸ்ஸுக்கு விழுந்ததா என்ற கேள்வி வந்தது. ஏ.சி.எஸ் முகத்துக்காக விழுந்தவை என்றனர். ஆனாலும், தாமரை சின்னத்தைப் பார்த்துத்தான் மக்கள் வாக்களித்தனர். தற்போது மத்தியில் பெரும்பான்மை பலத்தோடு ஆட்சியில் அமர்ந்திருக்கிறார் பிரதமர் மோடி. தேர்தலின்போது இருந்த மோடி எதிர்ப்பு அலை இப்போது இல்லை. ஆனால், தமிழகத்தில் மோடிக்கு எதிர்ப்பு இருப்பதுபோல அ.தி.மு.க கருதுகிறது. `நான் வெற்றி பெற்றால் மோடிக்கு அருகில் அமர்ந்துகொள்வேன். அவருக்கு நான் செல்லப் பிள்ளையாக இருக்கிறேன். நான் கேட்பதெல்லாம் அவர் கொடுப்பார்' எனப் பிரசாரத்தில் பேசுகிறார் ஏ.சி.எஸ். ஆனால், வாக்கு சேகரிக்கச் செல்லும்போது எங்களைப் புறக்கணிக்கிறார். இது தேவையற்ற விளைவுகளை ஏற்படுத்தும்' எனக் கோபப்படுகின்றனர்.

தவிர, வேலூர் தேர்தலில் ராகுலா, மோடியா என்ற விவாதம் நடக்கவில்லை. அங்கு நடப்பது மக்களவைத் தேர்தல் அல்ல, தமிழ்நாட்டுக்கான தேர்தலாகத்தான் பார்க்க முடிகிறது. ஸ்டாலினா, எடப்பாடியா என்ற முழக்கம்தான் பிரதானமாக இருக்கிறது. இதில் யார் வெற்றி பெறுகிறார்களோ, அவர்களுக்கே முழு பெருமையும் போய்ச் சேரும். இதற்கான பலன், தேசியக் கட்சிகளுக்குப் போய்ச் சேருவதற்கு வாய்ப்பில்லை. வேலூர் தேர்தல் பிரசாரத்தில் பா.ஜ.க-வுக்கு அ.தி.மு.க தரப்பிலிருந்து எப்படி அழைப்பு அனுப்பப்படவில்லையோ, அதேபோல்தான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியையும் தி.மு.க தரப்பிலிருந்து அழைக்கவில்லை. தொகுதி முழுக்க வன்னிய சமூக வாக்குகள் நிறைந்திருப்பதால், வி.சி.க பிரசாரத்தால் அது வராமல் போய்விடக் கூடாது என நினைக்கிறது துரைமுருகன் தரப்பு. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதைத் தலைமை முடிவு செய்யும்" என்கின்றனர் உறுதியாக.

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

`2021 சட்டமன்றத் தேர்தலை மையமாக வைத்து, பா.ஜ.க எதிர்ப்பு நிலைப்பாட்டை ஸ்டாலின் தொடர்வாரா அல்லது மத்திய அரசோடு இணக்கமாகச் செயல்படுவாரா...என்பதற்கான விடை, வேலூர் தேர்தல் முடிவுகளில் அடங்கியிருக்கிறது' என்ற விவாதம், தி.மு.க முகாமில் அதிகப்படியாகவே எதிரொலிக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு