கடந்த சில நாள்களுக்கு முன்பு, மேற்கு வங்கத்தில் ஹவுரா - நியூ ஜல்பைகுரியை இணைக்கும் `வந்தே பாரத்’ ரயில் சேவையை பிரதமர் மோடி காணொளிவாயிலாகக் கொடியசைத்துத் தொடங்கிவைத்தார். மோடியின் தாயார் இறந்த காரணத்தால், கடைசி நேரத்தில் காணொளிவாயிலாக இந்த நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டார். இதில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தாவும் கலந்துகொண்டார்.

இந்த நிலையில் மோடி தொடங்கிவைத்த இந்த வந்தே பாரத் ரயில் மீது கடந்த இரண்டு நாள்களில் மூன்று முறை கல்வீச்சு சம்பவம் நடந்திருக்கிறது. இதில் பயணிகளுக்குக் காயம் எதுவும் ஏற்படவில்லை.
அதேசமயம், இது தொடர்பாக போலீஸில் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. இன்னொரு பக்கம் இந்த விவகாரம் ஆளுங்கட்சியான திரிணாமுல் காங்கிரஸுக்கும், எதிர்க்கட்சியான பாஜக-வுக்கும் இடையே மோதலை ஏற்படுத்தியிருக்கிறது.

அதைத் தொடர்ந்து கங்காசாகரில் நிகழ்ச்சியொன்றில் கலந்துகொள்ளச் சென்ற முதல்வர் மம்தாவிடம் வந்தே பாரத் ரயில் மீதான கல்வீச்சு தொடர்பாகக் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு மம்தா, ``அதைப் பற்றி என்னிடம் கேட்காதீர்கள். நான் நல்ல மனநிலையில் இருக்கிறேன். கங்காசாகர் மேளாவுக்குப் நான் புறப்படுகிறேன். என்ன கேட்பதாக இருந்தாலும் கங்காசாகரில் கேளுங்கள்" என்றார்.