Published:Updated:

ஒழுக்கம் அரசியல்வாதிகளுக்குத் தேவையில்லையா... ஆபாசப்படம் பார்த்தவர்கள் அமைச்சர் ஆனது எப்படி?

கர்நாடகா சட்டசபையில், ஆபாசப் படம் பார்த்தவர்கள் எடியூரப்பா அமைச்சரவையில் மந்திரிகள் ஆக்கப்பட்டிருக்கிறார்கள்.

Ministers watching videos
Ministers watching videos

''ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் வலியுறுத்துவோர், சர்வாதிகாரியாகச் சித்திரிக்கப்படுகிறார்கள். நாடு தற்போதுள்ள நிலையில், ஒழுக்கம் என்பதை ஜனநாயக விரோதமாகப் பார்க்கிறார்கள்'' - 2018 செப்டம்பரில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு எழுதிய புத்தகத்தை வெளியிட்டபோது மோடி பேசிய வார்த்தைகள் இவை.

Ministers taking oath
Ministers taking oath

அந்த ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் பி.ஜே.பி கடைப்பிடிக்கிறதா? கர்நாடகா சட்டசபையில் ஆபாச வீடியோ பார்த்தவர்கள், எடியூரப்பா அமைச்சரவையில் மந்திரிகள் ஆக்கப்பட்டிருக்கிறார்கள்.

''சட்டப்படி அமைக்கப்பட்ட இந்திய அரசியல் அமைப்பின்பால் உண்மையான நம்பிக்கையும் மாறாப்பற்று கொண்டிருப்பேன் என்றும், இந்திய நாட்டின் ஒப்பில்லாத முழு முதல் ஆட்சியையும் ஒருமையையும் நிலைநிறுத்துவேன் என்றும், உண்மையாகவும் உளச்சான்றின்படியும் என் கடமைகளை நிறைவேற்றுவேன். பலதரப்பட்ட மக்கள் அனைவருக்கும் நேர்மையானதைச் செய்வேன் என்றும், ஆண்டவன்மீது ஆணையிட்டு உறுதி மொழிகிறேன்'' - ஒவ்வொரு அமைச்சரும் பதவியேற்கும்போது சொல்லும் பதவிப்பிரமாண வாசகம் இது.

Yediyurappa
Yediyurappa

கர்நாடகா சட்டசபை நடந்துகொண்டிருந்தபோது, ஆண்ட்ராய்டு போனில் ஆபாசப்படம் பார்த்த பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் இரண்டு பேர், 'உண்மையாகவும் உளச்சான்றின் படியும், என் கடமைகளை நிறைவேற்றுவேன்' எனச் சொல்லி பதவியேற்றிருப்பதுதான் கர்நாடகா அரசியலின் ஹாட் டாபிக்.

கர்நாடகத்தில், குமாரசாமி தலைமையில் காங்கிரஸ் - ஜனதா தளம் (எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடந்துகொண்டிருந்தது. அந்த கட்சிகளைச் சேர்ந்த 15 எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்ய... குமாரசாமி அரசு கவிழ்ந்தது. அதைத் தொடர்ந்து, கடந்த மாதம் 26-ம் தேதி, எடியூரப்பா முதல்வர் ஆனார். ஆனால், முழு அமைச்சரவையும் அப்போது பதவியேற்கவில்லை.

கர்நாடகாவில் ஏற்பட்ட வெள்ளம், காஷ்மீர் விவகாரம் போன்றவற்றால் அமைச்சரவை விரிவாக்கம் தள்ளிப்போய்க் கொண்டிருந்தது. எடியூரப்பா பதவி ஏற்று 25 நாள்களுக்குப் பிறகு, ஒருவழியாக 17 அமைச்சர்கள் புதிதாகப் பதவியேற்றிருக்கிறார்கள். ஜெகதீஷ் ஷெட்டர், கே.எஸ்.ஈஸ்வரப்பா, ஆர்.அசோகா உள்ளிட்ட 17 பேருக்கு கவர்னர் வஜூபாய் வாலா பதவிப்பிரமாணம் செய்துவைத்திருக்கிறார். இந்த 17 பேரில், லக்ஷ்மன் சவதி, சி.சி. பாட்டீல் முக்கியமானவர்கள். ஏழாண்டுகளுக்கு முன்பு, கர்நாடகா சட்டசபை நடந்து கொண்டிருந்தபோது, இவர்கள் இருவரும் ஆண்ட்ராய்டு போனில் ஆபாசப்படம் பார்த்த விவகாரத்தில் புகழ்பெற்றவர்கள். அப்போது என்ன நடந்தது?

Ministers watching videos
Ministers watching videos

2012 பிப்ரவரி 7-ம் தேதி, கர்நாடகா சட்டசபைக் கூட்டம் விதான் சௌதாவில் நடைபெற்றுக்கொண்டிருந்தது. சட்டசபை நடவடிக்கைகளை தூர்தர்ஷன் மற்றும் தனியார் தொலைக்காட்சி சேனல்கள் ஒளிப்பதிவு செய்துகொண்டிருந்தன. முன்வரிசையில் அமர்ந்திருந்த அமைச்சர் ஒருவர், பின்னால் திரும்பி டிவி கேமிராமேன்களைப் பார்த்துக்கொண்டிருந்தார். ''ஏன் நம்மள பார்க்கிறார்'' என ஒரு கேமராமேனுக்கு சந்தேகம் வர, தன் கேமராவில், அந்த அமைச்சரை ஜூம் செய்கிறார்.

அந்த அமைச்சர், கூட்டுறவுத்துறை மந்திரி லக்ஷ்மன் சவதி. அவர் தன் செல்போனில் ஆபாச வீடியோ ஒன்றை பார்த்துக் கொண்டிருந்தார். அந்த ஆபாசக்காட்சியையும் அமைச்சரையும் ‘க்ளோஸப்’ ஆக ஜூம் செய்கிறது கேமரா. அமைச்சர் லக்ஷ்மன் சவதியின் செல்போனில் ஆபாசக்காட்சிகள் ஓடுகின்றன.

இந்த செல்போன் காட்சிகளை லக்ஷ்மன் சவதிக்கு அருகில் சி.சி.பாட்டிலும் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தார். கொடுமை என்ன தெரியுமா... அவர்தான் அன்றைக்கு கர்நாடகா மாநிலத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர். இவர்கள் என்ன பார்க்கிறார்கள் என்று சுற்றுச்சூழல் மற்றும் துறைமுகத்துறை அமைச்சர் கிருஷ்ணா பாலிமரும் எட்டிப் பார்க்கிறார்.

லக்ஷ்மன் சவதியும் சி.சி.பாட்டிலும்
லக்ஷ்மன் சவதியும் சி.சி.பாட்டிலும்

சட்டசபையில் காரசாரமாக விவாதம் போய்க் கொண்டிருந்த போது, சுமார் 15 நிமிடங்கள் இந்த ஆபாச வீடியோவை அமைச்சர்கள் பார்த்துக்கொண்டிருந்தனர். அப்புறம் என்ன? சட்டசபையில் ஆபாச வீடியோ பார்க்கும் அமைச்சர்கள் எனச் செய்திகள் வெளியாகின. ஆபாச வீடியோவைப் பார்க்கும் காட்சிகள் ரிலீஸ் ஆகி, கர்நாடகா அரசியலைப் பரபரப்பாக்கின. ஆபாச வீடியோ வைரல் ஆகி, இந்தியா முழுவதும் பேசப்பட்டது.

உடனே லக்ஷ்மன் சவதி, ''அந்த செல்போன் இன்னொருவருடையது. அது ஆபாச வீடியோ இல்லை. வெளிநாட்டில் நடந்த விருந்து ஒன்றில் ஒரு பெண்ணை பலர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து கொலைசெய்து விடுகிறார்கள். அதேபோல கர்நாடகாவிலும் பார்ட்டிகள் நடக்கின்றன. இதனால், நமது கலாசாரம் பாதிக்கப்படுகிறது. அதுபற்றி கவலை அடைந்ததால், அந்த வீடியோவைப் பார்த்தேன்'' என விளக்கம் அளித்தார்.

Amit Shah
Amit Shah
Vikatan

அப்போது பி.ஜே.பி தலைவராக இருந்த நிதின் கட்காரியிடம் விவகாரம் போனது. அன்றைக்கு, கர்நாடகா பி.ஜே.பி முதல்வராக இருந்த சதானந்த கவுடாவும் கர்நாடகா பி.ஜே.பி தலைவர் ஈஸ்வரப்பாவும் நிதின் கட்காரியிடம் பேசினார்கள். உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட சில மாநில சட்டசபைத் தேர்தல்களை எதிர்கொள்ளவேண்டிய கட்டாயத்தில் பி.ஜே.பி இருந்தது. வேறு வழியில்லை. பி.ஜே.பி-யின் இமேஜை தூக்கி நிறுத்த வேண்டும் என்றால், அந்த மூன்று அமைச்சர்களையும் நீக்க வேண்டும். மூன்று பேரையும் பதவி விலகச் சொல்லியது தலைமை. சம்பவம் நடந்த அடுத்த நாள், லக்ஷ்மன் சவதி, சி.சி.பாட்டில், கிருஷ்ணா பாலிமர் ஆகியோர் அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்தனர்.

அந்த லக்ஷ்மன் சவதியும் சி.சி.பாட்டிலும் இன்றைக்கு எடியூரப்பா அமைச்சரவையில் அமைச்சர்கள் ஆகியிருக்கிறார்கள். கடந்த ஆண்டு கர்நாடக சட்டசபைத் தேர்தல் நடைபெற்றபோது, இவர்களுக்கு சீட் தரக்கூடாது என பி.ஜே.பி கட்சிக்குள்ளேயே புகைச்சல் ஏற்பட்டது. ஆனால், அதையெல்லாம் மீறி, லக்ஷ்மன் சவதியும் சி.சி.பாட்டிலும் பி.ஜே.பி வேட்பாளர்கள் ஆனார்கள். லக்ஷ்மன் சவதி, அதானி தொகுதியிலும் சி.சி.பாட்டில், நார்கண்ட் தொகுதியிலும் போட்டியிட்டார்கள். லக்ஷ்மன் சவதி தேர்தலில் தோற்றுப்போனார். ஆனாலும், அவரும் சி.சி.பாட்டிலும் மந்திரிகள் ஆகியிருக்கிறார்கள்.

Modi
Modi

அமைச்சரவையில் யார் யாரை சேர்க்க வேண்டும் என்பது பற்றி கடந்த வாரம் டெல்லிக்குச் சென்று, பி.ஜே.பி தேசியத் தலைவர் அமித்ஷாவிடம் ஆலோசனை நடத்தினார் எடியூரப்பா. அமித்ஷா ஒப்புதல் அளித்த 17 பேருக்கு அமைச்சர் பதவி இப்போது அளிக்கப்பட்டிருக்கிறது. லக்ஷ்மன் சவதியையும் சி.சி.பாட்டிலையும் ஓகே சொல்லியது டெல்லி தலைமை.

''ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்குமாறு கூறுபவர்களை சர்வாதிகாரி என்று அழைக்கும் அளவுக்கு ஒரு புதிய அகராதி எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறது'' என்கிறார் மோடி.