Election bannerElection banner
Published:Updated:

``ராஜீவ் காந்தி கொல்லப்பட்டபோது சில மீட்டர் தொலைவில்தான் நானும் இருந்தேன்!" - விவரிக்கும் டாக்டர் பகவதி

டாக்டர் பகவதி
டாக்டர் பகவதி

அந்தப் பழைய நினைவுகளை மீட்டெடுத்து பகவதி பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும் துயரத்தின் தழும்புகள். சிரமங்களுக்கு இடையே பேசியவருக்கு அருகிலிருந்து உதவினார் அவரின் மகள் விஜயதரணி.

பிரபல மருத்துவர், அரசியல்வாதி என்ற அடையாளங்களுடன் 1980-களில் பரபரப்பாக இயங்கியவர், டாக்டர் பகவதி. இவரின் மகள்தான் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி. 29 ஆண்டுகளுக்கு முன்பு இதே தினத்தில் (1991-ம் ஆண்டு மே 21-ம் தேதி), ஶ்ரீபெரும்புதூரில் நடந்த குண்டுவெடிப்பு நிகழ்வு, பகவதியின் செயல்பாடுகளை முழுவதுமாக முடக்கிப்போட்டுவிட்டது; அவரின் இருப்பையும் மறக்கச் செய்துவிட்டது.
டாக்டர் பகவதி
டாக்டர் பகவதி

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, தேர்தல் பிரசாரத்துக்காக அன்று (மே 21-ம் தேதி) ஸ்ரீபெரும்புதூர் வந்திருந்தார். அப்போது நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் ராஜீவ் காந்தி மரணமடைந்தார். அதனால், ஒட்டுமொத்த தேசமும் நிலைகுலைந்தது. அந்தக் கூட்டத்தில் இருந்த டாக்டர் பகவதிக்கு, குண்டுவெடிப்பின் தாக்கத்தால் செவித்திறன் பாதிக்கப்பட்டது. மேலும், தனது டாக்டர் தொழிலைக் கைவிடும் அளவுக்கு பல்வேறு உடல்நலப் பாதிப்புகளையும் சிரமங்களையும் எதிர்கொண்டார், பகவதி.

அந்தப் பழைய நினைவுகளை மீட்டெடுத்து பகவதி பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும் துயரத்தின் தழும்புகள். சிரமங்களுக்கு இடையே பேசியவருக்கு அருகிலிருந்து உதவினார் அவரின் மகள் விஜயதரணி.

ஸ்ரீபெரும்புதூர் கூட்டத்தில் ராஜீவ் காந்தி
ஸ்ரீபெரும்புதூர் கூட்டத்தில் ராஜீவ் காந்தி

``பூர்விகம் கன்னியாகுமரினாலும், சின்ன வயசிலேயே அம்மா சென்னையில செட்டில் ஆகிட்டாங்க. எம்.பி.பி.எஸ் படிக்கும்போதே அவங்களுக்கு கல்யாணமாகிடுச்சு. டி.ஜி.ஓ முடிச்சுட்டு மகப்பேறு மருத்துவரா ப்ராக்டீஸை ஆரம்பிச்சாங்க. அப்பா பத்மநாபன், பல் மருத்துவர். தமிழக முதல்வர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள்னு பலருக்கும் பர்சனல் டென்டிஸ்டா இருந்தார். காங்கிரஸ் பாரம்பர்ய குடும்பம் என்பதால இந்திரா காந்தி அம்மையாரின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு, என் அம்மாவுக்கும் அரசியல் ஆர்வம் உண்டாச்சு. அதை அப்பாவும் ஊக்குவித்தார். அப்பாவின் மறைவுக்குப் பிறகு, கட்சிப் பணிகளில் அதிக கவனம் செலுத்தினாங்க அம்மா.

குடும்பம், டாக்டர் பணி, அரசியல்னு ஓய்வில்லாம உழைச்சாங்க. மக்களுக்கான போராட்டங்கள்ல கலந்துகிட்டு, பல முறை சிறைவாசமும் போனாங்க. அப்போ, அம்மாவுக்கும் பிரதமர் இந்திரா காந்தி அம்மையாருக்கும் நல்ல நட்பு இருந்துச்சு. அவரை அடிக்கடி டெல்லியில் சந்திச்சுப் பேசுவாங்க. அப்போல்லாம், சட்டம் படிச்சுக்கிட்டிருந்த என்னையும் அம்மா டெல்லிக்குக் கூட்டிட்டுப்போவாங்க. இப்படி பரபரப்பா இயங்கிட்டிருந்த அம்மாவை, அந்த ஒரு சம்பவம் முடக்கிப்போட்டுடுச்சு" என்கிற விஜயதரணியை இடைமறித்து, குண்டுவெடிப்பு நிகழ்வு பற்றிப் பேச முற்படுகிறார் பகவதி.

மகள் விஜயதரணியுடன் பகவதி
மகள் விஜயதரணியுடன் பகவதி

``நீங்க எமோஷனல் ஆவீங்க, சிரமப்படுவீங்க. உங்களுக்குப் பதிலாக நானே பேசுறேன்" என்று விஜயதரணி சொல்கிறார். ``இதுக்கும் மேல என்ன சிரமம் வந்துடப்போகுது" என்று ஒரு வறண்ட புன்னகையுடன் ஆரம்பித்தார் பகவதி அம்மா.

``நான் மெட்ராஸ் யூனியன் மகிளா காங்கிரஸ் தலைவராகவும், காங்கிரஸ் பேரன்ட் பாடியிலும் முக்கியப் பொறுப்புகள்ல இருந்திருக்கேன். அப்போ, ஶ்ரீபெரும்புதூரில் ராஜீவ் ஜி கலந்துக்கிட்ட தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ளும் பெண்களுக்கான உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளைக் கவனிச்சுக்கிற பொறுப்பை நான் ஏத்துக்கிட்டேன். கூட்டத்துக்கு வந்த ராஜீவ் ஜியை வரவேற்றுவிட்டு, என் பணிகளைக் கவனிச்சுக்கிட்டிருந்தேன்.

கணவர், மாமியார், மகளுடன் பகவதி
கணவர், மாமியார், மகளுடன் பகவதி

கூட்டம் முடிஞ்சதும் அவர்கிட்ட பேசலாம்னு நினைச்சிருந்தேன். அவர் மேடையை நோக்கி நடந்துபோறார். எனக்கும் அவருக்கும் சில மீட்டர்கள்தான் இடைவெளி. நான் உணவுப் பொட்டலம், தண்ணீர் பாக்கெட்டுகளைக் கொடுத்துக்கிட்டிருந்தேன். திடீர்னு தீப் பிழம்புகளோடு பயங்கர வெடிச்சத்தம்" என்பவருக்கு தன்னையும் அறியாமல் கண்ணீர் கசிகிறது.

பகவதியின் கை, கால்களில் நடுக்கம் ஏற்படுகிறது. ``இதுக்குத்தான் சிரமப்படாதீங்கன்னு சொன்னேன்" என்று விஜயதரணி சொல்ல, ``இல்ல, நான் பேசியே தீருவேன்'' என்றவர், சிறிது ஆசுவாசத்துக்குப் பிறகு தொடர்ந்தார்.

டாக்டர் பகவதி
டாக்டர் பகவதி

``குண்டுவெடிப்புக்குப் பிறகு எனக்கு என்ன ஆச்சுன்னு தெரியலை. தரையில குப்புறக் கிடந்த நான், மயக்கம் தெளிஞ்சு தடுப்புக் கட்டைகளைப் பிடிச்சு எழுந்தேன். என்னைச் சுத்தி நிறைய பெண்களும் ஆண்களும் சிதறிக்கிடந்தாங்க. அவங்களையெல்லாம் வரிசையா தூக்கிக்கிட்டுப் போனாங்க. என்கிட்ட சில கட்சி நிர்வாகிகள் வந்து ஏதோ பேசினாங்க. ஆனா, எனக்குக் காது சரியா கேட்கலை. என் கை, கால்கள் நடுங்குது.

`பெரிய அசம்பாவிதம் நடந்துடுச்சு. ராஜீவ் ஜியை ஆஸ்பத்திரிக்கு அழைச்சுக்கிட்டு போயிருக்காங்க. நீங்களும் வாங்க ஆஸ்பத்திரிக்குப் போகலாம்'னு கட்சியினர் சொன்னதெல்லாம் என் மூளைக்கு கொஞ்சம் கொஞ்சம்தான் ஏறுச்சு. `ராஜீவ் ஜியை பார்த்துக்கோங்க. என் பொண்ணுங்க என்னைத் தேடுவாங்க. நான் வீட்டுக்குப் போகணும்'னு சொல்லிட்டு மெயின் ரோட்டுக்கு வந்தேன். சென்னைக்குப் போகிற ஒரு வண்டியில உதவி கேட்டு ஏறினேன். மன நடுக்கத்துல, எப்படி வீட்டுக்கு வந்து சேர்ந்தேன்னு எனக்கே தெரியலை" என்கிறார் பெருமூச்சுடன்.

ராஜீவ் காந்தி
ராஜீவ் காந்தி
குண்டுவெடிப்பு நிகழ்வால் ஏற்பட்ட பாதிப்பால், பகவதியால் தனது டாக்டர் தொழிலை கவனிக்க முடியவில்லை; வெளியிடங்களுக்குப் போக முடியவில்லை. கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக வீட்டிலேயே முடங்கியிருக்கிறார்.

அம்மாவின் கரங்களைப் பற்றியபடி பேசிய விஜயதரணி, ``அப்போ போயஸ்கார்டன்ல எங்க வீடு இருந்துச்சு. அக்கா, தங்கை, நான்னு மூணு பேர் மட்டும் வீட்டுல தனியா இருந்தோம். குண்டுவெடிப்புச் செய்தியைக் கேள்விப்பட்டு, எங்கம்மாவுக்கு என்ன ஆச்சோனு அழ ஆரம்பிச்சுட்டோம். பலருக்கு போன் பண்ணியும் எந்தத் தகவலும் இல்லை. ஶ்ரீபெரும்புதூர் மருத்துவமனை, சென்னை அரசு மருத்துவமனைனு ஆளுக்கு ஒருபக்கம் போய் தேடலாம்னு முடிவெடுத்த நேரம்.

விஜயதரணி மகள் திருமணத்தில் பகவதி
விஜயதரணி மகள் திருமணத்தில் பகவதி

உடல் முழுக்க ரத்தக்கறை, காயங்களுடன் வீட்டுக்குள் நுழைந்த அம்மா, அப்படியே மயங்கி கீழ விழுந்துட்டாங்க. மருத்துவமனைக்கு கூட்டிட்டுப் போனோம். சில வாரங்களில் அவங்க காயங்கள் ஆறிடுச்சு. ஆனா, ஒரு காதுல அடிக்கடி ரத்தம் கசிய ஆரம்பிச்சது. பிறகுதான், அம்மாவுக்கு ஒரு காதின் செவித்திறன் இழந்துடுச்சுனு தெரிஞ்சுது. மேலும், அவங்க இதயத்துக்குப் போகும் ஆக்ஸிஜன் சப்ளையில பாதிப்பு, மைனர் அட்டாக்னு பல பாதிப்புகள். தொடர் சிகிச்சையிலும் ஓரளவுதான் பலன் கிடைச்சது'' என்று வருத்தத்துடன் கூறினார்.

தனக்கு ஏற்பட்ட பாதிப்புகளின் காரணமாக, மருத்துவம் மற்றும் அரசியல் பணியைத் தொடரமுடியாமல் போய்விட்டதை சோகத்துடன் பகிர்ந்தார் பகவதி அம்மா. ``உடல்நிலை ஓரளவுக்கு நார்மல் ஆனதும் டாக்டர் பணியைத் தொடர ஆரம்பிச்சேன். ஆனா, என் கை மற்றும் கால்களில் உண்டாகிற நடுக்கத்தை என்னால சமாளிக்க முடியலை. பிரசவங்களின்போது, குழந்தையின் தலையைப் பிடிச்சு வெளிய எடுக்குறப்போ, நடுக்கம் அதிகமாகிடும். சிசேரியன் சமயங்களில் தையல் போட்டு முடிக்கிறதுக்குள்ள... அப்பப்பா! (பகவதியின் உடல் நடுங்குகிறது).

தாய், சேய்னு ரெண்டு உயிர்கள் நம்மை நம்பி வரும்போது, நாம ரிஸ்க் எடுக்கக் கூடாதுனு மெடிக்கல் ஃபீல்டையே முழுசா விட்டுட்டேன். வெளியிடங்களுக்குப் போக வர முடியாததால கட்சிப் பணிகளிலிருந்தும் விலகிட்டேன். டாக்டருக்கு படிச்சுட்டு வீட்டுலேயே முடங்கி இருக்கிறோமே, கட்சிப் பணிகளையும் செய்ய முடியலையேனு கலங்கி, அழுது, வருந்தியே வருஷங்களைக் கழிச்சேன்'' என்று கண்ணீருடன் சொல்பவருக்கு இப்போது வயது 84.

``பொருளாதார ரீதியா பல சிரமங்களைக் கடந்தும், எங்கம்மா மூணு பொண்ணுங்களையும் நல்லா படிக்கவெச்சு கல்யாணம் பண்ணிவெச்சாங்க. எம்.எல்.ஏ சீட் கிடைச்சும், தன் உடல்நிலையால் அதை ஏற்கமுடியாத அம்மாவுக்கு, நான் இருமுறை எம்.எல்.ஏ ஆனதில் பெரிய சந்தோஷம். குண்டுவெடிப்பு நிகழ்வைப் பத்தி அவங்களை நினைக்கவிட மாட்டோம்.

ராகுல் காந்தியுடன் விஜயதரணி
ராகுல் காந்தியுடன் விஜயதரணி

தினமும் இரவு 9 மணிக்கு மேல தன்னை அறியாம பழைய நினைவுகளை சொல்லிச்சொல்லி அழ ஆரம்பிச்சுடுவாங்க. அவங்கள தூங்கவைக்கிறது பெரும்பாடாகிவிடும். செவித்திறன் பிரச்னையால அவங்களுக்கு ஒரு விஷயத்தைப் புரியவைக்கிறது கொஞ்சம் கஷ்டம்தான். ஆனாலும், அம்மாவுக்குப் பிடிச்ச விஷயங்கள்ல கவனம் செலுத்தவெச்சு, பழைய நினைவுகள் அவங்க மனதைப் பாதிக்காதவாறு பார்த்துக்கிறோம். இப்போ, என் வீட்டிலும் தங்கச்சி வீட்டிலும் அம்மா மாறி மாறி வசிக்கிறாங்க'' என்கிற விஜயதரணியின் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த பகவதியின் குரல் சன்னமாக மேலெழுகிறது.

``ஏன் அரசியலுக்கு வந்தோம்னு நான் ஒரு நாளும் வருத்தப்பட்டதில்லை. கட்சிக்காக கடந்த 28 வருஷமா உழைக்க முடியாததுதான் பெரிய வருத்தம். நாங்க சுதந்திரப் போராட்ட வீரர்கள் வழிவந்த குடும்பம். கட்சிக்காக என் உயிரே போயிருந்தாலும் கவலைப்பட்டிருக்க மாட்டேன். ஆனா, தலைவர் ராஜீவ் ஜியை பறிகொடுத்ததைத்தான் இன்றுவரை என்னால ஜீரணிக்க முடியலை. என் வாழ்நாள் உள்ளவரை தினமும் அந்த நிகழ்வும் ராஜீவ் ஜியின் நினைவும் எனக்குள் இருக்கும்" என்பவரை அறியாமல் கண்ணீர் பெருக்கெடுக்கிறது. அவரை ஆசுவாசப்படுத்தி தூங்கவைக்கிறார் விஜயதரணி.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு