அரசியல்
சமூகம்
அலசல்
Published:Updated:

கட்சியை இளைஞர்களிடம் ஒப்படைத்துவிட்டு வெளியேறுவேன்!

‘மாமனிதன் வைகோ’ ஆவணப்படம்
பிரீமியம் ஸ்டோரி
News
‘மாமனிதன் வைகோ’ ஆவணப்படம்

- சொல்கிறார் துரை வைகோ

வைகோவின் 56 ஆண்டுக்கால பொது வாழ்வைச் சித்திரிக்கும் ‘மாமனிதன் வைகோ’ என்ற ஆவணப்படத்தை தயாரித்திருப்பதுடன், அதைத் தமிழ்நாடு முழுவதும் திரையிட்டுவருகிறார், ம.தி.மு.க தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ. அந்த ஆவணப்படத்தில் இயக்கத்துக்காக உயிர்த் தியாகம் செய்தவர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் அதில், ‘தி.மு.க-வின் வாரிசு அரசியலை எதிர்த்து, தீக்குளித்து உயிர் நீத்த ஐந்து பேர் என்ற உண்மையைப் பதிவுசெய்யவில்லை’ என விமர்சனம் எழுந்தது. இந்த நிலையில் படம் திரையிடப்படும் இடங்களிலும் பிரச்னைகள் தொடர்கின்றன.

துரை வைகோ
துரை வைகோ

8-10-2022 அன்று தேனி, வெற்றி திரையரங்கில் ஆவணப்படம் திரையிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. டிக்கெட் விநியோகத் தகராறில் மாவட்டச் செயலாளர் ராமகிருஷ்ணனை, முன்னாள் ஒன்றியச் செயலாளர் சிவா அடிக்கப் பாய்ந்ததால் களேபரம் ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த துரை வைகோ இருவரையும் சமாதானப்படுத்தி உள்ளே அழைத்துச் சென்றார்.

இதையடுத்து ஆவணப்படம் பற்றிய விமர்சனங்கள் குறித்து துரை வைகோவிடம் கேட்டோம்.

‘‘இந்த ஆவணப்படம் கட்சியை வளர்ப்பதற்காக எடுக்கப்பட்டது அல்ல. இது அரசியலுக்கு அப்பாற்பட்டது. ம.தி.மு.க இயக்கத்துக்காக உயிர்த் தியாகம் செய்த அனைவரின் படங்களையும் போட்டு அவர்களுக்கு மரியாதை செலுத்தியிருக்கிறோம். ஆனால், சிலர் சமூக வலைதளங்களில் ஃபேக் ஐடி வைத்துக்கொண்டு, தேவையற்றதைப் பரப்பி குழப்பத்தை விளைவிக்கின்றனர். ஆவணப்படம் பார்க்க டிக்கெட் கிடைக்கவில்லை என்பதற்காக ஏற்பட்ட பிரச்னையை பாசிட்டிவ்வாகத்தான் பார்க்கிறேன்” என்றார் அவர்.

கட்சியை இளைஞர்களிடம் ஒப்படைத்துவிட்டு வெளியேறுவேன்!

“வாரிசு அரசியலை எதிர்த்து தீக்குளித்து இறந்த வரலாற்றைப் படத்தில் பதிவுசெய்யவில்லை என்கிறார்களே?” என்றோம். ‘மக்களிடம் புரிதல் இல்லை; தலைவருக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லையே’ என எங்கள் உறவினர் சரவண சுரேஷும், சிவகாசி ரவியும் தீக்குளித்து இறந்தனர். தற்போது 35 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு வைகோ பற்றிய புரிதல் இல்லாமல் இருக்கிறது. ‘இவரை நாம் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லையே’ என்ற புரிதலை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காகவே இந்த ஆவணப்படத்தை எழுதி, தயாரித்திருக்கிறேன். நிறைய இளைஞர்களை அரசியலுக்குக் கொண்டுவர உழைப்பேன். அவர்களுக்கான அரசியல் தளத்தை ஏற்படுத்திக் கொடுப்பேன். ஒருகட்டத்தில் அப்படி உருவாகும் இளைஞர்களிடம் கட்சியை ஒப்படைத்துவிட்டு வெளியேறும் எண்ணமும் எனக்கு இருக்கிறது. தலைவர் இருக்கும்போதே கட்சியை ஒரு நல்ல நிலைமைக்குக் கொண்டுவந்துவிட வேண்டும் என்பதற்கான வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறேன்’’ என்றார்.

மூத்த நிர்வாகிகள் சிலரை அவர் கடுமையாகப் பேசுவதாகத் தகவல் பரவும் நிலையில், “என்னிடம் குறைபாடுகள் இருக்கின்றன. குறிப்பாக, கோபப்படுவதை விடப்போகிறேன்” என்றும் சொல்லியிருக்கிறார் துரை!