Published:Updated:

#GoBackStalin: முதல்வர் ஸ்டாலினின் இமேஜை பாதித்ததா? - ட்ரெண்ட் செய்யப்பட்ட நோக்கம் என்ன?

ஸ்டாலினின் கோவை விசிட்
ஸ்டாலினின் கோவை விசிட்

கொங்கு மண்டலத்தில் கொரோனா ஆய்வுக்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக #GoBackStalin என ட்விட்டரில் ட்ரெண்ட் செய்யப்பட்டது. இதன்மூலம் முதல்வரின் இமேஜ் பாதிக்கப்பட்டதா? ட்ரெண்டான நோக்கம் என்ன?

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காகச் நேற்று அந்த மாவட்டங்களுக்குச் சென்றார். அப்போது ட்விட்டரில் #GoBackStalin என்ற ஹேஷ்டேக் தேசிய அளவில் ட்ரெண்ட் செய்யப்பட்டது. அந்த ஹேஷ்டேக்கில், கொங்கு மண்டலத்தில் தி.மு.க-வுக்கு பிரதிநிதித்துவம் கிடைக்காததால் தி.மு.க அரசு அப்பகுதியைக் கண்டுகொள்ளவில்லை என்று குற்றம் சாட்டும் பதிவுகளைக் காண முடிந்தது. மேலும், கொரோனா பெருந்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதில் தி.மு.க அரசு காட்டிய பாராமுகம்தான் தற்போது கோவையில் வேகமாகத் தொற்று பரவுகிறது என்றும், தங்கள் மீது ஏற்பட்ட கலங்கத்தை போக்கத்தான் பி.பி.இ கிட்டுடன் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார் எனவும் பதிவிடப்பட்டன.

கொரோனா பாதுகாப்பு கவச உடையில் மு.க.ஸ்டாலின்
கொரோனா பாதுகாப்பு கவச உடையில் மு.க.ஸ்டாலின்

#GoBackStalin என்ற ட்விட்டர் ட்ரெண்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் எப்படி எதிர்கொண்டார், அதன் நோக்கம் என்ன, உண்மையில் தமிழக அரசு கொங்கு மண்டலத்தைக் கைவிட்டுவிட்டதா என தி.மு.க செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் கேட்டோம்.``#GoBackStalin என அதிகபட்சமாக ஒரு லட்சம் பேர் பயன்படுத்தியிருக்கிறார்கள். அதேநேரத்தில் #WeStandWithStalin எனக் கிட்டத்தட்ட மூன்று லட்சத்திற்கும் அதிகமானோர் பயன்படுத்தி தங்கள் ஆதரவை முதல்வர் ஸ்டாலினுக்கு தெரிவித்திருக்கிறார்கள். இதன்மூலம் அவர்களின் நோக்கத்தை முதல்வர் ஸ்டாலின் முறியடித்துவிட்டார் என்பது வெளிப்படை. அதுமட்டுமல்ல, இது மக்கள் மனதிலிருந்து வெளிப்பட்டதாகத் தெரியவில்லை. பா.ஜ.க vs தி.மு.க என்றுதான் நேற்று ட்விட்டரில் ஓடிக் கொண்டிருந்தது. எனவே, இதனால் மக்கள் மத்தியில் முதல்வர் ஸ்டாலினுக்கு உள்ள மரியாதையில் எந்த அளவும் இது பாதிப்பையும் ஏற்படுத்தாது.

கோவை விசிட்: பிபிஇ கிட் அணிந்து கொரோனா வார்டில் ஆய்வு.. தேசிய அளவில் ட்ரெண்ட்டான #GoBackStalin

முதலில் கோவைக்கும் கழக அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லாததுபோல பேசிக்கொண்டிருந்தார்கள். ஆனால், சென்னைக்கு அடுத்து கோவையில்தான் அதிக தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது, அதிக ஆக்ஸிஜன் படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன என்பதைப் புள்ளி விவரங்களுடன் அரசு நிரூபித்ததும் தற்போது என்ன பேசுவது என்று தெரியாமல் இருக்கிறார்கள். பதவியேற்று 20 நாட்களுக்குள் முதல்வர் இரண்டு முறையும் அமைச்சர்கள் இரண்டு முறையும் கோவை சென்று ஆய்வு செய்திருக்கிறார்கள்.

கான்ஸ்டைன் ரவீந்திரன்
கான்ஸ்டைன் ரவீந்திரன்

நீட் தேர்வு, புதிய தேசிய கல்விக் கொள்கை, ஹைட்ரோ கார்பன், எட்டுவழிச் சாலை இப்படி எல்லாவற்றிலும் நாம் பரிதவித்துக்கொண்டிருந்தோம். அதிலிருந்து நமக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று நாம் போராடிக்கொண்டிருக்கும்போது பிரதமர் மோடி நம் ஊருக்கு விழாவில் பங்கேற்க வந்தார். எங்கள் கோரிக்கைக்குச் செவி சாய்க்க நேரமில்லாத மோடிக்கு விழாவில் மட்டும் பங்கேற்க எப்படி நேரம் கிடைத்தது என்ற வேதனையில் மக்கள் #GoBackModi எனத் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தார்கள். அதில் ஒரு லாஜிக் இருக்கிறது.

ஆனால், நேற்று தலைவர் ஸ்டாலின், மக்களின் அச்சத்தைப் போக்கி கொரோனா தொற்றை அப்பகுதியில் கட்டுக்குள் கொண்டுவர எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வுசெய்யச் சென்றார். அப்படி முதல்வர் ஆய்வு செய்யும் போது அதிகாரிகள் துரிதமாக கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடுவார்கள். மக்கள் பணிக்காகச் செல்லும் போது #GoBackStalin என்பதை ட்ரெண்ட் செய்கிறார்கள் என்றால் அதில் என்ன லாஜிக் இருக்கிறது?அது அறிவுப்பூர்வமானதாக எனக்குப்படவில்லை.

 #GoBackModi
#GoBackModi

உண்மையில் இது அடிமுட்டாள்தனமானது. உண்மையில் அறிவு உள்ளர்வகள் முதல்வர் வேகமாக வர வேண்டும் என்ற ஹேஸ்டாக்கைத்தான் உருவாக்கி ட்ரெண்ட் செய்திருப்பார்கள். இப்படிச் செய்து கோவை மக்களுக்கு எதிரானதாகத் தமிழக அரசைக் காட்டி, கொங்குப் பகுதி மக்களுக்கு ஏதும் கிடைக்காமல் செய்துவிட வேண்டும் என்பதுதான் பா.ஜ.க-வினரின் நோக்கம். அதன்மூலம் தங்களுக்கு உரிய இடமாகக் கொங்குப் பகுதியைக் கட்டமைத்துக்கொள்ளலாம் என்ற அரசியல் ஆதாயத்தையும் அடைய முயல்கிறார்கள்.

தமிழ்நாட்டில் இருக்கும் பா.ஜ.க தலைவர்கள் நம் மக்களுக்கானவர்கள் என்றால் மத்திய அரசிடம் இருந்து நமக்குத் தேவையான தடுப்பூசிகளைப் பெற்றுத்தர வேண்டும். தடுப்பூசி தயாரித்துக்கொள்ள அனுமதியை வாங்கித் தர வேண்டும். ஜி.எஸ்.டி நிலுவைத் தொகை கிடைக்கத் தமிழக அரசுடன் இணைந்து அழுத்தம் கொடுக்க வேண்டும். ஆனால், இவை எல்லாவற்றையும் விட்டுவிட்டு மத்திய அரசு நமக்குச் செய்யும் துரோகத்திற்கு அவர்கள் முட்டுக்கொடுக்கிறார்கள் என்றால் இங்கிருக்கும் பா.ஜ.க தலைவர்கள் தமிழினத் துரோகிகள் இல்லையா?” என விளக்கத்தையும் தமிழக பா.ஜ.க தலைவர்களுக்கு எதிரான சில கேள்விகளையும் முன்வைத்தார்.

அலட்சியப்போக்கு... அறம் இல்லை... மாற்றாந்தாய் மனநிலை!

ஹேஷ்டாக் மோதல்கள் குறித்து பா.ஜ.க மாநில துணைத்தலைவர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.துரைசாமியிடம் பேசினோம்,``பாரதப் பிரதமர் மோடி சென்னைக்கு வரும்போது #GoBackModi எனப் பெரிய பலூனில் கட்டி பறக்கவிட்டார் தற்போது அமைச்சராக இருக்கும் மா.சுப்பிரமணியம். அது சட்டப்படியும் நியாயப்படியும் மிகப்பெரிய தவறு. இந்தியாவின் ஒரு பகுதியான சென்னையிலோ நாட்டின் பிற பகுதிகளுக்கோ அரசு விழாவிற்காகவோ மற்ற பிற காரியங்களுக்காகவோ செல்வதற்கு பிரதமருக்கு எல்லா உரிமையும் அதிகாரமும் இருக்கும்போது, அவரது வருகையை ஒட்டி #GoBackModi என்று சொன்னது மிகப்பெரிய தவறு.

அதேபோல தமிழக முதல்வர் போனபோது #GoBackStalin என சமூக வலைத்தளங்களில் யார் பதிவிட்டிருந்தாலும் தவறுதான். ஆனால், இதைப் பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்கள்தான் செய்தார்கள் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. அதற்கான ஆதாரங்களும் இல்லை. #GoBackStalin என்பது மக்களின் மனதில் இருந்து வெளிவந்திருக்கும். அதை அரசு சரி செய்ய வேண்டுமே தவிர அதற்கு பா.ஜ.க-வை பொறுப்பாக்கக் கூடாது. ஏனெனில், பாரதிய ஜனதா கட்சி கண்ணியமான, கட்டுப்பாடுகளுடன் இயங்கும் கட்சி என்பதால் இந்த மாதிரியான மட்டமான விஷயங்களில் ஈடுபட்டிருக்காது என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்” என்றவர்...

வி.பி.துரைசாமி - பா.ஜ.க
வி.பி.துரைசாமி - பா.ஜ.க

``தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடே இல்லை என முதல்வர் ஒருபக்கம் சொல்கிறார். அடுத்த ஐந்து நிமிடங்களில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தமிழக பா.ஜ.க தலைவர்கள் தமிழகத்தில் இருக்கும் தடுப்பூசி தட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டு மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்குத் தேவையான அளவு தடுப்பூசியைப் பெற்றுத்தர வேண்டும் எனப் பேசுகிறார். முதலில் நிர்வாகத்திற்குள் இருக்கும் இதுபோன்ற முரண்பாடுகளில் கவனம் செலுத்தி கொரோனா பேரிடரிலிருந்து மீண்டுவர அரசு கவனம் செலுத்த வேண்டும். விமர்சனங்களை பிறகு பார்த்துக் கொள்ளலாம்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு