Published:Updated:

மம்தா சொல்வதுபோல் இந்தியாவுக்கு 4 தலைநகரங்கள் தேவையா? - ஒரு விரிவான அலசல்!

மம்தா
மம்தா

மம்தாவின் இந்தக் கருத்தை தமிழக அரசியல் தலைவர்கள், பல்வேறு இயக்கங்களின் தலைவர்கள் வரவேற்றிருக்கிறார்கள். அதேவேளையில், பா.ஜ.க-வினர் கடுமையான விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.

இந்திய அரசியல் களத்தில், அதிரடியான கருத்துகளுக்கும், அதிரவைக்கும் நடவடிக்கைகளுக்கும் சொந்தக்காரர் மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி. மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி அமைந்ததிலிருந்து அவருக்கும் பா.ஜ.க-வுக்கும் ஏழாம் பொருத்தம்தான். பிரதமர் கலந்துகொண்ட நிகழ்ச்சிகளில் பேச மறுத்தது முதல் சொந்த மாநில கவர்னர் கொடுத்த தேநீர் விருந்தைப் புறக்கணித்தது வரை மம்தாவின் அதிரடிகளை அடிக்கிக்கொண்டே போகலாம். தன் மாநில எல்லைக்குள் மட்டுமல்ல, நாடு முழுவதும் மத்திய அரசின் பல நடவடிக்கைகளைத் துணிச்சலாக எதிர்த்துப் பேசிவருகிறார் மம்தா. தமிழகத்தில் தலைமைச் செயலகத்தில், வருமான வரித்துறையினர் சோதனை நடத்த, அதற்கு முதல் எதிர்ப்புக்குரல் வந்தது மம்தாவிடமிருந்துதான். அந்தவரிசையில், தற்போது, `சுழற்சி அடிப்படையில், இந்தியாவுக்கு நான்கு தலைநகரங்கள் இருக்க வேண்டும்' என மம்தா பேசியிருப்பது, ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தையும் அவர்மீது திருப்பியிருக்கிறது.

மோடி - மம்தா
மோடி - மம்தா

நேதாஜியின் 125-வது பிறந்தநாளை முன்னிட்டு, மே.வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் கடந்த சனிக்கிழமை பேரணி நடத்தப்பட்டது. அந்தப் பேரணிக்குப் பிறகு நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய மம்தா,

``இந்தியா போன்ற பரந்து விரிந்த நாட்டுக்கு ஒரே ஒரு தலைநகரம் இருப்பது கொஞ்சம்கூடப் பொருத்தமாக இல்லை. இந்தியாவுக்கு நான்கு தலைநகரங்கள் வேண்டும். இந்தத் தலைநகரங்கள் ஒவ்வொன்றும் சுழற்சிமுறையில் நிர்வாகத் தலைமை மையங்களாக இயங்க வேண்டும். மத்திய அரசு இந்தியாவுக்கு நான்கு தலைநகரங்களை உருவாக்க வேண்டும். தெற்கே ஒரு தலைநகர், வடக்கே ஒரு தலைநகர், கிழக்கே ஒரு தலைநகர், வடகிழக்குப் பகுதியில் நான்காவது தலைநகர் இருக்க வேண்டும். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மக்களவை அணித் தலைவர் சுதீப் பானர்ஜி இந்தக் கோரிக்கையை நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டும் என்று நான் அவரை கேட்டுக்கொள்கிறேன்'' என்று பேசியவர் தொடர்ந்து,

``தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம் ஆகிய மூன்று மாநிலங்கள் உள்ளன. இந்த மூன்று மாநிலங்களில் ஒன்றில் தெற்குப் பகுதியான இந்தியத் தலைநகரம் அமையலாம். அதேபோல இந்தியாவின் வடக்குப் பகுதியில் உத்தரப்பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான் ஆகியவை உள்ளன. இந்த மூன்று மாநிலங்களில் ஏதாவது ஒன்றில் வடக்குப் பகுதி தலைநகரம் அமைக்கப்படலாம். இந்தியாவின் கிழக்குப் பகுதியில் கொல்கத்தா உள்ளது. அங்கு கிழக்குப் பகுதியின் தலைநகரத்தை அமைக்கலாம். மத்திய அரசின் மனப்பான்மை மாநிலங்களைப் பொருத்தமட்டில் மாற்றம் பெற வேண்டும் மத்திய அரசின் நோக்கமும் போக்கும் மாற்றம் காண வேண்டும். ஒரு தலைவர், ஒரு நாடு, ஒரு ரேஷன் கார்டு , ஒரு தேசம், ஓர் அரசியல் கட்சி... இவற்றுக்கு என்ன அர்த்தம் என்று எனக்குத் தெரியவில்லை'' என்றும் மம்தா பானர்ஜி குறிப்பிட்டார். மம்தாவின் இந்தக் கருத்தை தமிழக அரசியல் தலைவர்கள், பல்வேறு இயக்கங்களின் தலைவர்கள் வரவேற்றிருக்கிறார்கள். அதேவேளையில் மம்தாவின் இந்தக் கருத்துக்குக் கடுமையான விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன.

ஆழி செந்தில்நாதன்
ஆழி செந்தில்நாதன்

ஆழி.செந்தில்நாதன், செயற்பாட்டாளர்!

``டெல்லி முதன்மை நிர்வாகத் தலைநகராக இருந்தபோதும், இந்தியாவின் கிழக்கு, தெற்கு, மேற்குப் பகுதிகளில் ஒவ்வோர் இணைத் தலைநகரங்களை உருவாக்கலாம். நாடாளுமன்றம் உள்ளிட்ட அனைத்து நிர்வாகமும் நான்கு இடங்களிலும் நடைபெறலாம். முதன்மைத் தலைநகரத்தையும் சுழற்சி முறையில் மாற்றலாம். அதற்கான அலுவலகங்களை அந்தந்த நகரங்களில் உருவாக்கலாம். நவீன தொழில்நுட்பத்தின் வாயிலாக ஒவ்வொன்றையும் இணைப்பது சாத்தியமான ஒன்றுதான். அது முதன்மையான தேவையும்கூட. மம்தாவின் இந்தக் குரல், அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும் என்கிற கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் எழுவதாகவே பார்க்கிறேன். நான் அதை முழுமையாக வரவேற்கிறேன். நிர்வாகத்துக்கும் அரசியல்ரீதியான அதிகாரப் பரவலுக்கும் இது முக்கியமானது. அனைத்துப் பகுதி மக்களுக்கும் நாம் அதிகாரத்தின் மையத்தில் இருக்கிறோம் என்கிற உணர்வை இது கொடுக்கும்.''

அய்யநாதன், மூத்த பத்திரிகையாளர்

``நான்கு தலைநகரங்கள் வேண்டும் என்கிற மம்தாவின் இந்த ஆதங்கம் மிகவும் இயற்கையானது. பல்வேறு தேசிய இன மக்கள் வாழும் இந்தியாவில் அதிகாரம் அனைத்தும் மத்தியில் குவிந்துகிடக்கின்றன. மாநில அரசுகள் ஏதோ வேலை செய்யும் நிர்வாக அமைப்புகளாக மட்டும் பார்க்கப்படுகின்றன. அதனடிப்படையில் பார்த்தால் மம்தாவின் குரலை கூட்டாட்சிக்கான குரலாகத்தான் நான் பார்க்கிறேன். ஆனால், அதை மம்தாவும் மிகவும் அழுத்தமாக, வெளிப்படையாக வலியுறுத்த வேண்டும்.

`மாநில சட்டமன்றங்களை, சட்டமியற்றும் அதிகாரங்கள் இல்லாத அமைப்பாக மாற்ற வேண்டும்' என்பது ஆர்.எஸ்.எஸ்ஸின் தத்துவம். அதனால்தான் மாநிலத்தின் அதிகாரங்களை ஒவ்வொன்றாகப் பறித்துக்கொண்டுவருகிறார்கள். காலப்போக்கில், சிதறிப்போன இதர அதிகாரங்களைக்கூட மத்தியில் உள்ளவர்களே எடுத்துக்கொள்வார்கள். சர்வ அதிகாரங்களையும் மத்தியில் குவித்து, மாநில அரசுகளுக்குத் தலைமையே இல்லாத நிலையை உருவாக்கி, மத்திய அரசின் பிரதிநிதிகளே மாநிலங்களை கவனித்துக்கொள்ளும் வகையில் மாற்றிவிடுவார்கள். அதனால் இது போன்ற குரல்கள் எழ வேண்டியது அவசியமாக இருக்கிறது. மம்தாவைத் தொடர்ந்து, சிவசேனாவும் இது போன்ற குரலை எழுப்பும். தொடர்ந்து கேராளாவும் எழுப்பும். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே அதற்கு வாய்ப்பிருக்கிறது.''

அய்யநாதன்
அய்யநாதன்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த அருணன் இது குறித்துப் பேசும்போது,

``மம்தா சொல்லியிருப்பது நல்ல கருத்தாகத்தான் இருக்கிறது. ஆனால், தலைநகரங்களைப் பிரிப்பதால் மட்டுமே மாநிலங்களுக்கு அதிகாரங்கள் வந்துவிடாது. நம் அரசியல் சாசனம், மாநிலங்களின் ஒன்றியம் என்றுதான் இந்தியாவை வரையறுக்கிறது. 'சென்ட்ரல் கவர்ன்மென்ட்' என்கிற வார்த்தையே அரசியல் சாசனத்தில் இருக்காது. 'யூனியன் கவர்ன்மென்ட்' என்கிற வார்த்தைதான் இருக்கும். ஆனால், நடைமுறையில் அனைத்து அதிகாரங்களும் டெல்லியில் குவிந்து, சென்ட்ரல் கவர்ன்மென்ட் ஆகிவிட்டது. மத்திய அரசு மெஜாரிட்டி இல்லாமல் கவிழ்ந்துபோனால், அங்கு வேறொரு தலைமையின்கீழ் அரசாங்கம் வரும் அல்லது மறுதேர்தல் வரும். ஆனால், ஒரு மாநில அரசு கவிழ்ந்துவிட்டால் அங்கு கவர்னரின் ஆட்சி நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதுவே அடிப்படையில் தவறு. இது போன்று மாநில உரிமை சார்ந்த பல விஷயங்களையும் மம்தா பேச வேண்டும்.

அதேபோல, `ஒரே நாடு, ஒரே தலைவர்’ என்பது சர்வாதிகாரச் சிந்தனைதான். காரணம், இந்தியா பல தேசிய இனங்களைக்கொண்ட நாடு. அதனடிப்படையில்தான் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டன. ஆனால், ஆர்.எஸ்.எஸ் அதை ஏற்காது. மொழிவாரி மாநிலங்களை எதிர்த்துத் தீர்மானங்கள் போட்டிருக்கிறார்கள். இது நாட்டின் பன்மைத்தன்மையை ஒப்புக்கொள்ளாதது. அதையும் ஏற்க முடியாது. அந்த வகையில் மம்தாவின் கருத்து ஏற்கக்கூடியதுதான்'' என்கிறார் அவர்.

பேராசிரியர் அருணன்
பேராசிரியர் அருணன்

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ், இது குறித்துப் பேசும்போது,

''மம்தாவின் கருத்தை நான் நூறு சதவிகிதம் வரவேற்கிறேன். சுதந்திரப் போராட்டத்துக்கு முன்னால், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நம்மை இணைத்தது, இந்திய தேசத்துக்கு விடுதலை என்கிற ஒரே முழக்கம்தான்...அதற்குப் பிறகு நம்மை ஒன்றாக வைத்திருப்பது, ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமூகநீதி, அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சி மற்றும் மாநில உரிமைகள் ஆகியவற்றை உறுதி செய்த ஓர் அரசியல் சாசனச் சட்டம். ஆனால். கடந்த சில ஆண்டுகளாக இவையனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்ந்துவருகின்றன. ஜனநாயகம், பெரும்பான்மைவாதமாக மாறிப்போய்விட்டது. சமூகநீதி பல முனைகளிலும் தாக்குதலுக்கு உள்ளாகிறது. மதச்சார்பின்மைக்கு மிகப்பெரிய நெருக்கடி. ஐந்து பெருமுதலாளிகள் வளர்வதற்கு இந்தியா முழுவதும் விலை கொடுக்க வேண்டியிருக்கிறது.

மம்தா Vs பா.ஜ.க...உச்சகட்ட மோதலில் மேற்கு வங்க அரசியல் களம்!

மொழியால், இனத்தால், கலாசாரத்தால் வேறுபட்டிருந்தாலும் ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமூகநீதி ஆகியவை நம்மை இணைத்தன. ஆனால், இன்று நிலைமை எப்படியிருக்கிறது... இன்று மத்தியிலுள்ள அரசாங்கத்தில் தமிழகத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் இருக்கிறார்களா... மத்தியில் எடுக்கக்கூடிய முக்கிய முடிவுகளில் தமிழ்நாட்டின் பங்கு என்ன... எதுவும் இல்லை. ஆனால், பஞ்சாப் விவசாயிகள் போராடினால், அவர்களுக்கு எதிராக ராஜஸ்தான் விவசாயிகளைத் தயார் செய்து மோதவிடுகிறார்கள். தமிழ்மொழிக்கு ஆபத்து என்று குரல் கொடுத்தால், இந்தி மொழி பேசக்கூடியவர்களைவைத்து பதில் சொல்லுகிரார்கள்... நாடாளுமன்றத்திலேயே தமிழக எம்.பி-க்கள் அமைதியாக உட்கார்ந்து வேடிக்கைதான் பார்க்க வேண்டியிருக்கிறது. நம்முடைய பங்களிப்பே இல்லாமல்தான் நாடாளுமன்ற விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. குறைந்தபட்சம் ஒரு தென்னிந்திய நாடாளுமன்றத்தைக் கூட்டட்டும். அதேபோல, மத்திய அரசின் பணிகளில், மாநிலரீதியான பிரதிநிதித்துவத்தோடு பணியமர்த்தப்பட வேண்டும்.

பீட்டர் அல்போன்ஸ்
பீட்டர் அல்போன்ஸ்

இனி, இது போன்ற கேள்விகளை எழுப்பாமல் தமிழர்களின் உரிமைகளை எப்படிப் பாதுகாக்கமுடியும். நாம் கொடுக்கும் வரிப்பணத்தை எடுத்துக்கொண்டு போய், உ.பி-யிலும், ம.பி-யிலும் வயதான மாடுகளுக்குத் தீவனம் வாங்கிப்போடுவதை நாம் எப்படிப் பார்த்துக்கொண்டிருக்க முடியும்... நாம் கொடுக்கும் ஒரு ரூபாய் வரிப்பணத்துக்கு திரும்பி 35 பைசா மட்டுமே கொடுக்கிறார்கள். ஆனால், உ.பிரதேசத்துக்கு ஒரு ரூபாய்க்கு, ஒரு ரூபாய் 75 பைசா போகிறது. இந்தச் சமசீரற்ற தன்மையை எப்படிச் சரிசெய்வது. இந்தியாவில் தமிழர்கள் மொழிச்சிறுபான்மையினர் ஆகிவிட்டோம். அதைத்தான் ராகுல் காந்தியும் சமீபத்தில், 'தமிழ்நாடு இந்தியாவில் இருக்கிறது என்று சொல்கிறீர்கள், அப்படியென்றால் இந்தியா தமிழ்நாட்டில் இல்லையா' என்று அருமையாகக் கேட்டார். இதைச் சரிசெய்ய வேண்டுமென்றால், அதிகாரங்கள், நிதிப்பங்கீடுகள் ஆகியவவை பிராந்தியமயமாக்கப்பட வேண்டும். அப்போதுதான் நமக்கான நியாயம் கிடைக்கும்'' என்கிறார் அவர்.

``நம் நாடு அதிக மக்கள்தொகைகொண்ட மிகப்பெரிய நாடு. ஒவ்வொரு பகுதியிலிருந்தும் தலைவர்கள் வந்துகொண்டுதான் இருக்கிறார்கள். அதேவேளையில், தேசியக் கட்சிகளில் ஒரே தலைவர் என்பது இயல்பாக ஒத்துப்போகிற ஒரு விஷயமாக இருக்கிறது. ஒரு முறை தெற்கில், மறுமுறை வடக்கில் என ஒவ்வொரு பகுதியிலிருந்து வந்தாலும், அனைவரின் தேவைகளையும் பூர்த்திசெய்கிற வகையில் தலைவர்கள் செயல்படுகிறார்கள். ஆனால், பிராந்தியக் கட்சிகளின் தலைவர்களுக்கு அத்தகைய வாய்ப்புகள் இல்லை. ஆனால், மம்தாவுக்குத்தான் ஒரு தேசியத் தலைவராக வேண்டும் என்கிற எண்ணம் இருக்கிறது. அந்தக் காழ்ப்புணர்வில்தான் இப்படிப் பேசிக்கொண்டிருக்கிறார்''
வானதி சீனிவாசன்

மேற்கண்டவர்களின் கருத்துகள் இப்படியிருக்க, ''மம்தாவின் கருத்துகள் வெறும் அரசியல் ஸ்டன்ட்தான்'' என்கிறார், பா.ஜ.க மகளிரணியின் தேசியத் தலைவர் வானதி சீனிவாசன். மேலும் அவர் பேசும்போது,

''மம்தா பானர்ஜி சமீப நாள்களாக தன் சுயக் கட்டுப்பாட்டை மீறிப் பேசிவருகிறார். மக்களால் தேர்தெடுக்கப்பட்ட முதல்வர் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்கிற வரைமுறைகளைத் தாண்டி நடந்துகொள்கிறார். ரவீந்திரநாத் தாகூரின், விஸ்வ பாரதி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் அவர் கலந்துகொள்ளவே இல்லை. நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் நினைவுதின நிகழ்ச்சியில், ஜெய் ஶ்ரீராம் எனக் கோஷம் போட்டார்கள் என்று சொல்லி, பேசாமல் போய் உட்கார்ந்துகொண்டார். அரசியலில் முதிர்ச்சியுடையவராக நடந்துகொள்ளாமல், பிரதமர் மோடியின் மீதான காழ்ப்புணர்ச்சியைக் காட்டும்விதமாக அரசாங்க விழாக்களையும் தேசத்தலைவர்களையும் அவமானப்படுத்திக்கொண்டிருக்கிறார். அவர், சொன்ன ஒரு கருத்துதான் நான்கு தலைநகரங்கள் வேண்டும் என்பது. தலைநகரத்தின் அதிகாரக் குவிப்பை பல நகரங்களுக்கு விரிவுபடுத்தலாமே தவிர, தலைநகரங்களை ஒவ்வொரு முறையும் மாற்றிக்கொண்டிருக்க முடியாது.

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

ஒவ்வொரு நகரத்துக்க்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான், வெளிநாட்டு தலைவர்களின் நிகழ்ச்சிகள் ஒவ்வொரு நகரத்திலும் நடத்தப்படுகின்றன. அரசியலமைப்புச் சட்டம்தான் அனைத்துக்கும் அடிப்படை. அதிகாரங்கள் மிகச்சரியாக வரையறுக்கப்பட்டு, மாநிலங்களுக்கும் மத்திய அரசுக்கும் பகிர்ந்தளிப்பட்டிருக்கின்றன. அதில் மாநில அரசுகளின் உரிமை பறிக்கப்படுவதாக, எந்த மாநில அரசாவது உணர்ந்தால் நீதிமன்றத்தை நாட முடியும். தங்களுக்கான நியாயத்தைக் கோர முடியும். ஆனால், மம்தா, அதிகார மமதையிலும், தேர்தல் நெருங்குவதால் உண்டாகக்கூடிய பயத்தாலும்தான் இப்படிப் பேசிக்கொண்டிருக்கிறார் என்றே நான் நினைக்கிறேன்'' என்கிறார் அவர்.

அடுத்த கட்டுரைக்கு