ராஜ் பவனில் உள்ள தர்பார் அரங்கில் கடந்த 06.04.2023 அன்று சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் மத்தியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “சட்டமன்றத்தில் ஒரு கட்சிக்கு முழு பெரும்பான்மை இருக்கலாம். அதைவைத்து எந்த மசோதவையும் நிறைவேற்றலாம். ஆனால் அதை சட்டமாக்கும் இடத்தில் ஆளுநர் இருக்கிறார். இயற்றப்பட்ட சட்டம் மாநில அரசின் அதிகாரத்தை தாண்டி போகாமல் உள்ளதா என்பதை கண்காணிப்பது ஆளுநரின் பணியாகும். ஒருவேளை அது எல்லை தாண்டி இருந்தால் அந்த இடத்தில் அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்பது ஆளுநரின் பொறுப்பாகும். அரசியலமைப்பில் மாநில சட்டமன்றம், சட்ட மேலவை போன்றவை குறித்து குறிப்பிட்டுள்ள பகுதியில், அதில் ஆளுநரும் அங்கம்தான் என்று சொல்லப்பட்டுள்ளது” என்றார்.

மேலும், ``அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 200-இன்படி ஆளுநருக்கு 3 விதமான வாய்ப்புகள் உள்ளன. மாநில சட்டமன்றம் ஒரு மசோதாவை நிறைவேற்றி அனுப்பினால், அது சரியாக இருந்தால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும். மசோதா சரியானது இல்லை என்றால் நிறுத்தி வைக்கலாம். நிறுத்தி வைப்பது என்றால் கிட்டத்தட்ட அந்த மசோதாவை நிராகரிப்பதாகத்தான் அர்த்தம். உச்ச நீதிமன்றம் இதை பல்வேறு தீர்ப்புகளில் உறுதிப்படுத்தி உள்ளது. இதுபோக, மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கும் முடிவையும் ஆளுநர் எடுக்கலாம்” எனக் கூறியிருக்கிறார்.
ஆளுநரின் இப்பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், “கோடிக்கணக்கான மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் சிந்தனைகளில் உருவான மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தராமல் காலம் தாழ்த்துவது அவரின் கடமையில் இருந்து தவறுவதாகும். அரசியலமைப்புச் சட்டப்படி பண மசோதாவை திருப்பியனுப்ப ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது. ஆனால் ஆன்லைன் ரம்மி மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியிருப்பது சட்ட விதிமீறல் என்பது அவருக்கு தெரியுமா?

பணமசோதாவை தவிர மற்ற மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பலாம். ஆனால் திருப்பி அனுப்பப்பட்ட மசோதாவை மீண்டும் நிறைவேற்றி அனுப்பினால் ஒப்புதல் கொடுத்துத்தான் ஆக வேண்டும். மாநில அரசின் சுருக்கெழுத்துதான் ஆளுநர் என்று 1975-ஆம் ஆண்டிலேயே உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. தன்னை கிரேட் டிக்டேட்டராக ஆளுநர் நினைத்துக்கொள்ள வேண்டாம்” என்று சாடியுள்ளார்.
மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தராமல் காலம் தாழ்த்தினால் அது நிராகரிக்கப்பட்டதாகத்தான் அர்த்தமா என்று ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரிடம் பேசினோம். ``ஆளுநர் ஒப்புதல் தராமல் நிறுத்திவைத்தால் அது நிராகரிக்கப்பட்டதாக அர்த்தம் என்று அரசியலமைப்புச் சட்டத்தின் எந்த பிரிவு கூறுகிறது என்று தெரியவில்லை. பொத்தம் பொதுவாக உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளும் இருப்பதாக கூறியிருக்கிறார்.

ஆனால் எப்படி எந்தத் தீர்ப்பும் இல்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை விட ஆளுநர்களுக்கு அதிக அதிகாரம் இல்லை என்று வேண்டுமானால் பல தீர்ப்புகளில் நீதிமன்றங்கள் சுட்டிக் காட்டியிருக்கின்றன. ஆர்.என்.ரவி கூறியதுபோல அரசியல் நிர்ணய சபை விவாதங்களில் கூட எங்கும் இல்லை. எந்தத் தீர்ப்பை முன்னுதாரணமாக வைத்து இத்தகைய கருத்தை ஆளுநர் கூறினார் என்பதை அவர்தான் விளக்க வேண்டும்” என்றார்.
எழுவர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் கையெழுத்திடாமல் காலம் தாழ்த்திய நிலையில், அதற்காக காத்திருக்கத் தேவையில்லை என உச்ச நீதிமன்றமே அவர்களை விடுதலை செய்தது. ஆனால் ஒரு மசோதாவுக்கு எத்தனை நாட்களில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என இதுவரை எந்த தீர்ப்புகளிலும் குறிப்பிடவில்லை. தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு உடனடியாக கையெழுத்து இட ஆளுநருக்கு உத்தரவிடுமாறு 2020-ஆம் ஆண்டில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. ஆளுநர் விரைவாக முடிவெடுக்க வேண்டுமென நீதிபதிகள் கேட்டு்க்கொண்டார்களே தவிர, எந்த உத்தரவையும் பிறப்பிக்காமல்தான் வழக்கை முடித்துவைத்தனர். இந்த உத்தரவுகளில் நீதிமன்றம், எப்போதும், நிலுவையில் இருக்கும் மசோதக்கள் நிராகரிக்கப்பட்டதாக அர்த்தம் என குறிப்பிடவில்லை.