ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க கூட்டணி தெளிவான முடிவெடுத்து, வேட்பாளர் அறிவித்து வேலைகள் தொடங்கியிருக்கிறது. ஆனால், எதிர் தரப்போ தங்கள் கூட்டணியில் யார் நிற்பது என்கிற முடிவுக்கு வருவதற்கே பல கட்ட ஆலோசனைகளை மேற்கொண்டுவருகிறது. எதிர் தரப்பு கூட்டணியில் ஏற்கெனவே அந்தத் தொகுதியில் நின்ற த.மா.கா-வுக்கு முன்னுரிமை அளித்திருந்தாலும் கள சூழல், இடைத்தேர்தல் ஃபார்முலா போன்றவற்றை அறிந்து பின்வாங்கியது த.மா.கா. இதையடுத்து சுமுகமாக முடிந்துவிட்டது என்று இ.பி.எஸ் தரப்பு துள்ளளுடன் வேட்பாளரை அறிவித்து வேலைகளை ஆரம்பிக்கலாம் என்றிருந்தபோது, ஓ.பி.எஸ் ஒரு கடிவாளம் போட்டு, `நானும் போட்டிக்கு வருவேன்’ என்று அறிவித்தார். அதோடு மட்டும் நில்லாமல், இ.பி.எஸ் தரப்பு அ.தி.மு.க., கூட்டணிக் கட்சிகளைச் சந்தித்து ஆதரவு கேட்டு வருவது போலவே, ஓ.பி.எஸ் தரப்பும் ஒவ்வொருவரையாகச் சந்தித்துவருகின்றனர்.
இதையடுத்து ஜனவரி 21ஆம் தேதி இ.பி.எஸ்., ஓ.பி.எஸ் ஆகிய இரு தரப்பினரும் பா.ஜ.க தலைமை அலுவலகமான கமலாலயம் சென்று மாநிலத் தலைவர் அண்ணாமலையைச் சந்தித்து தங்களுக்கு ஆதரவு கேட்டனர். ஓ.பி.எஸ் தரப்பு பாஜக போட்டியிட்டால் ஆதரவு தருவதாகவும் சொல்லியது. ஆனால், பா.ஜ.க தரப்பிலோ யாரை ஆதரப்பது என்கிற கேள்விக்கு விடை தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில், ஏற்கெனவே திட்டமிட்ட பொங்கல் நிகழ்ச்சிக்காக ஜனவரி 22-ஆம் தேதி குஜராத் புறப்பட்டுச் சென்ற ஓ.பி.எஸ், இடைத்தேர்தலுக்காக பாஜக மேலிடப் பிரமுகர்களுடன் ஆலோசனை செய்வார் என்று கூறப்பட்டது. இந்தப் பின்னணியில்தான் ஜனவரி 23-ம் தேதி எழும்பூரிலுள்ள தனியார் ஹோட்டலில் மாலை ஓ.பி.எஸ்., மாவட்டச் செயலாளர்கள், அமைப்புச் செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டத்தைக் கூட்டினார்.
ஒவ்வொருவருக்கும் ஐடி கார்டு தயாரிக்கப்பட்டு கொடுக்கப்பட்டிருந்த இந்தக் கூட்டம் மாலை ஏழு மணியளவில் தொடங்கி கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் நடந்திருக்கிறது. 87 மாவட்டச் செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் 114 பேர் என சுமார் 200 பேர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டிருக்கிறார்கள். அதிமுக-வின் மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர், மருது அழகுராஜ், புகழேந்தி உள்ளிட்டோர் மேடையில் அமர்ந்திருக்கிறார்கள்.

இந்தக் கூட்டத்தில் நடந்தவைகள் பற்றி பகிர்ந்த மூத்த நிர்வாகி ஒருவர், ``பண்ருட்டி ராமச்சந்திரன் பேசும்போது, ‘பழனிசாமி பணத்தை நம்பிக்கொண்டிருக்கிறார். அந்தப் பணம் எப்போதும் கூட வராது. தொண்டர்களின் மனசாட்சியைத் தட்டி எழுப்பவேண்டிய நேரம் வந்துவிட்டது. அதிமுக சட்ட விதிகளின்படி எம்.ஜி.ஆர் வகுத்துத் தந்த விதிகளின்படி இரட்டை இலைச் சின்னம் நமக்கே கிடைக்கும்’ என்றார்.
இதைத் தொடர்ந்து பேசிய ஓ.பி.எஸ்., ``அதிமுக-வின் தற்போதைய அதிகாரபூர்வ நிலவரப்படி சட்ட விதிகளின்படி நடந்த தேர்தல் மூலம் ஒருங்கிணைப்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். எடப்பாடி பழனிசாமி தனது இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். ஆக, நான் மட்டும்தான் தலைமை பொறுப்பில் இருக்கிறேன். எனவே, அதிமுக என்பது நாம்தான். நாம் தேர்தலில் போட்டியிடுவது உறுதி. அன்றும் சொன்னேன்... இரட்டை இலை முடங்க நான் காரணமாக இருக்க மாட்டேன். இப்போதும் அதையே சொல்கிறேன். பா.ஜ.க-வாக இருந்தாலும் சரி; வேறு எந்தக் கட்சியாக இருந்தாலும் சரி ஒருங்கிணைந்த அதிமுக-வுக்குத்தான் அவர்கள் ஆதரவு தருவார்கள். அதிமுக-வின் ஓர் அணியை மட்டுமே அவர்கள் ஆதரிக்க மாட்டார்கள். ஜான் பாண்டியன், ஏ.சி.சண்முகம் போன்றவர்கள் இந்த நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார்கள். பிளவு ஏற்படுத்த முயல்பவர்களோடு எப்படி ஒரு கூட்டணி ஏற்படுத்த முடியும்?’ என்கிற கேள்வியையும் அண்ணன் ஓ.பி.எஸ் வைத்திருக்கிறார்” என்று கூட்டத்தில் நடந்த விஷயங்களை பகிர்ந்துகொண்டவர், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தங்களின் மூவ் என்னவாக இருக்கிறது என்பது குறித்து மேலும் தொடர்ந்தார்.

``இரட்டை இலைச் சின்னம் இதுவரை உறுதிப்படுத்தாமலேயே இருக்கிறது. ஒருவேளை சின்னமில்லாமல் எடப்பாடி தரப்பினர் தேர்தலை சந்தித்தாலும் நாங்கள் சின்னம் பெற முயல்வோம். கிடைக்காத பட்சத்தில் ஏற்கெனவே ஓ.பி.எஸ் அண்ணன் சொன்னதுபோல் தேர்தல் ஆணையம் ஒதுக்கும் சின்னத்தில் போட்டியிடத் தயாராகவே இருக்கிறோம். அதோடு பா.ஜ.க தேர்தலில் நின்றால் எங்கள் ஆதரவு அவர்களுக்குக் கொடுப்போம் என்றும் அண்ணன் ஓ.பி.எஸ் சொல்லியிருப்பதும் கவனத்துக்குரியது. இந்தப் பின்னணியில்தான் இ.பி.எஸ்., தரப்பினர் ஏ.சி.சண்முகம், ஜான் பாண்டியனிடம் ஆதரவு கேட்டபோது பா.ஜ.க எடுக்கும் முடிவுக்கு எங்கள் ஆதரவு என்று சொல்லியிருக்கிறார்கள். அதேவேளையில் இப்போது இ.பி.எஸ் தரப்புக்கு அங்கு உறுதியான வேட்பாளர் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. நாங்களோ ஏ.சி.சண்முகம் மூலமாகப் பேசி அங்கு பெரும்பான்மை சமூகமாக இருக்கக்கூடிய சங்கத் தலைவர் ஒருவரை வேட்பாளராக அறிவிக்கலாம் என்கிற ஆலோசனையிலும் இருக்கிறோம். அதோடு மூத்த நடிகர் ஒருவருடனும் பேச்சுவார்த்தை நடத்திவருகிறோம். பா.ஜ.க நிற்கவில்லையென்றால் இதுதான் எங்கள் முடிவு” என்கிறார் அந்த மூத்த நிர்வாகி.
இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் ப்ரியன், “ஆறு, ஏழு மாதத்துக்கு முன்பு ஒரு கூட்டத்தில் பேசிய எடப்பாடி, ‘தேர்தலுக்கு தேர்தல்தான் கூட்டணி. நாங்கள் இப்போது கூட்டணியில் இல்லை’ என்றார் . இப்போது நாங்கள்தான் பெரிய கட்சி, அதிமுக நாங்கள்தான் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார். இந்தச் சூழலில் பா.ஜ.க-விடம் ஆதரவு கேட்கிறார். இவர் பெரிய கட்சி என்றால் பாஜக தயவு இல்லாமலேயே நிற்கலாம். சின்ன கட்சிகளிடம் ஆதரவு கேட்பது பெரிதாகத் தெரியவில்லை. ஆனால், பா.ஜ.க-விடம் ஆதரவு கேட்பதற்கும் மற்றவர்களிடம் கேட்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. பாஜக இதுவரை எடப்பாடி தலைமையிலான அதிமுக-வை அங்கீகாரம் செய்திருக்கிறோம் என்று எங்கேயும் சொல்லவில்லை. பெரிய கட்சி அதிமுக என்றுதான் அண்ணாமலை சொல்லியிருக்கிறாரே தவிர, அதில் யார் அதிமுக என்பதைத் தெளிவுபடுத்தவில்லை.

இந்த நிலையில் எடப்பாடி போட்டி போடுவதால், பன்னீரும் போட்டியிடும் கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். இதனால் அதிமுக மோதல் அடுத்த கட்டத்துக்குப் போகிறது. 2017-ல் பன்னீர் பக்கத்தில் 11 எம்.எல்.ஏ-க்கள்தான் இருந்தார்கள். அந்த நேரத்தில் தேர்தல் நடக்கவில்லை என்றாலும் எடப்பாடி, தினகரன் பக்கத்தில் நிறைய பேர் இருந்தார்கள். அப்படியிருந்தும் சின்னம் முடக்கப்பட்டது. இப்போதும் கட்சி, நிர்வாகிகள் எடப்பாடி பக்கம் இருந்தாலும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போய்க்கொண்டிருப்பதால் சின்னம் கிடைக்குமா என்பதும் சந்தேகம்.

இது ஒருபுறம் இருக்க, பா.ஜ.க நின்றால் ஓ.பி.எஸ் விலகுவதாக சொல்லியிருக்கும் நிலையில், எடப்பாடி என்ன செய்வார் என்பதும் கேள்வி வரும். இப்போது இரண்டு கோஷ்டியுமே பாஜக வழிகாட்டுதலில் இருக்கிறார்கள். அதேநேரத்தில் எடப்பாடி இதுவரை பாஜக-வைத் தூக்கிப் போடுவேன் என்று எங்கும் பேசவில்லை. மற்ற நிர்வாகிகளைத்தான் பேசவிட்டிருக்கிறார். எடப்பாடி தரப்பிலேயே பாஜக எதிர்ப்பு அணி, ஆதரவு அணி என்றிருக்கிறது. அதிமுக தொண்டர்களுக்கும் பாஜக மேலாண்மையில் இருக்க விரும்பவில்லை. இதையெல்லாம் கணித்துத்தான் ஓ.பி.எஸ் , சேஃபர் சைடாக பந்தை பாஜக பக்கம் தள்ளிவிட்டுவிட்டிருக்கிறார்.
இங்கு பாஜக-வுக்கும் சிக்கல் இருக்கத்தான் செய்கிறது. கடந்த ஓராண்டுக்காலமாக தமிழ்நாட்டில் பாஜக வளர்ந்திருப்பது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது ஒருவேளை பாஜக நின்று, எடப்பாடி இரண்டாவதாகவும், நாம் தமிழர் மூன்றாவதாகவும், பாஜக நான்காவதாக வந்தால் கடந்த ஓராண்டாகப் பேசிய இமேஜ் எல்லாம் உடைந்துபோகும். இப்போது அதிமுக-வில் இருவருக்கும் சமாதானம் என்பது முடியாத காரியம். ஏனெனில் இபிஎஸ் ரொம்ப தூரம் போய்விட்டார்.
எனவே, பாஜக இப்போது எல்லோரையும் ஒன்றுசேர்த்து வைத்துவிட்டு ஆதரவு தருவது; இருவரையும் போட்டி போட வைத்து வேடிக்கைப் பார்ப்பது; நீங்கள் இருவரும் வேண்டாம் என்னை ஆதரியுங்கள் என்று சொல்வது; நீங்களும் நில்லுங்கள், நானும் நிற்கிறேன் என்பது... என இந்த முடிவுகளோடு இருக்கிறது. பாஜக முடிவெடுக்க வேண்டிய இடத்தில் இருக்கிறது. அந்த இடமும் சிக்கலானதாக இருக்கிறது. அரசியலில் சில முடிவுகள் காலத்துக்கு, நேரத்துக்கு, அவசர, அவசியத்துக்கு எடுக்கும்போது வெற்றியையும் கொடுக்கும், தோல்வியையும் கொடுக்கும். அது என்ன என்பது பொறுத்திருந்து பார்ப்போம்” என்றார் விரிவாக.