Published:Updated:

அதானி குழுமத்துக்குச் சாதகமாக இருக்கிறதா உச்ச நீதிமன்ற நிபுணர் குழு அறிக்கை?!

அதானி

அதானி குழுமம் பங்குகளின் விலையை செயற்கையாக உயர்த்தி மோசடியில் ஈடுபட்டது என்ற குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் எதுவுமில்லை என்று உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு அறிக்கை கூறுகிறது.

Published:Updated:

அதானி குழுமத்துக்குச் சாதகமாக இருக்கிறதா உச்ச நீதிமன்ற நிபுணர் குழு அறிக்கை?!

அதானி குழுமம் பங்குகளின் விலையை செயற்கையாக உயர்த்தி மோசடியில் ஈடுபட்டது என்ற குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் எதுவுமில்லை என்று உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு அறிக்கை கூறுகிறது.

அதானி

அதானி குழுமம் குறித்து ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கை நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கார்ப்பரேட் வரலாற்றிலேயே நடந்திராத மிகப்பெரிய மோசடியில் அதானி குழுமம் ஈடுபட்டதாக ஹிண்டன்பர்க் குற்றச்சசாட்டியது.

‘அதானி குழும நிறுவனப் பங்குகளில் அதானி குடும்பத்தினர்தான் அதிக அளவிலான பங்குகளை வைத்திருக்கின்றனர்... அதானி நிறுவனங்களில் எஃப்.ஐ.ஐ (வெளிநாட்டு முதலீடு) மூலமாக வெளியிலிருந்து செய்யப்பட்ட முதலீடுகள் அதானி குடும்பத்தினருக்குச் சொந்தமான மோசடி நிறுவனங்கள் மூலமாகவே செய்யப்பட்டிருக்கின்றன... அதானி நிறுவனங்களின் பங்கு மதிப்பு, அந்த நிறுவனங்களின் தொழிலுக்குச் சற்றும் தொடர்பில்லாத அளவில் இருக்கிறது’ என்று ஹிண்டன்பர்க் அறிக்கையில் குற்றச்சாட்டுகள் அடுக்கப்பட்டன.

அதானி - ஹிண்டன்பர்க்
அதானி - ஹிண்டன்பர்க்

‘போலி நிறுவனங்கள் மூலமாக முதலீடு செய்து செயற்கையாக தமது பங்குகளின் விலைகளை உயர்த்தி, பங்குச்சந்தையில் மோசடி செய்திருக்கின்றனர்... அதானி குழும நிறுவனங்கள் பெற்றிருக்கும் கடன்கள், சராசரி கடன் அளவைவிடக் கூடுதலாக இருக்கின்றன... இந்தக் கடன்களைத் திரும்பச் செலுத்தும் திறன் அந்த நிறுவனங்களுக்கு இல்லை’ என்றும் குற்றச்சாட்டுகளை ஹிண்டன்பர்க் முன்வைத்தது. உலகின் மூன்றாவது பெரிய பணக்காரராக இருந்த கௌதம் அதானி, ஹிண்டர்பர்க் அறிக்கை காரணமாக வீழ்ச்சியைச் சந்தித்தார். அதானி குழுமப் பங்குககள் கடும் சரிவைச் சந்தித்தன.

இந்த விவகாரம் இந்திய அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியது. காரணம், 2014-ல் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு மத்தியில் அதிகாரத்துக்கு வந்த பிறகுதான் அதானியின் சொத்து மதிப்பு பெருமளவுக்கு உயர்ந்தது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. பிரதமரின் சொந்த மாநிலமான குஜராத்தைச் சேர்ந்தவர்தான் கௌதம் அதானி. எனவே, அதானிக்கும் பிரதமர் மோடிக்கும் இடையிலான நெருக்கத்தைப் பயன்படுத்தி, அதானி தனது தொழில் சாம்ராஜ்ஜியத்தை விரிவுபடுத்தினார் என்பதும் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு.

அதானி
அதானி

இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்... நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இதற்காக, நாடாளுமன்றத்தில் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் பல நாட்களாகப் போராடின. தொழிலதிபர் கௌதம் அதானிக்கும் பிரதமர் மோடிக்கும் இடையிலான தொடர்பு குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். ஆனால், மத்திய அரசு எதற்கும் அசைந்துகொடுக்கவில்லை.

நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு ஆளும் தரப்பு தயாராக இல்லை. இந்த விவகாரம் குறித்த விவாதத்துக்கும் ஆளும் தரப்பு மறுத்துவிட்டது. இந்த நிலையில், அதானி நிறுவனம் குறித்து ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கை பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்களை வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக விசாரிப்பதற்கு உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.எம்.சப்ரே தலைமையில் குழுவை அமைத்தது. அந்தக் குழு தனது முதற்கட்ட ஆய்வறிக்கையை சீலிடப்பட்ட உறையில் வைத்து உச்ச நீதிமன்றத்தில் மே 8-ம் தேதி சமர்ப்பித்தது. நிபுணர் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டிருக்கும் விவரங்களை உச்ச நீதிமன்றம் மே 19-ம் தேதி வெளியிட்டது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

அதானி குழும நிறுவனங்கள் பங்குச்சந்தையில் மோசடிகள் செய்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை. அதானி நிறுவனம் எந்த விதிமுறைகளையும் மீறவில்லை” என்று அதானி குழுமத்துக்கு நற்சான்றிதழ் அளித்திருக்கிறது உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு.

“இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியம் (செபி) இன்னும் தனது அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை. ஆனாலும், 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து அதானியுடன் தொடர்புடைய 13 ரகசிய வெளிநாட்டு நிறுவனங்களின் உரிமையை செபி விசாரித்து வருகிறது” என்றும் நிபுணர் குழு தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.

நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரித்தால் மட்டுமே இந்த விவகாரத்தில் உண்மைகள் வெளிவரும் என்பது எதிர்க்கட்சிகளின் வாதம். ஏனென்றால், நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் எதிர்க்கட்சியினர் உட்பட அனைத்து கட்சிகளின் எம்.பி-க்களும் இடம்பெறுவார்கள். ஆகவேதான், நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணையை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தின. ஆனால், உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் விசாரணையே போதுமானது என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் கூறிவந்தார். இந்த நிலையில்தான், கடந்த மாதம் மும்பையிலுள்ள சரத் பவார் வீட்டுக்குச் சென்று, அவரைச் சந்தித்தார் கௌதம் அதானி. அப்போது, ஹிண்டன்பர்க் அறிக்கை விவகாரத்தில் சரத் பவாரின் நிலைப்பாடு குறித்து கேள்வி எழுப்பியவர்கள், சரத் பவார் - கௌதம் அதானி சந்திப்பைச் சந்தேகக் கண்ணுடன் பார்த்தனர்.

அதானி - பிரதமர் மோடி
அதானி - பிரதமர் மோடி

மோடியும் அதானியும் ஒரே விமானத்தில் வெளிநாட்டுக்கு பயணம் செய்த புகைப்படத்தை நாடாளுமன்றத்தில் காண்பித்தார் ராகுல் காந்தி. அப்போது, எத்தனை முறை மோடியுடன் அதானி வெளிநாடுகளுக்குச் சென்றிருக்கிறார் என்பது போன்ற கேள்விகளை அவர் எழுப்பினார். ஆனால், எந்தக் கேள்விக்கும் ஆளும் தரப்பிலிருந்து பதில் தரப்படவில்லை. குறிப்பாக, அதானி குழுமம்மீதான குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் மோடியிடமிருந்து எந்த பதிலும் இல்லை.

தற்போது, அதானி குழும நிறுவனங்கள் பங்குச்சந்தையில் மோசடி செய்ததற்கான ஆதாரங்கள் இல்லை என்று நிபுணர் குழு கூறியிருக்கிறது. ஆனால், ஹிண்டன்பர்க் அறிக்கையில் எழுப்பப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் நிபுணர் குழு அறிக்கையில் முழுமையான விளக்கமோ, பதில்களோ தரப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றம் அடுத்து எப்படி அணுகப்போகிறது என்பதும் தெரியவில்லை.