தூத்துக்குடியில் சமுத்ரா ஃபேமிலி ரெஸ்டாரன்ட் என்ற தனியார் ஹோட்டல், நான்கு கிளைகளுடன் இயங்கிவருகிறது. இதில், ஜார்ஜ் ரோட்டிலுள்ள கிளையில் ஷவர்மா தயார் செய்வதற்காக சிக்கனை வேகவைத்திருக்கின்றனர். போதிய ஊழியர்கள் இல்லாமல் அந்தக் கிளை இயங்கிவந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், அந்த வழியாகச் சென்ற தெரு நாய் ஆசையாக சிக்கனைக் கடித்து ருசிபார்த்து சாப்பிட்டிருக்கிறது.

தொடர்ந்து அருகிலிருந்த சமையல் பாத்திரங்களையும் நக்கியிருக்கிறது. இந்த அதிர்ச்சி வீடியோ வைரலானது. இதையடுத்து அந்தப் பகுதியினர் உணவுப் பாதுகாப்புத்துறையின் புகார் எண்ணுக்கு தெரிவித்திருக்கின்றனர். இதையடுத்து, உணவுப் பாதுகாப்புத்துறையின் மாவட்ட நியமன அலுவலர் மாரியப்பனின் உத்தரவின் பேரில், உணவுப் பாதுகாப்பு அலுவலர் சிவக்குமாரால் மூடி சீல் இடப்பட்டது.
இது குறித்து உணவுப் பாதுகாப்புத்துறையின் மாவட்ட நியமன அலுவலர் மாரியப்பனிடம் பேசினோம், ``தூத்துக்குடி மாநகராட்சியின் ஜார்ஜ் ரோட்டிலுள்ள சமுத்ரா ஃபேமிலி ரெஸ்டாரன்ட்டில் ஷவர்மா அடுப்பிலிருந்த சிக்கனையும், மற்ற உபகரணங்களையும் நாய் ஒன்று அசுத்தப்படுத்தியதாகப் புகார் வரப்பெற்றது. உடனடியாக அந்த உணவகத்தை ஆய்வுசெய்ததில், 7 கிலோ பழைய சிக்கன் உள்ளிட்ட கெட்டுப்போன உணவுப் பொருள்கள் 15 கிலோ பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.

மேலும், உணவகத்திலிருந்த பொது சுகாதார குறைபாட்டிற்காகவும், கால்நடைகள் அணுகும் வகையில் சமையல் உபகரணங்களையும், உணவுப் பொருள்களையும் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்ததாலும், உரிம நிபந்தனைகளை மீறியிருந்ததாலும், அந்த உணவகத்தின் உணவு பாதுகாப்பு உரிமத்தை தற்காலிகமாக இடைக்கால ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
தொடர் விசாரணைக்காக உணவகத்தை மூடி முத்திரையிடப்பட்டிருக்கிறது. நுகர்வோர் உண்ணக்கூடிய உணவுப் பொருட்களைத் தெரு நாய் அசுத்தப்படுத்திய விவகாரம் குறித்து தொடர் விசாரணை நடத்தி, உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். உணவகங்கள் சுகாதாரத்தைப் பேணி, பொதுமக்களுக்கு சுகாதாரமான, பாதுகாப்பான உணவை வழங்க உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால், உணவுப் பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம், 2006-ன்கீழ் உணவகத்தின் இயக்கத்தை நிறுத்துதல் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

மேலும், நுகர்வோர்கள் உணவகங்களில் உணவுப் பாதுகாப்பு குறைபாடுகள் எவற்றையேனும் கண்டறிந்தால், மாநில உணவு பாதுகாப்பு ஆணையர் அலுவலகத்துக்குப் புகாரளித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.