Published:Updated:

`பிரதமர் அதிருப்தியில் இருக்கிறார்; அவப்பெயர் ஏற்படுத்தாதீங்க!' - கட்சியினருக்கு பி.ஜே.பி கண்டிப்பு

ஜெ.பிரகாஷ்

பா.ஜ.க எம்.பி களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக பிரதமர் மோடி பேசியுள்ளார்!

மோடி
மோடி

நடந்துமுடிந்த 17-வது நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி. தனிப் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைத்தது. நரேந்திர மோடியே மீண்டும் பிரதமரானார். இந்த முறை அவருடைய அமைச்சரவையில் புதிய எம்.பி-க்கள் பலர் அமைச்சராகினர். குறிப்பாக பி.ஜே.பி. தேசியத் தலைவர் அமித் ஷா மத்திய உள்துறை அமைச்சரானார்.

மோடி
மோடி

இந்த நிலையில், நாடாளுமன்றத் தொடர் கடந்த மாதம் 17-ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்றுவரும் சூழலில், கடந்த 25-ம் தேதி பி.ஜே.பி. எம்.பி-க்களின் கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், ராஜ்ய சபா எம்.பி. மதன்லால் சைனி காலமானதையடுத்து, இன்று அந்தக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பி.ஜே.பி. செயல் தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். கூட்டத்தில், தேர்தலின் வெற்றிக்குப் பாடுபட்ட அமித் ஷாவுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பின்னர், நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் எம்.பி-க்கள் நடந்துகொள்ள வேண்டிய அம்சங்கள் குறித்துப் பேசப்பட்டது. கூட்டத்துக்குப் பின்னர் பேசிய அக்கட்சியின் எம்.பி. ராஜிவ் பிரதாப் ரூடி, "பிரதமர் மோடி அதிருப்தியில் இருக்கிறார்.

பி.ஜே.பி. எம்.எல்.ஏ.
பி.ஜே.பி. எம்.எல்.ஏ.

கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்துவது, தவறாக நடந்துகொள்வது, அநாகரிகமானச் செயல்களில் ஈடுபடுவது போன்ற செயல்களில் கட்சியினர் யாரும் ஈடுபட முடியாது. யாருக்கும் உரிமையில்லை. இதுபோன்ற செயல்களை ஏற்றுக்கொள்ள முடியாது. கட்சி எம்.பி.-க்கள் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தவறாமல் பங்கேற்க வேண்டும். விவாதங்களில் பங்கேற்பதுடன் தங்களது கருத்துகளையும் எடுத்துரைக்க வேண்டும்" என்றார்.

பி.ஜே.பி-யினர் அநாகரிகச் செயல்களில் ஈடுபடுவதாக அவ்வப்போது கட்சித் தலைமைக்குச் செய்திகள் சென்றவண்ணம் உள்ளது. குறிப்பாக, சமீபத்தில் பி.ஜே.பி. தேசியப் பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய் வர்க்கியாவின் மகனும், மத்தியப் பிரதேச பி.ஜே.பி. எம்.எல்.ஏ-வுமான ஆகாஷ் விஜய் வர்க்கியா, மாநகராட்சி ஊழியர் ஒருவரை கிரிக்கெட் பேட்டால் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்தே, இந்தக் கூட்டத்தில் கட்சியினருக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.