Published:Updated:

`ராகுலுக்கு நெருக்கடி கொடுக்காதீங்க!'- காங்கிரஸ் மூத்த தலைவர்கள்

ராகுல் காந்தி ராஜினாமா கடிதம் அளித்து ஒரு மாதங்கள் முடிவடைந்துள்ள நிலையில் சில மூத்த தலைவர்களின் மனநிலையில் மட்டும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை உடனடியாக நியமிக்க வேண்டும் என்ற கருத்துகள் காங்கிரஸின் மூத்த தலைவர்களிடமிருந்து கேட்க ஆரம்பித்துள்ளன.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

ராகுல் காந்தி தலைமையில் பெரும் எதிர்பார்ப்புகளுடன் தேர்தலை எதிர்கொண்டது காங்கிரஸ். ஆனால் கடந்த தேர்தலைப் போல மீண்டும் எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூடப் பெற முடியாத நிலை தான் நீடித்தது. இந்நிலையில் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார் ராகுல் காந்தி. அந்த அறிவிப்பு வெளியான தருவாயிலிருந்து பல முக்கிய தலைவர்களும் ராகுல் காந்தி இந்த முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என வற்புறுத்தி வந்தனர். ஆனாலும் இதுவரை ராகுலின் முடிவில் மாற்றமில்லை.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

அதேவேளையில் ராகுல் காந்தி ராஜினாமா கடிதம் அளித்து ஒரு மாதம் முடிவடைந்துள்ள நிலையில் சில மூத்த தலைவர்களின் மனநிலையில் மட்டும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை உடனடியாக நியமிக்க வேண்டும் என்றக் கருத்துகள் காங்கிரஸின் மூத்த தலைவர்களிடமிருந்து கேட்க ஆரம்பித்துள்ளன.

இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான கரண் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``ராகுல் காந்தி நேர்மையானவர். தன்னால் முடிந்த வரை காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்காக உழைத்தார். தோல்விக்குப் பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், இனியும் காங்கிரஸார் மீண்டும் ராகுல் காந்தியை தலைமைப் பதவியை ஏற்குமாறு நெருக்கடியைக் கொடுக்க கூடாது. ஏற்கெனவே ஒரு மாத காலம் முடிவடைந்துவிட்டது. இனியும் தாமதிக்காமல் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் காரியக் கமிட்டி கூடி புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பது தொடர்பாக விவாதங்களை முன்னெடுக்க வேண்டும்.

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமை குறித்தான முறைசாரக் கலந்துரையாடல்களைவிட, அதிகாரபூர்வமான அறிவிப்புகள் அவசியம்
ஜனார்த்தன் திரிவேதி

அந்தக் கூட்டத்தின் வாயிலாக புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் வரை கட்சிக்கு இடைக்காலத் தலைவரையும், நான்கு செயல் தலைவர்களை இந்தியாவின் கிழக்கு, வடக்கு, மேற்கு, தெற்கு என நான்கு திசைகளில் இருந்தும் தேர்ந்தெடுக்க வேண்டும். இதன் மூலம் புதிய தலைவர்களைக் கட்சி உருவாக்க முடியும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் ஜனார்த்தன் திரிவேதி , ``காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமை குறித்தான முறைசாரா கலந்துரையாடல்களைவிட, அதிகாரபூர்வமான அறிவிப்புகள் அவசியம். ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை முடிவு செய்ய குழு ஒன்றை நியமித்து கட்சியின் தலைவர்களுடனும், தொண்டர்களுடனும் உரையாடல் நடத்த வேண்டும். ஏனெனில் தொழில்நுட்ப ரீதியாக ராகுல் காந்தி தான் அதிகாரபூர்வமான தலைவராக உள்ளார்” என்றார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி
விகடன்

மூத்த நிர்வாகிகள் காங்கிரஸ் கட்சிக்கு அடுத்து இளந்தலைவர்களைக் கொண்டு வர வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும் அக்கட்சியின் இளம் தலைவர்களில் ஒருவருமான ஜோதிராதித்தியா சிந்தியா தன்னுடையப் பதவியை கடந்த ஞாயிற்றுக் கிழமை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.