Published:Updated:

`யாருக்கும் பயம் இல்லை; நெருப்புடன் விளையாடாதீர்கள்!’ - மேற்குவங்கத்தில் எச்சரித்த மம்தா

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிராகப் போராடும் மாணவர்களை பா.ஜ.க-வினர் மிரட்டுகிறார்கள் என மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.

குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை எதிர்த்துப் போராடும் முதன்மை மாநிலங்களில் மேற்குவங்கமும் ஒன்று. நாடாளுமன்றத்தில் குடியுரிமை மசோதா நிறைவேற்றப்பட்டதிலிருந்து இங்கு தொடர் போராட்டங்கள் நடந்துவருகின்றன. மேற்குவங்கத்தில் மக்கள், மாணவர்களுடன் இணைந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் முதல்வர் மம்தா பானர்ஜியும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

தான் இறக்கும்வரை மேற்குவங்கத்தில் குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை அனுமதிக்கப்போவதில்லை எனச் சூளுரை எடுத்துள்ளார் மம்தா. இந்தச் சட்டத்தை எதிர்த்து இதுவரை 5-க்கும் மேற்பட்ட பிரமாண்ட பேரணிகளை நடத்தியுள்ளார். அதன் வரிசையில் இன்றும் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக மம்தா பானர்ஜி கலந்துகொண்ட பேரணி நடைபெற்றது. கொல்கத்தாவின் ராஜா பஜார் பகுதியிலிருந்து முக்கில் பஜார் பகுதி வரை பேரணி நடந்தது.

`என் சடலத்தின்மீது அமல்படுத்துங்கள் உங்கள் சட்டத்தை..!’ - மம்தா பானர்ஜி ஆவேசம்

அப்போது பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, ``கர்நாடகாவில் குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்துப் போராடியவர்களில் சிலர் போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியாகியுள்ளனர். ஆனால், அம்மாநில முதல்வர் எடியூரப்பா, போராட்டத்தில் இறந்தவர்கள் வன்முறையில் ஈடுபட்டது உறுதியானால் அவர்களின் குடும்பத்துக்கு ஒரு ரூபாய்கூட அரசு சார்பில் வழங்கப்படாது எனத் தெரிவித்துள்ளார். இது கண்டனத்துக்குரிய செயல்.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராகப் போராடும் மாணவர்களை பா.ஜ.க-வினர் மிரட்டுகிறார்கள். போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களுக்கு நான் எப்போதும் துணையாகவும் ஆதரவாகவும் இருப்பேன். யாருக்காகவும் மாணவர்கள் அஞ்சக் கூடாது. குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்துப் போராடும் எங்கள் மீது கறுப்புச் சாயம் பூசிவிட்டு தங்கள் கட்சி மீது மட்டும் வெள்ளைச் சாயத்தைப் பூசி தங்களைத் தாங்களே பெருமைப்படுத்திக்கொள்கிறது ஆளும் பா.ஜ.க அரசு.

மாணவர்கள் 18 வயதுக்கு மேல் ஆகிவிட்டால் அவர்கள் வாக்களிக்கும் உரிமை பெறுகிறார்கள். அப்படி வாக்குரிமை பெற்றவர்கள் போராட்டம் நடத்தினால் பெரும் பாதிப்பு ஏற்படும். பா.ஜ.க-வுக்கு நான் எச்சரிக்கை விடுக்கிறேன். நெருப்புடன் விளையாடாதீர்கள். எனக்கு யாரைக் கண்டும் பயம் இல்லை, மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைச் சட்டத் திருத்தத்தைத் திரும்பப் பெறும்வரை அமைதியான முறையில் எங்கள் போராட்டம் தொடரும்” எனத் தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு