Published:Updated:

`காஷ்மீர் விவகாரத்தை ராஜதந்திரத்தோடு கையாண்டிருக்கிறார்கள்!' - ரஜினி

கலிலுல்லா.ச

``தயவுசெய்து நமது அரசியல்வாதிகள் எதை அரசியல் ஆக்க வேண்டும் எனப் புரிந்துகொள்ள வேண்டும். இது நாட்டின் பாதுகாப்பு பிரச்னை"

ரஜினி
ரஜினி

குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடு எழுதிய `கவனித்தல் கற்றல் வழிநடத்துதல்' என்ற புத்தக வெளியீட்டு விழாவில், அமித் ஷாவைப் பகிரங்கமாகப் பாராட்டிப் பேசிய ரஜினிகாந்த், ``உங்களின் மிஷன் காஷ்மீர் ஆபரேஷன் நடவடிக்கையை மனதார பாராட்டுகிறேன். இதுகுறித்து நீங்கள் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை மிகச்சிறப்பு. அமித் ஷா யார் என்பதை மக்கள் இப்போது உணர்ந்திருப்பார்கள். அதுகுறித்து நான் மிகவும் சந்தோஷம் அடைகிறேன். மோடியும் அமித் ஷாவும் கிருஷ்ணன்-அர்ஜுனன் போன்று இருக்கிறார்கள். இதில் யார் கிருஷ்ணன், யார் அர்ஜுனன் என்பது அவர்களுக்கு மட்டும்தான் தெரியும்’’ என்றார்.

அமித்ஷா - ரஜினி
அமித்ஷா - ரஜினி

இந்த நிலையில், சென்னை போயஸ்கார்டனில் உள்ள தனது வீட்டில் ரஜினி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``தமிழ்ப் படங்களுக்கு தேசிய விருது கிடைக்காதது வருத்தமளிக்கிறது. காஷ்மீர் பிரச்னையை மோடி - அமித் ஷா ஆகியோர் ராஜதந்திரத்துடன் கையாண்டிருக்கின்றனர். கிருஷ்ணன் - அர்ஜூனன் என்றால், ஒருவர் பிளான் போடுபவர் மற்றொருவர் அதைச் செயல்படுத்துபவர்.

காஷ்மீர் மிகப்பெரிய விஷயம்; அது நம் நாட்டின் பாதுகாப்போடு தொடர்புடைய விஷயம். அந்த காஷ்மீர் தீவிரவாதிகளுக்கும் ஒரு தாய் வீடாக இருந்துகொண்டிருக்கிறது. அவர்கள் எல்லாரும் இந்தியாவில் ஊடுருவ அது, ஒரு நுழைவு வாயிலாக இருக்கிறது. அதை நம் கைப்பிடியில் கொண்டுவர வேண்டும் என்பதற்காக ராஜதந்திரத்துடன், முதலில் 144 தடை உத்தரவு போட்டு, பிரச்னை செய்பவர்களை வீட்டுக்காவலில் வைத்து, என்ன செய்யப்போகிறார்கள் என்று சொல்லாமல், பெரும்பான்மை இல்லாத ராஜ்யசபாவில் சட்டத்தைக் கொண்டுவந்து அமல்படுத்தினர்.

ரஜினி - மோடி
ரஜினி - மோடி

இது அருமையான ராஜதந்திரம். தயவுசெய்து நமது அரசியல்வாதிகள் எதை அரசியல் ஆக்க வேண்டும் என புரிந்துகொள்ள வேண்டும். இது நாட்டின் பாதுகாப்பு பிரச்னை” என்றார். அவரிடம், சித்திரை 1-ம் தேதி கட்சியின் அறிவிப்பு வரும் என்று கூறியிருந்தீர்கள் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த ரஜினி,``கட்சி அறிவிப்பு குறித்து நான் சொல்கிறேன்” என்றார். தொடர்ந்து தமிழகத்தின் அரசியல் மையமாக மீண்டும் போயஸ்கார்டன் இருக்குமா என கேட்டதற்கு,``காத்திருந்து பாருங்கள்” என்பதோடு முடித்துக்கொண்டார்.