Published:Updated:

'303 உறுப்பினர்களே... ஜெனரல் டயரின் துப்பாக்கி எண் தெரியுமா?' - ஆர்.டி.ஐ.க்காக வாதாடிய கார்த்தி சிதம்பரம்

அ.சையது அபுதாஹிர்

303 நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை வைத்தே காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் பி.ஜே.பி கொண்டுவந்த அரசியல் சட்டத்திருத்த மசோதாவைச் சாடினார்

கார்த்தி சிதம்பரம்
கார்த்தி சிதம்பரம் ( விகடன் )

சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், முதல்முறையாக நாடாளுமன்றத்துக்குள் காலடி எடுத்து வைத்திருக்கிறார். இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் தன்னுடைய கன்னிப்பேச்சைத் தொடங்கிய கார்த்தி சிதம்பரம், “ஜான்சி ராணியை முன்னிறுத்தும் இந்தியாவில் அதற்கு முன்பாகவே சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற வேலுநாச்சியார் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளார். கீழடி ஆய்வில் மதச்சார்பான எந்தத் துருப்பும் கிடைக்காமல் போனதாலேயே மத்திய அரசு இந்த ஆய்வில் ஆர்வம் காட்டவில்லை” என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

இந்நிலையில், மத்திய அரசு தகவல் உரிமைச் சட்டத்தில் சில திருத்தங்களைக் கொண்டுவந்துள்ளது. இந்த மசோதாவின்படி, மத்திய மற்றும் மாநில, மனித தகவல் ஆணையர் பதவிக்காலம், ஐந்து ஆண்டுகள் என்பதில் இருந்து, மூன்று ஆண்டுகளாகக் குறைக்கவும், ஊதியம் உள்ளிட்ட விஷயங்களை முடிவுசெய்வது மத்திய அரசின் வசம் ஒப்படைக்கவும் இந்தச் சட்டத்திருத்தம் வழிவகை செய்கிறது. இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. குறிப்பாக காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட கட்சிகள், ``தகவல் உரிமைச் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் வேலையை மத்திய அரசு செய்ய ஆரம்பித்துள்ளது“ என்று குற்றம்சாட்டின.

இந்த மசோதா மீது காங்கிரஸ் கட்சியின் சார்பில் சசிதரூர் மற்றும் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் பேசினார்கள். சசிதரூர் பேசியபோது, ``தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பலவீனப்படுத்தும் மற்றும் சி.ஐ.சி மற்றும் தகவல் ஆணையர்களின் சுதந்திரத்தைச் சீர்குலைப்பதற்கு வேண்டுமென்றே மத்திய அரசு முயற்சி செய்கிறது. அதற்காகவே இந்த மசோதாவைக் கொண்டுவந்துள்ளனர்” என்று குற்றம்சாட்டினார்.

கார்த்தி சிதம்பரம்
கார்த்தி சிதம்பரம்

கார்த்தி சிதம்பரம் பேசியபோது, “இந்த அவையில் உள்ள பி.ஜே.பி உறுப்பினர்கள் எண்ணிக்கை 303. இந்தப் பலத்தைக் கொண்டுதான் இந்த மசோதாவைக் கொண்டுவருகிறீர்கள். இந்த அவையில் பி.ஜே.பி உறுப்பினர்களில் பலர் சட்டம் படித்தவர்கள். அவர்களிடம் ஒன்று கேட்கிறேன். 'இந்திய அரசியல் சட்டப்பிரிவில் 303 சட்டப்பிரிவு எதைக் குறிப்பிடுகிறது'? மரண தண்டனையைக் குறிப்பிடுகிறது. பி.ஜே.பி அரசு தகவல் உரிமைச் சட்டத்தில் இந்த 303 உறுப்பினர்களைக் கொண்டு இந்த நல்ல சட்டத்துக்கு மரண தண்டனை கொடுக்காது என்று நம்புகிறேன்.

அதேபோல் இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் ஜாலியன் வாலாபாக் படுகொலை மிகக்கொடூரமானது. நூற்றுக்கணக்கான மக்கள் மாண்ட அந்த நிகழ்வில், ஆங்கில அதிகாரி ஜெனரல் டயர் பயன்படுத்திய துப்பாக்கியின் எண் 303. எனவே, பி.ஜே.பி இந்த 303 எம்.பி-க்களை வைத்து இந்தத் தகவல் உரிமைச் சட்டத்தைப் படுகொலை செய்யாது என்று நம்புகிறேன்” என்று பேசி முடித்தார்.

கார்த்தி சிதம்பரம்
கார்த்தி சிதம்பரம்

கார்த்தியின் இந்தப் பேச்சுக்கு மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தனது பதில் உரையில் பாராட்டு தெரிவித்தது, காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.